வியட்நாமின் டிராகன் வளைகுடாவிற்கு விஜயம்
ஹனாய் நகரம். புழுக்கமான ஒரு நாள். வியட்நாமின் மிக ரம்மியமான ஸ்தலங்களுள் ஒன்றாகிய ஹா லங் வளைகுடாவிற்கு—அல்லது பள்ளமான டிராகன் வளைகுடாவிற்கு செல்ல, கிழக்கு நோக்கி 165 கிலோமீட்டர் பிரயாணத்திற்காக பஸ்ஸில் ஏறினோம். உலகப் பிரசித்திப் பெற்ற வளைகுடா இது. இதன் பிரமிக்க வைக்கும் எழிலைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுதோ, அந்த அழகை எங்கள் கண்களால் பருக சென்று கொண்டிருக்கிறோம்.
நடுப்பகலில், எங்கள் பஸ் வளைகுடாவின் விளிம்பில் வந்து நின்றது. ஆனால், நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை இன்னும் அடையவில்லை. ஹா லங் வளைகுடாவின் மனதை மயக்கும் மரகதப்பச்சை நீரோடு, அதன் 1,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் சிதறிக்கிடக்கும் 3,000 தீவுகளின் இயற்கை அழகும் சேர்ந்து, இதை புகழ்மிக்க ஒன்றாக்குகிறது. ஏனென்றால், அதில் இருக்கும் ஒவ்வொரு தீவுமே தனிச்சிறப்பு வாய்ந்தது. அவற்றில் சிலவற்றை பார்வையிட நாங்கள் விரும்பினோம். எனவே, ஒரு படகில் ஏறினோம். கொஞ்ச நேரத்தில், மறக்கமுடியாத துணிச்சலான செயலில் இறங்கி மெய்மறந்தோம்.
அரை மணிநேர படகுப் பிரயாணத்திற்கு பிறகு, குட்டிக்குட்டி தீவுகள் நிறைந்த கண்கவர் வளைகுடாவை அடைந்தோம். படகோட்டிகள் நங்கூரத்தைப் போட்டனர். கரும்பச்சை நிற நீரில் நீந்தி புத்துயிர்ச்சி அடைந்தோம்! நாங்கள் தண்ணீரில் கையையும் காலையும் அடித்துக்கொண்டிருந்தது, விரைவில் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டியது. எங்களை சந்திக்க சிறு படகுகளில் வந்தனர். இந்தப் பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பங்களும் மிதக்கும் வீடுகளில் அல்லது படகுவீடுகளில்தான் வாழ்கின்றனர்.
ஹா லங் வளைகுடாவாசிகள் மீனவர்கள் என நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆனால், மறைந்துவருகிற கலையாகிய பாய்மரம் செய்தலும் அவர்களது தொழில் என்பதை நீங்கள் ஊகித்திருக்கமாட்டீர்கள். “படகுகளுக்குத் தேவையான பாய்மரங்களை இன்னும் கைத்தொழிலாக செய்யும் குடும்பங்கள் வாழும் சில இடங்களில் ஹாலங்கும் ஒன்று. முரட்டு பருத்தியாலான பல துண்டு துணிகளை கைகளாலேயே ஒன்று சேர்த்து பட்டு நூலால் தைக்கின்றனர். தைத்து முடிக்கப்பட்ட பாய்மரத்தை, சேணை குடும்பத்தைச் சேர்ந்த பீட்ரூட் போன்ற செடியில் இருந்து எடுக்கப்படும் திரவத்தில் முக்கி எடுப்பர். பூச்சிகளால் அரிக்கப்படுவதையோ, பூசணம் பிடிப்பதையோ இது தவிர்க்கிறது. இப்படி, மூன்று அல்லது நான்கு தடவை, இத்திரவத்தில் முக்கி எடுத்து காயவைப்பர். இது, படகின் பாய்க்கு செம்பழுப்பு நிறத்தைக் கொடுக்கிறது” என்று மூன் டிராவல் ஹாண்ட்புக் ஆன் வியட்நாம் என்ற புத்தகத்தில் மைக்கேல் பக்லே கூறுகிறார்.
ஹா லங் வளைகுடா, பள்ளமான டிராகன் வளைகுடா என்ற பெயரை எப்படி பெற்றது என்று வியந்துகொண்டு இருக்கிறீர்களா? எந்த ஒரு டிராகனையும் நாங்கள் வழியில் பார்க்கவில்லை! இருந்தாலும், மலைகளில் வாழ்ந்த மிகப் பெரிய டிராகன் ஒன்று ஹா லங் வளைகுடா தீவுகளை ஏற்படுத்தியது என புராணக்கதைகள் சொல்லுகின்றன என்று கேள்விப்பட்டோம். “கரையை நோக்கி [அந்த டிராகன்] ஓடியபோது, அதன் துடுப்புபோன்ற வால், பள்ளத்தாக்குகளையும் பிளவுகளையும் உண்டாக்கின; அது, கடலுக்குள் மூழ்கியபோதோ, அதன் வால் ஏற்படுத்திய பள்ளங்களில் எல்லாம் தண்ணீர் நிரம்பியது. கண்களுக்கு தெரியக்கூடிய கொஞ்ச நிலப்பகுதியையே விட்டுவைத்தது” என த லோன்லி ப்ளானட் கைய்ட்புக் ஆன் வியட்நாம் என்ற புத்தகம் விளக்குகிறது.
