“இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது”!
“அல்ஸைமர் நோய்—துன்பத்தைக் குறைத்தல்” என்பது செப்டம்பர் 22, 1998 விழித்தெழு!-வின் அட்டைப்பட தொடர்கட்டுரை. அக்கட்டுரையில் பயனுள்ள பல ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. ஏராளமான வாசகர்கள் இவற்றுக்கு நன்றி மடல் வரைந்திருந்தனர். அவற்றில் சிலரது குறிப்புகளை உங்கள்முன் வைக்கிறோம்:
“இரண்டு வருடங்களுக்கு முன்பு என் கணவருக்கு அல்ஸைமர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமுதல் அந்நோயைப் பற்றி எக்கச்சக்கமாக வாசித்துள்ளேன். ஆனால் எல்லாவற்றையும்விட விழித்தெழு! தான் சூப்பர். நான் வாசித்த எல்லா விஷயத்தையும் சுருக்கமாக தொகுத்துக் கூறிவிட்டது. என் கணவரைச் சேர்த்துள்ள ஆஸ்பத்திரியிலுள்ள டாக்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் இப்பத்திரிகையைக் கொடுத்து மகிழ்ந்தோம்.”—எம். எல்., ஐக்கிய மாகாணங்கள்.
“இரண்டு வருடத்திற்கு முன்புதான் என் தாயார் காலமானார். அவருக்கு 83 வயது. அவர் 1937 முதல் சாகும்வரை சாட்சியாகவே இருந்தார். அவரது உடல் பலவீனமானதையும் ஞாபகசக்தியோ கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டதையும் கண்டது ரொம்ப வேதனைதரும் விஷயம்! இப்படிப்பட்ட பயனுள்ள, ஆறுதல்தரும் விஷயத்தை அளித்ததற்கு நன்றி. இந்நோயால் அவதிப்படுபவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் இக்கட்டுரைகள் அருமருந்து. அத்துடன், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைக்கும் அவர்களது அவல நிலையை சமாளிக்க இவை மிகவும் உதவும்.”—டி. சி., ஐக்கிய மாகாணங்கள்.
“என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் அல்ஸைமர் நோய் இருப்பதாக அவர்களது டாக்டருக்கும் மற்ற நிபுணர்களுக்கும் தோன்றியது. அதனால் இந்தப் பத்திரிகையை என் மாமாவுக்கு அனுப்பி வைத்தேன். இதுவே அவரது பதில்: ‘அல்ஸைமர் நோய் பற்றி கம்ப்யூட்டரில் அலசினேன். அதைப் பற்றி எக்கச்சக்கமான விஷயம் கிடைத்தது. என்னவென்று பார்த்தால் வாசிக்க வாசிக்க வந்துகொண்டே இருந்தது. இதற்கெல்லாம் நேரம் வேண்டுமே! அதனால் இந்த நோயைப் பற்றி நீ அனுப்பியிருந்த விழித்தெழு! கட்டுரைகளை வாசித்தேன். எவ்வளவு தேவையோ அவ்வளவு விஷயம் மட்டும் அதில் அடங்கியிருந்தது. நன்றாக புரிந்துகொள்ளும் விதத்திலும் எழுதப்பட்டிருந்தது! நான் அதை மறுபடியும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நம் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் கொடுக்கலாமில்லையா?’ ”—பி. ஈ., கனடா.
“நான் நர்ஸிங் கோர்ஸ் நான்காம் ஆண்டு மாணவி. அல்ஸைமர் பற்றி நீங்கள் எழுதியிருந்த தொடர்கட்டுரைக்கு என் பாராட்டு. முதுமையியல் (ஜெரான்டாலஜி)—அல்ஸைமர் பற்றிய லெக்சர்களில் சொல்லப்பட்ட அப்-டு-டேட் ஆலோசனைகளையே உங்கள் பத்திரிகையும் வழங்கியது. என் பேஷன்ட்டுகளை கவனித்துக்கொள்ளும்போதும், அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கு உதவும்போதும் இந்தக் கட்டுரைகளிலுள்ள விஷயத்தின்படியே செய்ய நினைத்திருக்கிறேன்.”—ஜி. எல்., ஐக்கிய மாகாணங்கள்.
“என் அம்மா ஆகஸ்ட் 18, 1998-ல் இறந்துவிட்டார். அதே வாரத்தில்தான் இந்தப் பத்திரிகையும் என் கைக்கு வந்தது. அப்பப்பா, அல்ஸைமர் ரொம்ப பொல்லாத வியாதி. அதுவும் கடைசிகட்டத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வியாதி இருக்கிறவர்களுக்கு மட்டுமில்லை, அவர்களைப் பிரியத்தோடு பராமரிப்பவர்களுக்கும் வேதனைதான்! நாம் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் சகித்துவருகிறோம் என்பதை யெகோவா பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார் என்பதற்கு இந்தக் கட்டுரைகளே அத்தாட்சி, இதில் என்ன சந்தேகம்! நம்மீது அவர் காட்டும் அக்கறைக்கு மிக்க நன்றி!”—எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்.
“இக்கட்டுரைகளுக்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எப்படி என்பது பற்றித்தான் நான் ஆய்வுசெய்து வருகிறேன். நிஜமாகவே இத்தகவல் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது.”—டி. என்., இத்தாலி.
