உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 24 பக். 160-பக். 165 பாரா. 1
  • வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • ஒவ்வொரு நாளும் நல்ல பேச்சைப் பயன்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • சத்தியத்தின் இதமான வார்த்தைகளைப் பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • “பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 24 பக். 160-பக். 165 பாரா. 1

படிப்பு 24

வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மரியாதையான, தயவான, சட்டென்று புரிந்துகொள்ளக்கூடிய, பேச்சிற்கு பல்சுவையூட்டுகிற, தகுந்த வலிமையையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகிற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். வார்த்தைகளை இலக்கண விதிப்படி பயன்படுத்துங்கள்.

ஏன் முக்கியம்?

நீங்கள் தரும் செய்திக்கு மரியாதையை காட்டுகிறது, யாரிடம் பேசுகிறீர்களோ அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மனப்பான்மையைப் பற்றி நிறைய சொல்கிறது. நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு பிறர் எப்படி பிரதிபலிப்பார்கள் என்பதை பாதிக்கிறது.

வார்த்தைகள் பேச்சுத்தொடர்புக்கு உதவும் வலிமைமிக்க கருவிகள். ஆனால் நாம் சொல்லும் வார்த்தைகள் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமாகில் நாம் அவற்றை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம். ஒரு சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கும் வார்த்தை வேறு சூழ்நிலைகளில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். தவறாக பயன்படுத்தப்பட்டால், வேடிக்கைக்குரிய வார்த்தை “வேதனையூட்டும் வார்த்தையாக” மாறிவிடலாம். இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது முன்யோசனையும் கரிசனையும் இல்லாததை வெளிப்படுத்தலாம். சில வார்த்தைகளுக்கு இரட்டை அர்த்தங்கள் இருக்கின்றன, அவற்றில் ஒன்று புண்படுத்துவதாகவோ சிறுமைப்படுத்துவதாகவோ இருக்கும். (நீதி. 12:18; 15:1, NW) மறுபட்சத்தில், “நல்வார்த்தையோ”​—உற்சாகமூட்டும் வார்த்தையோ​—கேட்கிறவருடைய இருதயத்திற்கு சந்தோஷத்தை தருகிறது. (நீதி. 12:25) ஞானியாக இருந்தாலும், சரியான வார்த்தைகளை கண்டுபிடிப்பதற்கு முயற்சி தேவை. “இனிய வார்த்தைகளை”யும் “சத்தியத்தின் சரியான வார்த்தைகளை”யும் கண்டுபிடிப்பதன் அவசியத்தை சாலொமோன் உணர்ந்திருந்தார் என பைபிள் சொல்கிறது.​—பிர. 12:10, NW.

சில மொழிகளில், முதியோர்களிடம் அல்லது உயர் அதிகாரிகளிடம் பேசும்போது குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன, அதேசமயத்தில் சகாக்களிடமோ இளைஞர்களிடமோ பேசும்போது வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட பண்பாடுகளை புறக்கணிப்பது அநாகரிகமாக கருதப்படுகிறது. உள்ளூர் வழக்கத்தின்படி பிறருக்காக பிரத்தியேகமாய் உபயோகிக்கப்படும் மரியாதைக்குரிய வார்த்தைகளை தனக்கே பயன்படுத்துவதும் பொருத்தமற்றதாக இருக்கிறது. மரியாதை காண்பிக்கும் விஷயத்தில், சட்டம் அல்லது உள்ளூர் வழக்கத்தைவிட பைபிள் உயர்ந்த தராதரத்தை வைக்கிறது. அது “எல்லாரையும் கனம்பண்ணு”ம்படி கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது. (1 பே. 2:17) இதை மனப்பூர்வமாக செய்கிறவர்கள் எல்லா வயதினரிடமும் மரியாதைக்குரிய முறையில் பேசுகிறார்கள்.

