உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 26 பக். 170-பக். 173 பாரா. 4
  • தர்க்க ரீதியில் பேசுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தர்க்க ரீதியில் பேசுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • குறிப்புத்தாளை தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஒரு பேச்சைக் கோர்வையாக விரிவாக்குதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 26 பக். 170-பக். 173 பாரா. 4

படிப்பு 26

தர்க்க ரீதியில் பேசுதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கருத்துக்கள் ஒன்றுக்கொன்றும் உங்களுடைய முடிவுரையுடனும் அல்லது குறிக்கோளுடனும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக்கும் விதத்தில் தகவல்களை ஒழுங்கமையுங்கள்.

ஏன் முக்கியம்?

தகவல்களை தர்க்க ரீதியில் சொல்லும்போது, சபையார் அவற்றை புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஞாபகத்தில் வைப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

தகவல்களை தர்க்க ரீதியில் ஒழுங்கமைப்பதற்கு முன்பு, உங்களுடைய மனதில் ஒரு குறிக்கோள் வைத்திருப்பது அவசியம். குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி​—நம்பிக்கையைப் பற்றி, மனப்பான்மையைப் பற்றி, குணத்தைப் பற்றி, நடத்தையைப் பற்றி அல்லது வாழ்க்கை முறையைப் பற்றி​—மற்றவர்களுக்கு வெறுமனே சொல்வதே உங்களுடைய குறிக்கோளா? ஒரு கருத்தை நிரூபிக்க அல்லது மறுத்துரைக்க விரும்புகிறீர்களா? ஒன்றின் மீது போற்றுதலை வளர்ப்பது அல்லது செயல்படத் தூண்டுவது உங்களுடைய குறிக்கோளா? உங்களுடைய தகவலை தனி நபரிடம் சொன்னாலும்சரி பெரும் கூட்டத்தாரிடம் சொன்னாலும்சரி, அதை திறம்பட சொல்வதற்கு, இந்தப் பொருளைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்கு என்ன தெரியும், அதைப் பற்றி அவர்களுடைய மனப்பான்மை என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்குப் பிறகு, உங்களுடைய குறிக்கோளை அடைய உதவும் முறையில் தகவல்களை சுருக்கமாக எழுதிக் கொள்ளுங்கள்.

தமஸ்குவில் சவுல் (பவுல்) ஊழியம் செய்கையில், “இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி [“தர்க்க ரீதியாக நிரூபித்து,” NW], தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்” என அப்போஸ்தலர் 9:22 அறிவிக்கிறது. அப்படி தர்க்க ரீதியாக நிரூபித்ததில் என்ன உட்பட்டிருந்தது? பிற்பாடு அந்தியோகியாவிலும் தெசலோனிக்கேயாவிலும் அவர் செய்த ஊழியத்தைப் பற்றிய பதிவு சுட்டிக்காட்டுகிறபடி, யூதர்கள் எபிரெய வேதாகமத்தை ஏற்றுக்கொண்டதையும் மேசியாவைப் பற்றி அது சொல்வதை நம்புவதாக உரிமை பாராட்டியதையும் அஸ்திவாரமாக வைத்து முதலில் தன்னுடைய பேச்சை ஆரம்பித்தார். அதன்பின்பு அந்த வேதாகமத்திலிருந்து மேசியாவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி சொல்கிற பகுதிகளை பவுல் தேர்ந்தெடுத்தார். அவற்றை மேற்கோள் காண்பித்து, இயேசுவின் வாழ்க்கையில் உண்மையாக சம்பவித்தவற்றோடு ஒப்பிட்டுப் பேசினார். கடைசியில், இயேசுவே கிறிஸ்து அல்லது மேசியா என்ற தெளிவான முடிவுக்கு அவர்களுடைய கவனத்தை ஈர்த்தார். (அப். 13:16-41; 17:2, 3) நீங்களும் பைபிள் சத்தியத்தை தர்க்க ரீதியில் பேசினால், அதை ஏற்றுக்கொள்ளும்படி மற்றவர்கள் உந்துவிக்கப்படுவார்கள்.

பேச்சை ஒழுங்கமைத்தல். பல்வேறு முறைகளில் தகவல்களை தர்க்க ரீதியாக ஒழுங்கமைக்கலாம். இந்த முறைகளில் சிலவற்றை ஒன்றுசேர்த்து பயன்படுத்துவது அனுகூலமாக இருந்தால், நீங்கள் அப்படியும் செய்யலாம். அவற்றில் சிலவற்றை கவனியுங்கள்.