“கடந்த ஒரு வருடமாக என் அம்மாச்சி என்னோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு டிமென்ஷியா நோய். அவர்களுக்கு புத்தி பிசகிவிட்டது. அதனால் என்னைப் பார்த்தாலே எட்டிக்காய் போல அவர்களுக்கு கசக்கிறது. என் குடும்பத்துக்கும் யெகோவாவுக்கும் செய்ய வேண்டிய கடமையை நான் செய்யத் தவறிவிட்டதாகவே எனக்குப் பட்டது. உங்கள் கட்டுரையைப் படித்தபின்புதான் எங்கெல்லாம் நான் தவறியிருக்கிறேன் என்றும், எப்படியெல்லாம் இன்னும் நன்றாக நடந்துகொள்ளலாம் என்றும் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களால் முடிந்தது அவ்வளவுதான் என்பதை எப்பொழுதும் மறந்துவிடக் கூடாது என்பதன் முக்கியத்துவம் புரிகிறது.”—எஸ். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்.
“நானும் என் கணவரும் பல வருடம் முழுநேர பயனியர்களாய் இருந்தோம். அதை நிறுத்துவதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்ன செய்ய, என் அம்மாவை கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்! அல்ஸைமர் நோய் பற்றி நிறைய கட்டுரைகளையும் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். ஆனாலும் யெகோவாவின் அமைப்பிலிருந்து வந்த பயனுள்ள தகவல் என் இதயத்தைத் தொட்டுவிட்டது. நினைத்த நேரமெல்லாம் இக்கட்டுரைகளை வாசிப்பதற்காக இப்பத்திரிகையை கைக்கெட்டிய தூரத்தில் வைத்துக்கொள்வேன்.”—பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்.
“எனக்கு 12 வயது. அல்ஸைமர் நோய் பற்றிய கட்டுரைகளைப் படிப்பதில் அளவில்லா ஆர்வம் எனக்கு. ஏனென்றால் என் பூட்டனாருக்கும் எனக்குத் தெரிந்த அருமையான முதிர்ந்த கிறிஸ்தவ சகோதரிக்கும் இந்நோய்தான். இந்நோயைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ளவும், என்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று புரிந்துகொள்ளவும் இக்கட்டுரைகள் உதவின. ஆஹா, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ காலம் வரும்போது எவ்வளவு நன்றாயிருக்கும்!” (ஏசாயா 33:24)—பி. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்.
“இந்த இதழில் வந்திருந்த கட்டுரைகளின் முக்கிய குறிப்புகளை நானும் என் 15 வயது மகளும் உடனே டிஸ்கஸ் செய்தோம். கனிவான முகத் தோற்றம், மென்மையான குரலில் பேசுவது, எப்பொழுது பார்த்தாலும் நோயாளியிடம் குறை கண்டுபிடிக்காமல் இருப்பது, இன்னும் இதுபோன்ற பல சிபாரிசுகள் மிகவும் பயனுள்ளவை. இந்தப் பத்திரிகைகளை காப்பக பணியாளர்களுக்கும் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.”—ஒய். கே., ஜப்பான்.
“உங்களது அற்புதமான கட்டுரைகளுக்கு எங்கள் குடும்பத்தினர் காட்டும் நன்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என் மாமியார் தன்னுடைய வேலையைத் தானே செய்துவந்தவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களால் செய்ய முடியவில்லை என்று தெரிந்ததும் அவர்களை எங்களோடு வைத்துக்கொள்ளும்படி அமெரிக்காவுக்கு கூட்டிவந்தோம். அவருக்கு வயது 80. இந்த மாற்றம் அவருக்கு பேரிடியாக இருந்தது. விழித்தெழு! பத்திரிகையில் வந்த கட்டுரையை வாசிக்கும்வரை, அவருடைய நிலை ஏன் திடீரென இவ்வளவு மோசமாகியது என்று எங்களுக்குப் பிடிபடவில்லை. அது, இந்நோயைப் பற்றி விலாவாரியாக விவரித்து, இந்நோயாளியை எப்படி நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கியது. அவர்களது டாக்டர்களே தெரிந்திராத அநேக கேள்விகளுக்கான பதிலை அளித்தது. ஆகவே உங்களுக்கு மிக்க நன்றி! எங்களைப் போன்ற அனைவருக்கும் உதவுவதற்காகவே நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்காக யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள் மேல் பொழியட்டும்.”—ஓ. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்.
“விளக்கமான உங்கள் கட்டுரைக்காக எங்கள் வாழ்த்துக்கள்! எங்கள் பாட்டிமாவை பராமரிக்க வேண்டிய சமயம் பார்த்து அது வந்துசேர்ந்தது. இந்த விழித்தெழு! எங்களுக்கென்றே எழுதப்பட்டது போலவே எங்கள் குடும்பத்தாருக்குத் தோன்றியது. ஏனென்றால் எங்களுக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் ஆறுதலையும் உதவியையும் அளித்தது. இதுபோன்ற கட்டுரைகளுக்கு உங்களுக்கு மிக்க நன்றி! அவை பொருத்தமான சமயத்தில் வந்துசேருகின்றன.”—ஆர். என்., ஜாம்பியா.