உண்மை கிறிஸ்தவர்களல்லாத அநேகர் நாகரிகமற்ற கொச்சை மொழியை பயன்படுத்துகிறார்கள். முரட்டுத்தனமான பேச்சு தாங்கள் சொல்லும் விஷயத்திற்கு வலிமை சேர்ப்பதாக அவர்கள் நினைக்கலாம். அல்லது அப்படிப்பட்ட பேச்சு அவர்களுடைய சொல்வளம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதையே காட்டலாம். யெகோவாவின் வழிகளை கற்றுக்கொள்வதற்கு முன்பு ஒருவர் பழக்கமாக இப்படி பேசி வந்திருந்தால், அந்தப் பழக்கத்தை மாற்றுவதை கடினமாக கருதலாம். இருந்தாலும் இது சாத்தியமே. பேச்சு முறைகளை மாற்றிக்கொள்ள கடவுளுடைய ஆவி ஒருவருக்கு உதவி செய்யும். என்றாலும், நல்வார்த்தைகள்​—நம்பிக்கையூட்டுகிற வார்த்தைகள், உற்சாகமூட்டுகிற வார்த்தைகள்​—நிறைந்த சொல்வளத்தை ஒருவர் பெருக்கிக்கொண்டு, அவற்றை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.​—ரோ. 12:2; எபே. 4:29; கொலோ. 3:8.

எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழி. நல்ல பேச்சிற்கு அழகு அது எளிதில் புரிந்துகொள்ளத்தக்கதாக இருப்பதே. (1 கொ. 14:9) நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கேட்போரால் சட்டென்று விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால், நீங்கள் ஏதோ புரியாத மொழியில் பேசுகிறவராகத்தான் அவர்களுக்குத் தோன்றுவீர்கள்.

குறிப்பிட்ட தொழில் புரிவோர் மத்தியில் சில வார்த்தைகள் விசேஷ அர்த்தமுடையவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பரிபாஷையை அவர்கள் அன்றாடம் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை தவறான சூழ்நிலையில் பயன்படுத்துவது உங்களுடைய பேச்சுத்தொடர்புக்கு தடையாக இருக்கலாம். மேலும், நீங்கள் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தினாலும், அனாவசியமான விவரங்களைக் கொடுப்பதில் மூழ்கிவிட்டால், செவிசாய்ப்போர் தங்களுடைய மனதை வேறு விஷயங்களுக்கு திருப்பிக்கொள்வார்கள்.

அதிகம் படிக்காதவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகளையே கரிசனைமிக்க பேச்சாளர் பயன்படுத்துகிறார். யெகோவாவை பின்பற்றி, ‘எளியவரிடம்’ கரிசனை காட்டுகிறார். (யோபு 34:19, NW) பழக்கமில்லாத வார்த்தையை பயன்படுத்தும் அவசியம் ஏற்பட்டால், எளிய சொற்றொடர்களால் அதன் அர்த்தத்தை தெளிவாக்கவும் வேண்டும்.

நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எளிய வார்த்தைகள் கருத்துக்களை மிக வலிமையோடு தெரியப்படுத்துகின்றன. சிறிய வாக்கியங்களும் எளிய சொற்றொடர்களும் கிரகிப்பதற்கு சுலபமானவை. பேச்சு துண்டுதுண்டாக இருப்பதை தவிர்ப்பதற்கு, இவற்றின் இடையிடையே பெரிய வாக்கியங்களையும் இழையோட விடலாம். ஆனால் சபையாருடைய நினைவில் நிற்க வேண்டுமென விரும்புகிற கருத்துக்களைச் சொல்லும்போது, எளிய வார்த்தைகளையும் சுருக்கமான வாக்கியங்களையுமே பயன்படுத்துங்கள்.

பல்சுவையும் சரியான வார்த்தையும். நல்வார்த்தைகளுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரே வார்த்தைகளையே ஓதுவதற்குப் பதிலாக, பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். அப்பொழுது உங்களுடைய பேச்சு ஆர்வமூட்டுவதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். உங்களுடைய சொல்வளத்தை நீங்கள் எவ்வாறு பெருக்கிக்கொள்ளலாம்?

