படிப்பு 45
படிப்பினையூட்டும் உவமைகள்/உதாரணங்கள்
உவமைகளும் உதாரணங்களும் வலிமைமிக்க போதனா கருவிகள். அவை மனதைக் கவர்ந்து, மிகவும் திறம்பட்ட விதத்தில் கவனத்தை ஈர்க்கின்றன. அவை சிந்தையைத் தூண்டுகின்றன. அவை உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, மனசாட்சியையும் இருதயத்தையும் எட்டுகின்றன. சிலசமயங்களில், தப்பெண்ணத்தைக் களைந்தெறியவும் உவமைகளைப் பயன்படுத்தலாம். அவை விஷயத்தை நினைவில் பதிய வைப்பதற்கும் உதவுகிற ஒரு சிறந்த கருவியாக இருக்கின்றன. நீங்கள் போதிக்கையில் அவற்றை பயன்படுத்துகிறீர்களா?
அணிகள் (Figures of speech) என்பது பொதுவாக சில வார்த்தைகளே தேவைப்படும் உவமைகளாகும். என்றாலும், அவற்றால் தத்ரூபமான காட்சிகளை மனதில் உருவாக்க முடியும். அவற்றை கவனமாக தேர்ந்தெடுக்கும்போது அர்த்தம் பளிச்சென புலப்படுகிறது. ஆனால் போதிப்பவர் சுருக்கமான விளக்கத்தின் வாயிலாக அதற்கு வலிமை சேர்க்கலாம். பைபிளில் உதாரணங்கள் மலிந்து கிடக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் பயனடையலாம்.
ஒப்புமைகள், உருவகங்களுடன் ஆரம்பியுங்கள். ஒப்புமைகள் (Similes) என்பது எளிய அணிகள். இப்பொழுதுதான் நீங்கள் உவமைகளைப் பயன்படுத்த பழகுகிறீர்களென்றால், இவற்றை ஆரம்பிப்பது பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக, “போல” அல்லது “மாதிரி” என்ற வார்த்தைகளை இவை பயன்படுத்துகின்றன. முற்றிலும் மாறுபட்ட இரண்டு விஷயங்களை ஒப்பிடுகையில், இவற்றில் பொதுவாகக் காணப்படும் ஒன்றை ஒப்புமைகள் சிறப்பித்துக் காட்டுகின்றன. பைபிளில் அணிகள் ஏராளமாக இருக்கின்றன; தாவரங்கள், விலங்குகள், வான் கோள்கள் போன்ற படைப்புகளையும் மனித அனுபவங்களையும் பைபிள் பயன்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிக்கும் ஒருவர் ‘நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, . . . தன் காலத்தில் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருக்கிறார்’ என சங்கீதம் 1:3 கூறுகிறது. துன்மார்க்கனோ இரையை பிடிப்பதற்கு பதுங்கியிருக்கிற “சிங்கத்தைப் போல” இருக்கிறான் என்று சொல்கிறது. (சங். 10:9) ஆபிரகாமின் சந்ததி எண்ணிக்கையில் “வானத்து நட்சத்திரங்களைப் போலவும்” “கடற்கரை மணலைப் போலவும்” பெருகும் என யெகோவா வாக்குறுதி அளித்தார். (ஆதி. 22:17) இஸ்ரவேல் தேசத்தினர் தம்மோடு நெருங்கிய உறவை அனுபவிப்பதற்கு தாம் வாய்ப்பளித்ததைப் பற்றி யெகோவா குறிப்பிடுகையில், “கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பது போல” இஸ்ரவேலும் யூதாவும் தம்மை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும்படி செய்ததாக கூறினார்.—எரே. 13:11, பொ.மொ.
உருவகங்களும் (Metaphors) இரண்டு மாறுபட்ட காரியங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சிறப்பித்துக் காட்டுகின்றன. ஆனால் உருவகம் அதிக வலிமை மிக்கது. ஒன்று மற்றொன்றே என்பது போல அது பேசுகிறது, இவ்வாறு ஒன்றின் பண்பை ஓரளவு மற்றொன்றிற்கு தருகிறது. இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” (மத். 5:14) கட்டுப்படுத்தப்படாத பேச்சால் உண்டாகும் பாதிப்பை விவரிக்கையில், சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நாவும் நெருப்புத்தான்.” (யாக். 3:6) யெகோவாவிடம் தாவீது இவ்வாறு பாடினார்: “என் கன்மலையும் என் கோட்டையும் நீரே.” (சங். 31:3) சிறந்த உருவகத்திற்கு பொதுவாக சிறு விளக்கமே போதுமானது அல்லது விளக்கமே தேவையில்லை. அது சுருக்கமாக இருப்பதே அதற்கு வலிமை சேர்க்கிறது. ஓர் எளிய கூற்றின் வாயிலாக சொல்லப்படும் விஷயத்தைவிட ஓர் உருவகத்தின் வாயிலாக சொல்லப்படும் விஷயமே சபையாரின் நினைவில் நிற்கும்.