ஆனால், உண்மையில் இந்த தீவுகளை வித்தியாசமான அளவுகளிலும் வடிவங்களிலும் அமைத்த உண்மையான சக்திகள் காற்றும், தண்ணீருமே. உதாரணமாக, சண்டையிடும் சேவல் சிறு தீவு என்றழைக்கப்படும் ஹோன் கா சாய் தீவை கற்பனா சக்தியோடு நீங்கள் பார்த்தால், இரண்டு சேவல்கள் சண்டையிடுவது போல் காட்சியளிக்கிறது.
அடுத்த நாள் செய்யவேண்டிய பயணத்தை ஆர்வத்தோடு எதிர்பார்த்து, பொழுது சாயும்நேரம் துறைமுகத்திற்கு திரும்பினோம். காலை சிற்றுண்டிக்குப் பிறகு, அந்தப் பகுதியில் இருக்கும் குகைகளை பக்கத்தில் சென்று பார்க்க ஒரு சிறிய பாய்மரப் படகில் பயணப்பட்டோம். வளைகுடா முழுவதும் மூடுபனி இருந்ததால், பனிப்படலத்தினூடே எழில்கொஞ்சும் இயற்கை வனப்புகளை ரசித்தோம். பல குகைகளை பார்வையிட்டோம். அதில் ஒன்று, ஹாங் ஸாவ் கோ—மரக்கம்பங்களின் குகை என்றழைக்கப்படுகிறது. இது மூன்று அறைகளை உடையது. இம்மூன்று அறைகளும் 90 படிகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த குகைக்கு இப்பெயர் ஏன் வந்தது? “மூன்றாவது அறை என்ற வியட்நாமியப் பெயரில் இருந்து வந்ததே இக்குகையின் பெயர். இந்த அறை, 13-ம் நூற்றாண்டில் கூர்மையான மூங்கில் கம்பங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டது. படையெடுத்துவரும் எதிரி குப்லாய் கானை முறியடிக்க, ட்ரான் ஹங் டாவ் [வியட்நாமிய ராணுவ தலைவன்], பக் டங் நதிக்கரையில் இந்தக் கூர்மையான மூங்கில் கம்பங்களை நட்டுவைத்தான்” என த லோன்லி ப்ளானட் கைய்ட்புக் ஆன் வியட்நாம் விவரிக்கிறது.
குகையின் மேல் ஏறி, உயரத்தில் இருந்து கீழே உள்ள காட்சியைப் பார்க்க திரும்பினோம். நாங்கள் கண்ட காட்சி என்னே பிரமாண்டமான காட்சி! சீக்கிரம் எடுங்கள் காமிராவை! குகைகளின் தொங்கூசிப் பாறைகள் முன்னணியிலும் நீரில் இலேசாக அசைந்தாடிக்கொண்டிருக்கும் எங்கள் படகு நடுவிலும், நீலமும் பச்சையும் கலந்த வளைகுடா நீர் பின்னணியில் இருக்க, சூப்பராக ஒரு ஒரு ஃபோட்டோ எடுக்க அருமையான சூழல்! ஹா லங் வளைகுடா, ஃபோட்டோ பிரியர்களின் நந்தவனம். கலைஞனின் கலைப்பசி தீர்க்கும் சிறப்பிடம்.
அந்த நாளின் பிற்பகுதியில், பெரிய தீவு ஒன்றை அருகில் சென்று பார்க்க ஒரு சிறிய மோட்டார் படகில் ஏறினோம். திடீரென, இருள் கவ்வியது. மலை எங்களை அப்படியே விழுங்கிவிட்டது போலவே இருந்தது! அப்போது நாங்கள் ஒரு குகையை கடந்துகொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், எதிர்திசைக்கு வந்து விட்டோம். அதிசயமான விஷயம் என்னவென்றால், ஒரு பெரிய ஏரியில் இருப்பதை உணர்ந்தோம். எல்லா பக்கமும் சுண்ணாம்புப் பாறைகள் பெரும் சுவர்களாக உயர்ந்து நின்றன. பாறைகளில் பாசி படர்ந்திருந்தது. படகோட்டிகள், என்ஜினை நிறுத்திவிட்டார்கள். எங்கும் ஒரே மயான அமைதி. அதை கலைக்கும் ஒரே சப்தம் பறவைகளின் கிரீச் கிரீச் ஒலியே. அந்த நிசப்தமான நேரத்தின் நினைவுகள் எங்கள் நினைவில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.
ஹனாய்க்குத் திரும்ப வேண்டிய நேரம் ரொம்ப சீக்கிரமே வந்துவிட்டது. எங்களுடைய சுற்றுலா பயணம் நீண்டதாக இல்லையே என்ற குறைதான். இருந்தாலும், அநேக நினைவலைகளை—தீவுகளின் கரடுமுரடான முகடுகள், பவனி வரும் பாய்மர கப்பல்கள், மிக முக்கியமாக, வியட்நாமின் அழகின் சின்னமாகிய ஹா லங் வளைகுடா இவற்றின் நினைவுகளை—எங்கள் இருதயத்தில் சுமந்துவந்தோம்.
இந்த எழில்கொஞ்சும் நாட்டின் ரம்மியமான மற்ற இடங்களையும் பார்க்கும் நாளை எதிர்நோக்கி இருக்கிறோம். படைப்பில் இத்தனையநேக காட்சிகளையும் அழகையும் கொட்டிக் கொடுத்திருப்பதற்கும் மாசுபடாத ஹா லங் வளைகுடாவைப் போலவே இந்த முழு உலகமும் ஒரு நாள் மாறும் என்று வாக்குறுதி அளித்திருக்கும் நம் படைப்பாளராகிய யெகோவா தேவனுக்கு நாங்கள் நன்றிகூறுகிறோம்.—அளிக்கப்பட்டது.