அறிமுகம்
‘மரியாதை என்ன விலை?’ என்று கேட்கும் நிலைமைக்கு உலகம் வந்துவிட்டது. அதனால் மரியாதை காட்டுகிறவர்களை மக்கள் அதிசயப் பிறவியைப் போல் பார்க்கிறார்கள்.
இன்று நிறைய பேர் அப்பா-அம்மா, வயதானவர்கள், போலீஸ்காரர்கள், முதலாளி, டீச்சர் என யாருக்குமே துளிக்கூட மரியாதை காட்டுவதில்லை. கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வது சோஷியல் மீடியாவில் சர்வசாதாரணம் ஆகிவிட்டது. “மரியாதை குறைவாக மற்றவர்களை நடத்துவது இன்று அதிகமாகிக்கொண்டே வருகிறது. அது மக்களுக்கு அப்பட்டமாகவும் தெரிகிறது, அது அவர்களுக்குக் கஷ்டமாகவும் இருக்கிறது” என்று ஹாவெர்டு பிஸ்னஸ் ரிவ்யூ என்ற பத்திரிகை சொல்கிறது.