பொருள்வாரியாக ஒழுங்கமைத்தல். இதற்கு உங்களுடைய குறிக்கோளுக்கு உதவும் முறையில் தகவல்களை பல பிரிவுகளாக ஒழுங்கமைக்க வேண்டும். அந்தப் பிரிவுகள், உங்களுடைய பொருளை புரிந்துகொள்வதற்கு இன்றியமையாத முக்கிய குறிப்புகளாக இருக்கலாம். அவை ஏதோவொன்றை சரியென்றோ தவறென்றோ நிரூபிக்கிற திட்டவட்டமான விவாதங்களாக இருக்கலாம். சில குறிப்புகள் பொருளோடு தொடர்புடையவையாக இருந்தாலும், உங்களுடைய சபையாரை அல்லது குறிக்கோளைப் பொறுத்து, அவற்றை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நீக்கிவிடலாம்.

பொருள்வாரியாக ஒழுங்கமைப்பதற்கு ஓர் உதாரணத்தை கவனியுங்கள். கடவுளுடைய பெயர் சம்பந்தமாக கொடுக்கும் ஒரு சிறிய பேச்சில் பின்வரும் விஷயங்கள் அடங்கலாம்: (1) கடவுளை அவரது பெயரால் அறிவது ஏன் முக்கியம், (2) கடவுளுடைய பெயர் என்ன, (3) அந்தப் பெயரை நாம் எப்படி கனப்படுத்தலாம்.

வீட்டு பைபிள் படிப்புகளில் பயன்படுத்துவதற்காக “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் வடிவமைக்கப்பட்ட பிரசுரங்களை ஆராய்வதன் மூலம் தகவல்களை பொருள்வாரியாக ஒழுங்கமைப்பதைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். (மத். 24:45, NW) அடிப்படை பைபிள் சத்தியங்களின் முழு கருத்தைப் புரிந்துகொள்ள மாணாக்கர்களுக்கு உதவக்கூடிய பல பொருள்கள் பொதுவாக இந்தப் பிரசுரங்களில் உள்ளன. பெரிய பிரசுரங்களில் ஒவ்வொரு அதிகாரத்தையும் பிரிப்பதற்கு உபதலைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பொருளும் அதைத் தொடர்ந்து வரும் தகவல்களுக்கு மாணாக்கரை தயார்ப்படுத்தி, முழு விஷயத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.

காரணகாரியம் (Cause and effect). தகவல்களை தர்க்க ரீதியில் சொல்வதற்கு உதவும் மற்றொரு முறை காரணகாரியத்தின் அடிப்படையில் நியாயங்காட்டிப் பேசுவதாகும்.

தாங்கள் செய்கிற அல்லது செய்ய திட்டமிடுகிற ஒன்றின் விளைவை மிக கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு தொகுதியினரிடம் அல்லது தனி நபர்களிடம் நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், இந்த முறை பலன் தரத்தக்கதாக இருக்கலாம். நீதிமொழிகள் 7-ம் அதிகாரம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ‘பேதையாக’ (காரணம்) இருக்கும் ஓர் இளைஞன் விபச்சாரியுடன் உறவுகொண்டு கசப்பான விளைவுகளை (காரியம்) அறுவடை செய்வதைப் பற்றி அது தத்ரூபமாக வர்ணிக்கிறது.​—நீதி. 7:7.

கூடுதலாக வலியுறுத்திக் காட்டுவதற்கு, யெகோவாவின் வழிகளில் நடக்கத் தவறுகிறவர்கள் அனுபவிக்கும் கெட்ட விளைவுகளை யெகோவாவுக்கு செவிசாய்ப்பவர்கள் அனுபவிக்கும் நல்ல பலன்களோடு வேறுபடுத்திக் காண்பிக்கலாம். இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு மோசே அவர்களிடம் பேசியபோது, யெகோவாவின் ஆவியால் உந்துவிக்கப்பட்டு இதுபோலத்தான் வித்தியாசப்படுத்திக் காட்டினார்.​—உபா., அதி. 28.

சில சந்தர்ப்பங்களில், ஒரு சூழ்நிலையை (காரியம்) அடையாளப்படுத்திக் காண்பிப்பதன் மூலம் உங்களுடைய விவாதத்தை ஆரம்பித்து, பிறகு அதற்குரிய காரணிகளை (காரணம்) சுட்டிக்காட்டும் அத்தாட்சியை கொடுப்பது நல்லது. இது பெரும்பாலும் பிரச்சினைகளையும் அதற்குரிய தீர்வுகளையும் காண்பிப்பதை உட்படுத்துகிறது.

பிரச்சினையும் தீர்வும். வெளி ஊழியத்தில், மக்களை பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி பேசி அதற்கு திருப்திகரமான பரிகாரத்தைக் காட்டும்போது, செவிகொடுத்துக் கேட்பதற்கு இது ஒருவரை உற்சாகப்படுத்தலாம். பிரச்சினை நீங்களாகவே எழுப்பும் ஒன்றாகவோ அல்லது அந்த நபர் எழுப்பும் ஒன்றாகவோ இருக்கலாம்.

