பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!
பூமியையும் அதிலுள்ள எல்லா பொருட்களையும் உண்டாக்கினவர் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவே இந்தச் சிறிய புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பூமியை உண்டாக்கின கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள போகிறீர்கள். கடவுள் ஏன் மனிதனை உண்டாக்கினார் என்பதையும், நீங்கள் எப்படிப் பூமியில் வாழ்க்கையை என்றென்றுமாக அனுபவிக்கலாம் என்பதையும்கூட இங்கு விளக்குவோம்.
இந்தக் காரியங்களை உங்கள் மனக் கண்கள் முன்னால் கொண்டுவர இதிலுள்ள பல படங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். இதிலிருந்து அதிக நன்மையைப் பெறுவதற்கு பெரும்பாலான படங்களுக்குப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்களையும் வாசிக்க வேண்டும். இப்படியாக பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய நல்ல வாக்குறுதிகளையும் அவற்றின் நிறைவேற்றத்தை அனுபவிக்க நீங்கள் செய்ய வேண்டியதைக் குறித்து கடவுள் என்ன சொல்லுகிறார் என்பதையும் நீங்களே வாசித்துப் பார்க்கலாம்.
இந்தச் சிறிய புத்தகத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுவீர்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், அவர்களும் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள இதை உபயோகிக்கலாம். ஒருவேளை எழுத படிக்க தெரியாத முதியோர் பலர் வாழும் தேசத்தில் நீங்கள் வசித்து வந்தால், இந்தப் படங்களைக் கொண்டு அவர்களும் கடவுளுடைய நோக்கங்களை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவலாம். அப்படியே அவர்களும் தங்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு உதவலாம்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படிப்பது அநேக ஆசீர்வாதங்களை அடைவதற்கான வழியை உங்களுக்குத் திறக்கும். அதேசமயத்தில், இதே பூமியில் என்றென்றும் வாழ்வது எப்படி என்பதை நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்து காண்பிக்கவும் உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.