வாசிக்கும்போது நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ளாத வார்த்தைகள் இருந்தால் அவற்றை குறித்துக்கொண்டு அகராதியில் எடுத்துப் பாருங்கள். மேலும், அந்த வார்த்தைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து பொருத்தமான சமயத்தில் பயன்படுத்துங்கள். அவற்றை சரியாக உச்சரிப்பதற்கு கவனம் செலுத்துங்கள்; வெறுமனே கவனத்தை கவருவதற்காக அல்லாமல், உடனடியாக புரிந்துகொள்ளத்தக்க ஒரு சூழமைவில் பயன்படுத்துவதற்கும் கவனம் செலுத்துங்கள். சொல்வளத்தை அபிவிருத்தி செய்துகொள்வது உங்களுடைய பேச்சிற்கு பல்சுவையூட்டும். ஆனால் ஓர் எச்சரிக்கை​—வார்த்தைகளை தவறாக உச்சரிக்கும்போது அல்லது தவறாக பயன்படுத்தும்போது, என்ன பேசுகிறோமென்றே புரியாமல் பேசுவதாக மற்றவர்கள் முடிவு செய்துவிடலாம்.

சொல்வளத்தைப் பெருக்குவதற்குரிய நோக்கம் அறிவை புகட்டுவதே, செவிகொடுத்துக் கேட்போர் நம்மை மெச்ச வேண்டும் என்பது அல்ல. சிக்கலான பேச்சும் நீளமான வார்த்தைகளும் பேச்சாளரிடமே கவனத்தை ஈர்க்கும். மதிப்புமிக்க தகவலை பகிர்ந்துகொள்வதும், அதை கேட்போருக்கு ஆர்வத்திற்குரிய விதத்தில் அளிப்பதுமே நம்முடைய ஆசையாக இருக்க வேண்டும். இந்த பைபிள் பழமொழியை நினைவில் வைத்திருங்கள்: “ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்.” (நீதி. 15:2) எளிதில் புரிந்துகொள்ளத்தக்க நல்வார்த்தைகளையும் பொருத்தமான வார்த்தைகளையும் பயன்படுத்தும்போது, பேச்சு உற்சாகமின்றி மந்தமாக இருப்பதற்குப் பதிலாக, புத்துணர்ச்சியூட்டுவதாகவும் உந்துவிப்பதாகவும் இருக்கும்.

உங்களுடைய சொல்வளத்தைப் பெருக்கும்போது, சரியான வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு கூர்ந்து கவனம் செலுத்துங்கள். இரண்டு வார்த்தைகள் ஒரேமாதிரியாக இருக்கலாம், ஆனால் வித்தியாசமான சூழ்நிலைகளில் அர்த்தம் லேசாக மாறிவிடலாம். இதை உணர்ந்துகொண்டால், தெளிவாக பேசுவதில் நீங்கள் முன்னேறலாம், கேட்போரை புண்படுத்துவதையும் தவிர்க்கலாம். நன்றாக பேசுகிற ஆட்களுக்கு கவனமாக செவிகொடுங்கள். சில அகராதிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் நேர்ப்பதங்களையும் (ஒரே அர்த்தமுடையவை, ஆனால் ஒப்பானவை அல்ல) எதிர்ப்பதங்களையும் (ஓரளவு எதிரிடையான அர்த்தம் உள்ளவை) தருகின்றன. இவ்வாறு, ஒரே கருத்துக்கு மட்டுமல்ல, லேசாக வித்தியாசப்படும் அர்த்தங்களுக்கும் பல்வேறு வார்த்தைகளை தெரிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்ற சரியான வார்த்தையை தேடும்போது இது அதிக உதவியாக இருக்கிறது. உங்களுடைய சொல்வளத்தோடு ஒரு வார்த்தையை சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, அதன் அர்த்தம் என்ன, அதை எப்படி உச்சரிப்பது, எப்பொழுது பயன்படுத்துவது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவான வார்த்தைகளைவிட குறிப்பான வார்த்தைகள் பளிச்சென கருத்தைத் தெரிவிக்கின்றன. பேச்சாளர் ஒருவர் இவ்வாறு சொல்லலாம்: “அந்தச் சமயத்தில் அநேகர் நோய்வாய்ப்பட்டார்கள்.” அல்லது அதே விஷயத்தை இப்படியும் கூறலாம்: “முதல் உலகப் போருக்குப் பிறகு, சில மாதங்களுக்குள்ளாகவே, சுமார் 2,10,00,000 பேர் ஸ்பானிஷ் விஷ ஜுரத்தால் இறந்துபோனார்கள்.” “அந்தச் சமயத்தில்,” “அநேகர்,” “நோய்வாய்ப்பட்டார்கள்” என்று பொதுப்படையாக சொல்வதற்கும் எதை அர்த்தப்படுத்துகிறார் என்பதை பேச்சாளர் தெளிவாக சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த முறையில் பேசுவதற்கு, உங்களுடைய பொருளோடு சம்பந்தப்பட்ட தகவல்களை அறிந்திருப்பதும் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பதும் அவசியம்.

