பாகம் 4
தன்னிகரற்ற அந்த நூலின் ஆசிரியர்
அமெரிக்க மக்களில் சுமார் 96 சதவீதத்தினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஐரோப்பா, ஆசியா நாட்டவரில் மிகச் சிலருக்கே இந்த நம்பிக்கை இருக்கிறது. என்றாலும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்ளாத நாடுகளிலும், அறியமுடியாத ஏதோ ஒரு சக்தியே இந்த அண்டம் தோன்றுவதற்கு காரணம் என்ற கருத்தை அநேகர் ஏற்றுக்கொள்கிறார்கள். யுகிச்சி ஃபுகுஸாவா என்ற பிரபல ஜப்பானிய ஆசிரியர்—இவருடைய படம் 10,000 யென் நோட்டில் காணப்படுகிறது—ஒருசமயம் இவ்வாறு எழுதினார்: “மனிதரை ஏற்ற தாழ்வின்றி சமமாகவே வானம் படைத்திருக்கிறது.” மனிதரை உருவாக்கியதாக அவர் நினைத்த இயற்கையின் நியதியையே இங்கே “வானம்” என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட “வானம்” என்ற நியதியை பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் நோபல் பரிசு பெற்ற கெனிச்சி ஃபுகுயி. இந்த அண்டத்தின் மிகப் பெரிய இயற்கை சக்தியில் கெனிச்சி நம்பிக்கை வைத்தார். மத அடிப்படையில் “கடவுள்” என்ற பதத்திற்குச் சமமாக அது இருந்தாலும், அதை “இயற்கையின் தனித்துவம்” என்றே அழைத்தார்.
இடது: யுகிச்சி ஃபுகுஸாவா; வலது: கெனிச்சி ஃபுகுயி
2 இந்த அண்டத்திலுள்ள அனைத்தையும் இயங்க வைத்த நித்தியமான ஒன்று அல்லது ஒருவர் இருக்கிறார் என்றே இந்த அறிவுஜீவிகள் நம்பினார்கள். ஏன்? இதை சற்று கவனியுங்கள்: பூமியைவிட பத்துலட்சம் மடங்கு பிரமாண்டமான நட்சத்திரம்தான் சூரியன். ஆனால் இந்தச் சூரியனோ பால்வழி மண்டலத்தில் ஒரு தூசிபோல் இருக்கிறது. அதேசமயத்தில், இந்த அண்டத்திலுள்ள கோடாகோடி நட்சத்திர மண்டலங்களில் ஒன்றுதான் இந்தப் பால்வழி மண்டலம். இந்த நட்சத்திர மண்டலங்கள் ஒன்றை விட்டு ஒன்று மிக வேகமாக விலகிச் செல்கின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் குறிப்பிடுவதாக தெரிகிறது. இந்த அண்டத்தை இயங்க வைப்பதற்கு பேரளவான இயக்க ஆற்றல் தேவைப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆற்றலுக்கு ஊற்றுமூலம் யார் அல்லது எது? “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; இவற்றை படைத்தவர் யார்?” என பைபிள் கேட்கிறது. “அவர் அவற்றின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவற்றையெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறவர்; அவருடைய எல்லையற்ற இயக்க ஆற்றலாலும் அவருடைய மகா வல்லமையினாலும், அவற்றில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:25, 26, NW) ஆகவே, இந்த அண்டத்தை இயங்க வைத்த ஒருவர்—‘எல்லையற்ற இயக்க ஆற்றலுக்கு’ காரண கர்த்தா—இருந்தார் என்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
சொம்ப்ரேரோ மண்டலம்
3 இந்தப் பூமியில் உயிர் எப்படி வந்தது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். பரிணாமவாதிகள் சொல்வதுபோல் உயிர் தானாக வந்திருக்க முடியுமா? உயிர்-வேதியியலாளர் மைக்கேல் பிஹி இவ்வாறு கூறுகிறார்: “உயிரின் வேதியியல் செயல்முறைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை புரிந்துகொள்வதில் விஞ்ஞானம் பெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், மூலக்கூறு அளவில் உயிரியல் அமைப்பின் துல்லியத்தையும் சிக்கலான தன்மையையும் கண்டு விஞ்ஞானிகள் திணறிப்போயிருப்பதால் அவற்றின் ஆரம்பத்தை விளக்க முடியாதிருக்கிறார்கள். . . . விஞ்ஞானிகள் பலர் விளக்கங்களை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டதாகவோ அல்லது விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றோ அடித்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட உரிமை பாராட்டல்களுக்கு அதிகாரப்பூர்வமான அறிவியல் ஏடுகளில் எந்த ஆதாரமும் இல்லை. மிக முக்கியமாக, [உயிர்-மூலக்கூறு சார்ந்த] வடிவமைப்பின் அடிப்படையில் பார்த்தால், உயிரின் இயக்கமுறை பற்றிய டார்வினின் விளக்கம் குழப்பமான ஒன்றாகத்தான் எப்போதும் இருக்கும் என்பதற்கு பலமான காரணங்கள் இருக்கின்றன.”
