எல்லா இடத்திலும் அநியாயத்தைப் பார்த்தேன்
வட அயர்லாந்தில் 1965-ஆம் ஆண்டு ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். டெரி மாவட்டத்தில் “ட்ரபிள்ஸ்” என்றழைக்கப்பட்ட போராட்டக் காலத்தின்போது நான் வளர்ந்தேன். வன்முறைமிக்க அந்தப் போராட்டம் கத்தோலிக்க மதத்தினருக்கும் புராட்டஸ்டன்ட் மதத்தினருக்கும் இடையே 30 வருட காலமாக நடந்துவந்தது. சிறுபான்மை கத்தோலிக்க மதத்தினர் பெரும்பான்மை புராட்டஸ்டன்ட் மதத்தினரால் அநியாயமாய் நடத்தப்படுவதாக உணர்ந்தார்கள்; தேர்தல் பித்தலாட்டம், போலீஸ் அராஜகம், வேலை ஏய்ப்பு, வீட்டு மோசடி ஆகியவற்றில் ஈடுபடுவதாக புராட்டஸ்டன்ட் மதத்தினரைக் குற்றம் சாட்டினார்கள்.
எல்லா இடத்திலும் அநியாயத்தையும் ஏற்றத்தாழ்வையும்தான் பார்த்தேன். எனக்கு எதிராக நடந்த அநியாயங்களுக்குக் கணக்குவழக்கே இல்லை; பல முறை அடிக்கப்பட்டேன், காரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டேன், காவலரால் அல்லது ராணுவத்தாரால் குற்றவாளிபோல் நடத்தப்பட்டேன். நொந்துநூலாகிப்போன நான் ஒரு முடிவுக்கு வந்தேன்: ‘ஒன்று... குட்டக்குட்டக் குனிய வேண்டும் அல்லது அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும்.’
பிரிட்டிஷ் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட 14 நபர்களின் நினைவாக, 1972-ல் ‘இரத்தக் கறைபடிந்த ஞாயிறு’ ஊர்வலத்தில் கலந்துகொண்டேன். 1981-ல் உண்ணாவிரதமிருந்து உயிரை இழந்த கைதிகளைக் கௌரவிக்கும் விதத்தில் நடந்த போராட்டத்திலும் கலந்துகொண்டேன். தடை செய்யப்பட்ட கொடிகளை நாட்டினேன். பொது இடங்களில் பிரிட்டிஷ் நாட்டினருக்கு விரோதமாகப் தாறுமாறாய் எழுதினேன். ஒரு கத்தோலிக்கர் அநியாயத்தை எதிர்ப்பட்டாலோ கொலை செய்யப்பட்டாலோ சட்டெனக் கலவரம் வெடித்துவிடுகிற அபாயம் நிலவியது. சாதாரண ஊர்வலங்கள் பெரும்பாலும் அடிதடி கலாட்டாவில்தான் போய் முடிவடைந்தன.
நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு, லண்டனுக்குக் குடிமாறிச் சென்றபோது, ஏழைகளுக்குப் பாதகமாகவும் வசதியுள்ளவர்களுக்குச் சாதகமாகவும் இருந்த அரசியல் திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டேன். தொழிலாளர் சங்கத்தோடு சேர்ந்து வேலை நிறுத்தப் போராட்டங்களிலும் ஈடுபட்டேன். 1990-ல் அநியாய வரிவசூலிப்பை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டேன்; அந்தப் போராட்டத்தில்தான் ட்ராஃபில்கர் சதுக்கம் சின்னாபின்னமானது.
ஆனால் காலப்போக்கில், ஏமாற்றம்தான் மிஞ்சியது. போராட்டங்கள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, வெறுப்புத் தீயைத்தான் அதிகமதிகமாக மூட்டிவிட்டன.
நல்லெண்ணம் இருந்தாலும் மனிதர்களால் நியாயமான, சமத்துவமான ஓர் உலகத்தை உருவாக்க முடியாது
இந்தச் சமயத்தில்தான், என் நண்பர் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். கடவுள் நம்முடைய துன்பங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார், கூடிய விரைவில் எல்லாத் தீமைகளுக்கும் முடிவுகட்டிவிடுவார் என்று பைபிளிலிருந்து அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:3, 4) நல்லெண்ணம் இருந்தாலும் மனிதர்களால் நியாயமான, சமத்துவமான ஓர் உலகத்தை உருவாக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன். அதோடு, உலகப் பிரச்சினைகளுக்குக் காரணமான காணமுடியாத தீய சக்திகளை மேற்கொள்ள கடவுளின் வழிநடத்துதலும் அவரது சக்தியும் நமக்குத் தேவை என்பதைப் புரிந்துகொண்டேன்.—எரேமியா 10:23; எபேசியர் 6:12.
அநியாயங்களுக்கு எதிராக நான் போராடியது... மூழ்கிக்கொண்டிருக்கிற கப்பலில் ஒரு சிறிய ஓட்டையை அடைக்க முயலுவது போன்றது என்பதை இப்போது நன்றாகவே தெரிந்துகொண்டேன். இந்தப் பூமியில் அநியாயம் இல்லாத ஒரு காலம்... ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு காலம் வரப்போகிறது என்ற விஷயம் எவ்வளவாய் நிம்மதியளிக்கிறது!
யெகோவா தேவன் “நியாயத்தை விரும்புகிறவர்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:28) எனவே, நீதிநியாயத்தை அவர் நிச்சயம் நிலைநாட்டுவார், மனித அரசாங்கங்கள் செய்ய முடியாததை அவர் செய்வார். (தானியேல் 2:44) கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள் அல்லது www.jw.org என்ற எங்கள் வெப்சைட்டைப் பாருங்கள்.(g13-E 07)