சரியான வார்த்தையைப் பயன்படுத்துவது, வளவளவென இல்லாமல் ரத்தினச் சுருக்கமாக விஷயத்தை எடுத்துரைப்பதற்கும் உதவலாம். வளவளவென பேசுவது முக்கிய கருத்துக்களைப் புதைத்துவிடுகிறது. மறுபட்சத்தில், எளிமையாக பேசினால், முக்கியமான தகவல்களை மற்றவர்கள் சுலபமாக கிரகித்துக்கொண்டு மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். அது திருத்தமான அறிவை எடுத்துரைக்க உதவுகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனை எளிமையான மொழிநடைக்குப் புகழ்பெற்றது. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (மத்தேயு 5:3-12 மற்றும் மாற்கு 10:17-21-ல் பதிவு செய்யப்பட்டுள்ள உதாரணங்களை கவனியுங்கள்.) நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் முத்து முத்தாக பேச பழகிக்கொள்ளுங்கள்.

வலிமை, உணர்ச்சி, தத்ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வார்த்தைகள். உங்களுடைய சொல்வளத்தைப் பெருக்குகையில், புதுப்புது வார்த்தைகளை மட்டுமல்ல, குறிப்பிட்ட சிறப்பியல்புகளைக் கொண்ட வார்த்தைகளைப் பற்றியும் சிந்தியுங்கள். உதாரணமாக, வலிமையை வெளிப்படுத்தும் வினைச்சொற்களையும்; தத்ரூபத்தை வெளிப்படுத்தும் பெயரடைகளையும்; கனிவை காட்டுகிற, தயவு தொனிக்கிற, அல்லது ஊக்கத்தை வெளிப்படுத்துகிற வார்த்தைகளையும் சிந்தித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட அர்த்தமுள்ள மொழிநடையைக் கொண்ட உதாரணங்கள் பைபிளில் ஏராளம் இருக்கின்றன. ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இவ்வாறு உந்துவித்தார்: ‘தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; . . . நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.’ (ஆமோ. 5:14, 15) சவுல் அரசனிடம் சாமுவேல் தீர்க்கதரிசி இவ்வாறு கூறினார்: ‘கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டார்.’ (1 சா. 15:28) யெகோவா எசேக்கியேலிடம் பேசும்போது, மறக்க முடியாத மொழிநடையை பயன்படுத்தி இவ்வாறு கூறினார்: ‘இஸ்ரவேல் வீட்டார் . . . தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.’ (எசே. 3:7, பொ.மொ.) இஸ்ரவேலருடைய தவறு எந்தளவுக்கு மோசமானது என்பதை வலியுறுத்தி, யெகோவா இவ்வாறு கேட்டார்: ‘மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்!’ (மல். 3:8, பொ.மொ.) பாபிலோனில் எதிர்ப்பட்ட விசுவாசப் பரீட்சையை வருணிக்கையில், தானியேல் இவ்வாறு தத்ரூபமாக அறிவித்தார்: நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ‘அவருக்குக் கடுங்கோபமூண்டது’; ஆகவே, அவர்களை கட்டி, ‘செந்தீ பறக்கிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு’ உத்தரவிட்டார். அந்த வெப்பத்தின் உக்கிரத்தை நாம் உணர்ந்துகொள்வதற்கு உதவியாக, ‘சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப் பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி [ராஜா] உத்தரவு கொடுத்தார்’; சூளை அவ்வளவு வெப்பமாக இருந்ததால் அதன் அருகே சென்றபோது ராஜாவின் ஆட்கள் பலியாகிவிட்டார்கள் என தானியேல் அறிக்கை செய்தார். (தானி. 3:19-22) இயேசு தம் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஜனங்களிடம் பேசும்போது, உணர்ச்சி பொங்க இவ்வாறு கூறினார்: ‘கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.’​—மத். 23:37, 38.

நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கேட்போருடைய மனதில் தெள்ளத் தெளிவான பதிவை ஏற்படுத்தும். புலன்களுக்கு இனிமையூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், உங்களுடைய பேச்சை கேட்போர் நீங்கள் சொல்லும் காரியத்தை “பார்ப்பார்கள்,” “தொடுவார்கள்,” நீங்கள் சொல்லும் உணவை “சுவைப்பார்கள்,” “முகர்வார்கள்,” நீங்கள் வர்ணிக்கும் சத்தத்தையும் நீங்கள் மேற்கோள் காட்டும் நபர்கள் பேசுவதையும் “கேட்பார்கள்.” நீங்கள் சொல்வது அவ்வளவு உயிரோட்டமாக இருப்பதால் சபையார் அப்படியே அதில் லயித்துவிடுவார்கள்.

கருத்துக்களை தத்ரூபமாக வெளிப்படுத்தும் வார்த்தைகள் மக்களை சிரிக்கவோ அழவோ செய்யும். அவை நம்பிக்கையைத் தூண்டும், மனமொடிந்த ஒருவருக்கு வாழ வேண்டுமென்ற ஆசையை ஊட்டி படைப்பாளர் மீது அன்பை சுரக்க வைக்கும். சங்கீதம் 37:10, 11, 34; யோவான் 3:16; வெளிப்படுத்துதல் 21:4, 5 போன்ற பைபிள் பகுதிகளில் உள்ள வார்த்தைகள் தரும் நம்பிக்கை உலகெங்கும் வாழும் மக்களின் மனதை தொட்டிருக்கின்றன.

பைபிளையும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வெளியிடும் பிரசுரங்களையும் நீங்கள் வாசிக்கையில், பல்சுவையான பதங்களையும் சொற்றொடர்களையும் காண்பீர்கள். (மத். 24:45, NW) அவற்றையெல்லாம் வெறுமனே வாசித்துவிட்டு அப்படியே மறந்துவிடாதீர்கள். உங்களுக்கு இனிமையாக ஒலிக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, உங்களுடைய அன்றாட பேச்சில் புழங்குங்கள்.

இலக்கண விதிப்படி பேசுதல். ஒருவேளை தங்களுடைய பேச்சு எப்போதுமே இலக்கண விதிப்படி இருக்காது என்பதை சிலர் அறிந்திருக்கின்றனர். ஆனால் இதைக் குறித்து அவர்கள் என்ன செய்யலாம்?

நீங்கள் இன்னும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், சரியான இலக்கணத்தையும் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பதையும் கற்றுக்கொள்வதற்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இலக்கண விதிக்குரிய காரணத்தைப் பற்றி தெளிவாக தெரியாதிருந்தால், உங்களுடைய ஆசிரியரைக் கேளுங்கள். சமாளித்துக்கொள்வதற்கு போதுமானவற்றை மட்டுமே படிக்காதீர்கள். பிற மாணவர்களிடம் இல்லாத உள்ளத்தூண்டுதல் உங்களுக்கு இருக்கிறது. நற்செய்தியை அறிவிப்பதில் திறம்பட்ட ஊழியராவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள்.