உயர்வுநவிற்சி (Hyperbole) என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவதாகும், அதை விவேகமாக பயன்படுத்த வேண்டும் அல்லது அது தவறாக புரிந்துகொள்ளப்படும். இயேசு பின்வருமாறு கேட்டபோது மறக்க முடியாத ஒரு விஷயத்தை சித்தரிப்பதற்கு இந்த அணியை பயன்படுத்தினார்: “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?” (மத். 7:3) இந்த அணி நடையையோ அல்லது வேறு அணி நடையையோ நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு, ஒப்புமையையும் உருவகத்தையும் திறம்பட உபயோகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
உதாரணங்களைப் பயன்படுத்துங்கள். ஓர் அணி நடையை பயன்படுத்துவதற்குப் பதிலாக, போதிப்பதற்கு நீங்கள் உதாரணங்களைப் பயன்படுத்த விரும்பலாம், அவை கற்பனை கதைகளாக இருக்கலாம், அல்லது நிஜவாழ்க்கை அனுபவங்களாக இருக்கலாம். உதாரணங்களை மிதமீறி உபயோகிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவற்றை விவேகமாக பயன்படுத்த வேண்டும். சொல்லப்போனால், முக்கிய குறிப்புகளை ஆதரிப்பதற்கு மட்டுமே இப்படிப்பட்ட உதாரணங்களைப் பயன்படுத்த வேண்டும். வெறுமனே கதை அல்ல, ஆனால் நீங்கள் போதிக்கும் குறிப்பு நினைவில் நிற்கும் விதத்தில் அதை சொல்ல வேண்டும்.
எல்லா உதாரணங்களுமே உண்மையில் நடந்த சம்பவங்களாக இருக்க வேண்டியதில்லை என்றாலும் அவை நிஜவாழ்க்கை மனப்பான்மைகளை அல்லது சூழ்நிலைகளை சித்தரிக்க வேண்டும். மனந்திரும்புகிற பாவிகளை எப்படி கருத வேண்டும் என்பதை கற்பிக்கும்போது, காணாமற்போன ஆட்டை கண்டுபிடித்த மனிதன் அடைந்த சந்தோஷத்தைப் பற்றி சொல்லி இயேசு தமது குறிப்பை விளக்கினார். (லூக். 15:1-7) அயலானை நேசிப்பதைக் குறித்த நியாயப்பிரமாண கட்டளையின் முழுக் கருத்தைப் புரிந்துகொள்ள தவறிய ஒருவனுக்கு இயேசு பதிலளித்தபோது, காயம்பட்ட ஒரு மனிதனுக்கு ஆசாரியனும் லேவியனும் செய்யத் தவறிய உதவியை ஒரு சமாரியன் செய்ததைப் பற்றிய கதையை விவரித்தார். (லூக். 10:30-37) மக்களுடைய மனப்பான்மைகளையும் செயல்களையும் நீங்கள் கூர்ந்து கவனிக்க கற்றுக்கொண்டால், உதாரணங்களை திறம்பட பயன்படுத்திக் கற்பிக்கலாம்.
தாவீது ராஜாவை கண்டிப்பதற்கு நாத்தான் தீர்க்கதரிசி ஒரு கற்பனை கதையை விவரித்தார். அந்தக் கதை பலன் தந்தது, ஏனென்றால் தாவீது தன்னை நியாயப்படுத்த முயலுவதை தடுத்தது. அநேக ஆடுகள் வைத்திருந்த ஒரு செல்வந்தனையும் ஒரேவொரு பெண் செம்மறியாட்டுக் குட்டியை அன்போடு வளர்த்துவந்த ஓர் ஏழையையும் பற்றியதே அந்தக் கதை. தாவீதே ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்ததால் அந்த ஆட்டுக்குட்டிக்கு சொந்தக்காரரின் உணர்ச்சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏழையின் ஆசைக்குரிய ஆட்டுக்குட்டியை பறித்துக்கொண்ட செல்வந்தன் மீது தாவீது நீதியான கோபத்தோடு வெகுண்டெழுந்தார். பின்பு தாவீதிடம் நாத்தான் நேரடியாக இவ்வாறு கூறினார்: “நீயே அந்த மனுஷன்”! இது தாவீதின் இருதயத்தைத் தொட்டது, அவரும் மனப்பூர்வமாக மனந்திரும்பினார். (2 சா. 12:1-14) பழகப் பழக, உணர்ச்சிப்பூர்வ பிரச்சினைகளை இதயத்தைக் கனிவிக்கும் முறையில் சமாளிக்க நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
போதிப்பதற்கு மதிப்புமிக்க அநேக உதாரணங்களை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களிலிருந்து நீங்கள் எடுக்கலாம். “லோத்துவின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னபோது இயேசு சில வார்த்தைகளையே பயன்படுத்தினார். (லூக். 17:32) தமது வந்திருத்தலுக்குரிய அடையாளத்தைக் கொடுத்தபோது, ‘நோவாவின் நாளை’ இயேசு குறிப்பிட்டார். (மத். 24:37-39) எபிரெயர் 11-ம் அதிகாரத்தில், விசுவாசத்திற்கு முன்மாதிரிகளாய் திகழ்ந்த 16 ஆண்கள் பெண்களுடைய பெயர்களை அப்போஸ்தலன் பவுல் பட்டியலிட்டார். பைபிளோடு நன்கு பரிச்சயமாகும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களையும் ஆட்களையும் பற்றிய பதிவுகளிலிருந்து நீங்கள் வலிமைமிக்க உதாரணங்களை எடுக்கலாம்.—ரோ. 15:4; 1 கொ. 10:11.