“புரோட்டீன் மடிந்திருக்கும் விதம் . . . முப்பரிமாணத்தில் படத் துண்டுகளை இணைக்கும் ஜிக்சா புதிர் போல் காட்சியளிக்கலாம்” என மைக்கேல் பிஹி கூறுகிறார். இருந்தாலும், மனித உடலில் இப்படிப்பட்ட புதிர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். இப்புதிர்களுக்கு விடை காண விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைத்தவர் யார்?
4 புத்திக்கூர்மையின் அவசியமில்லாமல் உயிர் தானாகவே வந்தது என்ற கோட்பாட்டை உண்மையில் உங்களால் நம்ப முடிகிறதா? “அண்டத்திலேயே மிக சிக்கலான பொருள்” என சிலர் நினைக்கும் மனித மூளையை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு, நாம் என்ன முடிவுக்கு வரலாம் என்பதை இப்போது பார்க்கலாம். டாக்டர் ரிச்சர்டு எம். ரிஸ்டாக் இவ்வாறு கூறுகிறார்: “நியூரல்-நெட்வொர்க் கம்ப்யூட்டர்களிலேயே அதிநவீனமானவற்றின் செயல்திறன் சாதாரண ஈ-யின் திறனில் . . . சுமார் பத்தாயிரத்தில் ஒரு பாகமே.” சாதாரண ஈ-யின் மூளையைவிட மனித மூளை எத்தனையோ மடங்கு உயர்வானது. மொழிகளை கற்றுக்கொள்வதற்கு அதில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. அதுவாகவே தன்னை சரிப்படுத்திக்கொள்கிறது, புரோகிராம்களை மாற்றியமைத்துக் கொள்கிறது, அதன் திறனை மேம்படுத்திக்கொள்கிறது. ‘சாதாரண ஒரு ஈ-யினுடைய திறனில் . . . பத்தாயிரத்தில் ஒரு பாகமே’ உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைக்க புத்திக்கூர்மையுள்ள ஒருவர் அவசியம் என்பதை சந்தேகமின்றி ஒத்துக்கொள்வீர்கள். அப்படியானால் மனித மூளையை வடிவமைத்தவரைப் பற்றி என்ன?a
5 சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர் தங்களுடைய அற்புதமான உடலமைப்பைப் பற்றி முழுமையாக அறிந்திராத காலத்தில், மனித உடலின் அமைப்பைப் பற்றி தியானித்த ஒரு பைபிள் எழுத்தாளர் இவ்வாறு சொன்னார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” டிஎன்ஏ மூலக்கூறுகளைப் பற்றி தெரியாமலேயே அவர் இப்படி எழுதினார்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (சங்கீதம் 139:14, 16) அவர் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்? ‘எல்லையற்ற இயக்க ஆற்றலால்’ இந்த அண்டத்திலுள்ள அனைத்தையும் உருவாக்கியவர் யார்?
எதற்கு அதிக செயல்திறன்: அதிநவீன நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டருக்கா சாதாரண ஈ-க்கா?
6 பைபிளின் முதல் வசனமே இவ்வாறு கூறுகிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:1) அவர்தான் பைபிளின் ஆசிரியர், பைபிளை எழுதுவதற்கு ஏவியவர். தம்மை ஒரு நபர் என்றும், தம்மோடு அர்த்தமுள்ள உறவை வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் வெளிப்படுத்துகிறார்.
a கூடுதலான விளக்கங்களை உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் 2 முதல் 4 வரையுள்ள அதிகாரங்களில் அறிந்துகொள்ளலாம்.