நீங்கள் வயதானவராக அல்லது இப்பொழுது பேசுகிற மொழியில் அல்லாமல் வேறொரு மொழியில் பேசி வளர்ந்தவராக இருந்தால் என்ன செய்யலாம்? அல்லது உங்களுடைய சொந்த மொழியிலேயே முறைப்படி கல்வி கற்கும் வாய்ப்பின்றி இருந்தால் என்ன செய்யலாம்? மனம் தளர்ந்து விடாதீர்கள். மாறாக, முன்னேறுவதற்கு உள்ளப்பூர்வமாக முயலுங்கள். நற்செய்தியின் நிமித்தம் அப்படி செய்யுங்கள். இலக்கணத்தைப் பற்றி நாம் தெரிந்துகொண்டதெல்லாம் பெரும்பாலும் பிறர் பேசுவதைக் கேட்டதன் மூலமே. ஆகவே, அனுபவமிக்க பேச்சாளர்கள் தங்களுடைய பேச்சை கொடுக்கும்போது கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள். பைபிளையும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் வாசிக்கும்போது, வாக்கிய அமைப்புகளையும், சொற்களின் கோர்வையையும், அவை பயன்படுத்தப்படும் சூழலையும் கவனியுங்கள். உங்களுடைய பேச்சில் இந்த நல்ல உதாரணங்களை பின்பற்றுங்கள்.

புழக்கத்தில் இருக்கும் இலக்கண விதிகளோடு முரண்படும் வார்த்தைகளையும் பேச்சு முறைகளையும் பிரபல பொழுதுபோக்கு கலைஞர்களும் பாடகர்களும் பயன்படுத்தலாம். இப்படிப்பட்டவர்களையே மக்கள் பின்பற்ற விரும்புகின்றனர். போதைப்பொருட்களை விற்பவர்களுடைய மற்றும் பிறருடைய முழு வாழ்க்கையும் குற்றச்செயல்களாலும் ஒழுக்கயீனத்தாலும் நிறைந்திருப்பதால் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் பெரும்பாலும் ஒரு தனி பாணியாக இருக்கின்றன. ஒரு வார்த்தைக்குரிய நிஜமான அர்த்தமும் அவர்கள் தரும் அர்த்தமும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுடைய மாதிரியை கிறிஸ்தவர்கள் பின்பற்றுவது ஞானமானதல்ல. அப்படி செய்வது இந்த உலகத்தாரையும் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பின்பற்றும் ஆட்களாகவே நம்மை அடையாளம் காட்டும்.​—யோவா. 17:16.

அன்றாடம் நல்ல பேச்சை பேசுவதையே பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அன்றாட உரையாடலில் ஒழுங்கற்ற பேச்சு பாணியைப் பின்பற்றுவீர்களாகில், முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் நன்றாக பேசிவிடலாம் என எதிர்பார்க்காதீர்கள். வாழ்க்கையில் சாதாரண சந்தர்ப்பங்களிலும் நல்ல தரமான பேச்சை பயன்படுத்தினால், மேடையில் பேசும்போது அல்லது சத்தியத்தைப் பற்றி மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போது அது சுலபமாகவும் இயல்பாகவும் வரும்.

முன்னேறுவது எப்படி

  • நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் ஒரு குறிப்பை இப்பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு அல்லது அதற்கும் மேலாக அதையே இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

  • வாசிக்கும்போது உங்களுடைய இலக்கை மனதில் வைத்திருங்கள். திறமை வாய்ந்த பேச்சாளர்கள் பேசுவதை செவிகொடுத்துக் கேட்கும்போது அதை மனதில் வைத்திருங்கள். உங்களுடைய பேச்சில் பயன்படுத்த விரும்பும் வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதி வைத்த ஒவ்வொன்றையும் இரண்டொரு நாட்களுக்குள் பயன்படுத்துங்கள்.

பயிற்சி: இந்த வார காவற்கோபுர படிப்பிற்கு அல்லது சபை புத்தகப் படிப்பிற்கு தயாரிக்கும்போது, விளக்குவதற்கு கஷ்டமாக இருக்கும் சில வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை அகராதியில் எடுத்துப் பாருங்கள் அல்லது வார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் யாரிடமாவது அர்த்தத்தை கேளுங்கள்.

னது சொற்கோவையில் சேர்த்துக்கொள்ள விரும்பும் வார்த்தைகள்

பல்சுவைக்காக, துல்லியத்திற்காக வலிமை, உணர்ச்சி, அல்லது தத்ரூபத்தை வெளிக்காட்டுவதற்காக

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․ ․․․․․․․․․․․․․․

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்