இந்தப் பிரச்சினை, ஆட்கள் வயதாகி இறப்பதைப் பற்றியதாக இருக்கலாம், குற்றச்செயல் பரவலாக காணப்படுவதைப் பற்றியதாக இருக்கலாம், அல்லது எங்கு பார்த்தாலும் அநீதி நிலவுவதைப் பற்றியதாக இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளை விலாவாரியாக விளக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அதுதான் அப்பட்டமாக தெரிகிறதே. வெறுமனே ஒரு பிரச்சினையைப் பற்றி பேச ஆரம்பித்து, பின்பு பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தைக் காண்பியுங்கள்.

மறுபட்சத்தில், அந்தப் பிரச்சினை முற்றிலும் தனிப்பட்ட ஒன்றாக இருக்கலாம், ஒற்றை பெற்றோர் எதிர்ப்படும் சவால்களாக இருக்கலாம், பெரும் வியாதியால் ஏற்படும் மனச்சோர்வாக இருக்கலாம், அல்லது வேறொருவர் அன்பற்ற முறையில் நடத்துவதால் ஒருவர் அனுபவிக்கும் கஷ்டங்களாக இருக்கலாம். நல்ல பலனைப் பெற, முதலாவதாக நீங்கள் நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் பைபிள் அருமையான தகவல்களைத் தருகிறது. ஆனால் அவற்றை விவேகத்தோடு பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பேச்சு உண்மையிலேயே பிறருக்கு பயனளிக்கப் போகிறதென்றால், நீங்கள் எதார்த்தமானவராக இருக்க வேண்டும். நிரந்தர பரிகாரத்தைப் பற்றி பேசுகிறீர்களா, குறுகிய கால நிவாரணத்தைப் பற்றி பேசுகிறீர்களா, அல்லது இந்த ஒழுங்குமுறையில் மாறாமல் இருக்கப்போகும் ஒரு சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி பேசுகிறீர்களா என்பதை தெளிவுபடுத்துங்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் தரும் வேதப்பூர்வ நியாயவிவாதம் நீங்கள் சொல்லப்போகும் முடிவை ஆதரிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சுட்டிக்காட்டும் பரிகாரம் பிறருக்கு கொஞ்சங்கூட தர்க்க ரீதியாக தோன்றாது.

காலக்கிரம வரிசை. இயல்பாகவே சில தகவல்கள் காலக்கிரம வரிசைப்படி கொடுக்கப்படுகின்றன. உதாரணமாக, யாத்திராகமம் புத்தகத்தில், பத்து வாதைகள் அவை நிகழ்ந்த வரிசைப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில், விசுவாசத்தில் முன்மாதிரியாக திகழ்ந்த ஆண்கள் பெண்களுடைய அட்டவணை காலக்கிரம முறையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்தகால சம்பவங்களை காலக்கிரம வரிசைப்படி நீங்கள் விவரித்தால், சில சூழ்நிலைகள் எவ்வாறு படிப்படியாக ஏற்பட்டன என்பதை சபையார் புரிந்துகொள்ள உதவலாம். இது பைபிள் கால சம்பவங்களுக்கு மட்டுமல்ல, நவீனகால சரித்திரத்திற்கும் பொருந்துகிறது. இவ்வாறு, காலக்கிரம வரிசையை காரணகாரிய நியாயத்தோடு இணைக்கலாம். எதிர்காலத்தில் நடக்கப்போவதாக பைபிள் காட்டும் சம்பவங்களைக் குறிப்பிட திட்டமிட்டால், காலக்கிரம வரிசைப்படி கொடுப்பது சபையார் அவற்றை புரிந்துகொள்வதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும்.

காலக்கிரம முறையை பயன்படுத்துகையில் நீங்கள் எப்பொழுதும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதில்லை. சில சந்தர்ப்பங்களில், ஒரு கதையை முக்கிய திருப்புகட்டத்திலிருந்து அறிமுகப்படுத்துவது அதிக திறம்பட்டதாக இருக்கலாம். உதாரணமாக, ஓர் அனுபவத்தை விவரிக்கும்போது, ஒருவருடைய உத்தமத்தன்மை சோதிக்கப்பட்ட சமயத்தைப் பற்றி சொல்லலாம். விவரப்பதிவில் வரும் அந்தப் பாகத்தைக் கொண்டு ஆர்வத்தைத் தூண்டிய பிறகு, அதற்கு வழிநடத்திய விவரங்களை காலக்கிரம வரிசைப்படி குறிப்பிடலாம்.