சிலசமயங்களில், நவீனகால நிஜவாழ்க்கை அனுபவங்களை உபயோகித்து ஒரு குறிப்பை வலியுறுத்துவதை பயனுள்ளதாக காண்பீர்கள். ஆனால் அப்படி செய்யும்போது, உண்மையென உறுதிப்படுத்தப்பட்ட அனுபவங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சபையாரில் யாரையாவது அநாவசியமாக தர்மசங்கடப்படுத்துகிற அல்லது உங்களுடைய பொருளுக்குப் பொருந்தாத சர்ச்சைக்குரிய விஷயத்தின் மீது கவனத்தை திருப்புகிற அனுபவங்களைத் தவிருங்கள். அந்த அனுபவம் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய பேச்சின் முக்கிய குறிக்கோளிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் தேவையற்ற விவரங்களையும் சேர்க்காதீர்கள்.
அதை புரிந்துகொள்வார்களா? நீங்கள் எந்தவொரு உவமையையோ உதாரணத்தையோ பயன்படுத்தினாலும், அது முக்கிய குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கலந்தாராயும் பொருளுக்கு அதைப் பொருத்தாமல் விட்டால் உங்கள் குறிக்கோள் நிறைவேறுமா?
தமது சீஷர்கள் இந்த ‘உலகத்துக்கு வெளிச்சமாக’ இருப்பதைக் குறிப்பிட்ட பிறகு, ஒரு விளக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, இது என்ன உத்தரவாதத்தை அவர்கள் மீது வைக்கிறது என்பதைப் பற்றிய சில குறிப்புகளையும் இயேசு கூடுதலாக சொன்னார். (மத். 5:15, 16) காணாமற்போன ஆட்டைப் பற்றிய உவமையை சொல்லி, மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷத்தைக் குறிப்பிட்டார். (லூக். 15:7) நல்ல அயலானாகிய சமாரியனை பற்றிய கதையை சொன்ன பிறகு, செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பொருத்தமான ஒரு கேள்வியைக் கேட்டு நேரடியான அறிவுரைகள் சிலவற்றை வழங்கினார். (லூக். 10:36, 37) ஆனால் பல்வகை நிலத்தைப் பற்றிய உவமையையும் வயலில் உள்ள களைகளைப் பற்றிய உவமையையும் திரளான கூட்டத்தாருக்கு அல்ல, கேட்டுத் தெரிந்துகொள்ள ஆர்வம்காட்டிய தாழ்மையான உள்ளம் படைத்தவர்களுக்கு மாத்திரமே இயேசு விளக்கினார். (மத். 13:1-30, 36-43) தம்முடைய மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, திராட்சத் தோட்டத்தைப் பயிரிடுகிற கொலைபாதகமிக்க ஆட்களைப் பற்றிய உவமையை இயேசு கூறினார். ஆனால் அதைப் பொருத்திக் காட்டவில்லை, அதற்கு அவசியமும் இருக்கவில்லை. ஏனென்றால் ‘பிரதான ஆசாரியரும் பரிசேயரும் . . . தங்களைக் குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்துகொண்டார்கள்.’ (மத். 21:33-45) ஆகவே, ஓர் உவமையை பொருத்திக் காட்ட வேண்டுமா, அப்படியென்றால் எந்தளவுக்கு என்பதை உவமையின் தன்மை, கேட்போருடைய மனப்பான்மை, உங்களுடைய குறிக்கோள் ஆகிய அனைத்தும் தீர்மானிக்கும்.
உவமைகளையும் உதாரணங்களையும் திறம்பட பயன்படுத்தும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு காலமெடுக்கும், ஆனால் நீங்கள் எடுக்கும் முயற்சி மிகவும் பயனுள்ளதே. சிறந்த உவமைகள் மனதையும் இருதயத்தையும் கவருகின்றன. அவை செய்திக்கு வலுவூட்டுகின்றன; இதை எளிமையான கூற்றுகளால் பெரும்பாலும் செய்ய முடியாது.