பேசுவதிலும் போதிப்பதிலும் திறமையை வளர்க்க உதவும் திட்டம்
நீங்கள் இளைஞராக இருந்தாலும்சரி முதியவராக இருந்தாலும்சரி, ஆணாக இருந்தாலும்சரி பெண்ணாக இருந்தாலும்சரி, மனதிலிருப்பதை இன்னும் திறம்பட வெளிப்படுத்தவும் கடவுளுடைய வார்த்தையை இன்னும் திறமையாக போதிக்கவும் இந்தப் பாடத்திட்டம் உங்களுக்கு உதவும்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருவோருக்கு பள்ளிக் கண்காணி நியமிப்புகளை தருவார். அடுத்த மூன்று பக்கங்களில், உங்களது தனிப்பட்ட ஆலோசனை படிவம் (personal counsel form) கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு குறிப்புகளுக்கு முன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், பின்வரும் பக்கங்களிலுள்ள படிப்புகளின் எண்களாகும். பேசுவது, போதிப்பது ஆகிய அம்சங்களில் கரைகண்டவராக இருப்பது எப்படி என்பதும் ஏன் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவை என்பதும் இந்தப் படிப்புகளில் விளக்கப்பட்டிருக்கின்றன. சிபாரிசு செய்யப்படுவதை எப்படி கடைப்பிடிப்பது என்பதற்கும் பிரயோஜனமான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆலோசனை படிவத்தில் குறிப்புகள் வண்ணங்களில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன; எந்தெந்த குறிப்புகள் பின்வரும் நியமிப்புகளுக்குப் பொருந்தும் என்பதை அவை காட்டுகின்றன: (1) சபையாருக்கு முன் வாசிப்பது, (2) இருவர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் சேர்ந்த நடிப்பு, அல்லது (3) சபையாருக்கு கொடுக்கும் பேச்சு. எந்தக் குறிப்பில் நீங்கள் உழைக்க வேண்டும் என்பதை பள்ளிக் கண்காணி நியமிப்பார். ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பில் மட்டும் உழைப்பது நல்லது. நியமிக்கப்பட்ட படிப்பின் முடிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பயிற்சிகளை செய்வது பிரயோஜனமளிக்கும். அந்தப் படிப்பிலுள்ள ஆலோசனையை நீங்கள் சிறந்த விதமாக கடைப்பிடித்திருப்பதை பள்ளிக் கண்காணி காண்கையில் அடுத்த பேச்சிற்கு மற்றொரு குறிப்பை நியமிப்பார்.
உங்கள் பேச்சு, கலந்துரையாடலைப் போல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பேச்சு அமைப்பு வேண்டும். பக்கம் 82-ல் பேச்சு அமைப்புகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டியதில்லை. உங்கள் ஆலோசகர், நீங்கள் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட பேச்சு அமைப்பை சிபாரிசு செய்யலாம், அல்லது எதையாவது தேர்ந்தெடுக்கும்படி உங்களிடமே விட்டுவிடலாம்.
பள்ளி நியமிப்புகளைப் பெற்றிராத சந்தர்ப்பங்களிலும் இந்தப் புத்தகத்தை வாசித்து இதிலுள்ள பயிற்சிகளை செய்வது உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் நீங்கள் ஒரு படிப்பை வாசிக்கலாம்.
பள்ளியில் அல்லது வெளி ஊழியத்தில் நீங்கள் எவ்வளவு காலம் பங்குகொண்டிருந்தாலும், தொடர்ந்து முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி அளிக்கும் கல்வியிலிருந்து நீங்கள் முழுமையாக பிரயோஜனமடைவீர்களாக.