பொருத்தமான தகவல்களை மட்டுமே பயன்படுத்துதல். உங்களுடைய தகவல்களை எப்படி ஒழுங்கமைத்தாலும்சரி, பொருத்தமானவற்றை மட்டுமே பயன்படுத்துவதில் கவனமாயிருங்கள். நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களுடைய பேச்சின் மையப்பொருளுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும். உங்களுடைய சபையாரின் பின்னணியையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சபையாரில் ஒரு சாராருக்கு ஒரு விஷயம் இன்றியமையாததாக இருக்கலாம், ஆனால் வேறொரு சாராருக்கோ அது அவசியமற்றதாக தோன்றலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தகவல்கள் அனைத்தும் உங்களுடைய குறிக்கோளை அடைவதாக இருக்கிறதா என்பதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்றபடி, உங்களுடைய பேச்சு ஆர்வத்திற்குரியதாக இருந்தாலும் அதன் வலிமையை இழந்துவிடலாம்.

ஆராய்ச்சி செய்யும்போது, நீங்கள் பேசப்போகும் பொருளோடு தொடர்புடைய ஆர்வத்திற்குரிய அநேக தகவல்களை காணலாம். அவற்றில் எவ்வளவு தகவலை நீங்கள் பயன்படுத்த வேண்டும்? ஏராளமான தகவல்களைக் கொடுத்து உங்களுடைய சபையாரை திணறடித்தால் உங்களுடைய நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிடுவீர்கள். வேகமாக கொடுக்கப்படும் அநேக கருத்துக்களைவிட மணிமணியாக விளக்கப்படும் முக்கியமான சில கருத்துக்களே சட்டென்று ஞாபகத்திற்கு வரும். சுவாரஸ்யமான மற்ற தகவல்களை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால் அவை உங்களுடைய குறிக்கோளை மறைப்பதற்கு அனுமதித்து விடாதீர்கள். பைபிளில் மாற்கு 7:3, 4 மற்றும் யோவான் 4:1-3, 7-9-ல், சில விவரங்கள் எவ்வாறு ஞானமாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதை கவனியுங்கள்.

நீங்கள் ஒரு குறிப்பிலிருந்து மற்றொரு குறிப்பிற்கு செல்லும்போது, கருத்துக் கோர்வையை சபையார் விட்டுவிடும் அளவுக்கு அதை சம்பந்தமில்லாமல் சொல்லாதீர்கள். கருத்துக்கள் திறம்பட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு, ஒரு கருத்திலிருந்து மற்றொன்றிற்கு பாலம் அமைக்க வேண்டும். அந்தப் பாலம் கருத்துக்களுக்கு இடையே உள்ள உறவை காண்பிக்கும் ஒரு வாக்கிய உறுப்பாக இருக்கலாம் அல்லது முழு வாக்கியமாக இருக்கலாம். புதிய கருத்துக்கும் அதற்கு முன்பு சொல்லப்பட்ட ஒன்றிற்கும் உள்ள தொடர்பை காட்டுவதற்கு, பல மொழிகளில் எளிய இணைப்புச் சொற்களை அல்லது சொற்றொடர்களை பயன்படுத்தலாம்.

பொருத்தமான தகவல்களை மட்டுமே பயன்படுத்துவதும் அவற்றை தர்க்க ரீதியில் ஒழுங்கமைப்பதும் உங்களுடைய குறிக்கோளை நிறைவேற்ற உதவும்.

உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் . . .

  • என்னுடைய குறிக்கோள் என்ன?

  • ஒவ்வொரு முக்கிய குறிப்பும் அந்தக் குறிக்கோளோடு தெளிவாக சம்பந்தப்பட்டிருக்கிறதா?

  • தகவல்களைத் தேர்ந்தெடுக்கும்போது, என்னுடைய சபையாரின் தேவைகளை கவனத்தில் எடுத்திருக்கிறேனா?

  • என்னுடைய சபையாரின் மனதை ஒரு கருத்திலிருந்து மற்றொன்றுக்கு வழிநடத்துவதற்கு ஏற்றபடி தகவல்களை ஒழுங்கமைத்திருக்கிறேனா?

பயிற்சி: இந்தப் பாடத்தை வாசித்தப்பின், இந்தத் தகவலை மிதமான வேகத்தில் மீண்டும் பார்வையிடுங்கள், ஒவ்வொரு பாராவின் சுருக்கத்தையும் மனதில் சொல்லிக்கொள்ளுங்கள். முழு பாடத்தின் குறிக்கோளை அடைவதற்கு ஒவ்வொரு பாராவும் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை கவனியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்