வெடிகுண்டுகளிலிருந்து தப்பி ஓடினோம் —50 வருடங்களுக்குப் பிறகு!
“கொஞ்ச நேரத்தில் இங்கே குண்டுகள் வெடிக்கப்போகின்றன. எல்லாரும் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுங்கள்!”
ஒரு போலீஸ்காரர் என் கணவரிடமும் என்னிடமும் சொன்ன வார்த்தைகள்தான் இவை; வீட்டைவிட்டு வெளியேறி, பக்கத்திலிருந்த ஒரு கான்க்ரீட் பதுங்கு குழிக்குள் மறைந்துகொள்ளும்படி அவர் எங்களை எச்சரித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டு நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். ஏனென்றால் அது போர் நடந்துகொண்டிருந்த ஒரு பகுதி அல்ல; மைக்ரோனீஷியாவிலுள்ள மார்ஷல் தீவுகளில், அழகான பவளத் தீவுக்கு வெளியே குடியிருந்த எங்கள் நண்பர்களைப் பார்க்கத்தான் போயிருந்தோம்.
தராவா என்ற சிறு தீவில் குடியிருந்த என் சிநேகிதியோடும் அவளது கணவரோடும் ஒரு வாரம் தங்கிவர நாங்கள் அங்கே சென்றிருந்தோம். அந்தத் தீவில் அவள் மாத்திரமே யெகோவாவின் சாட்சியாய் இருந்தாள்; அங்கு வசித்த மக்களுக்கு பிரசங்கிப்பதற்காக அவளுக்கு உதவ நாங்கள் விரும்பினோம்.
மார்ஷல் தீவுவாசிகள் நட்போடு பழகுகிறவர்கள், பைபிளைப் பற்றி பேசுவதில் ஆர்வமுள்ளவர்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் சமீபத்தில் அந்த உள்ளூர் மொழியில் வெளியிடப்பட்டிருந்ததால், நிறைய பிரதிகளை கொடுப்பதற்கு எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் பெற விரும்பிய அனைவரும், அதை தாங்கள் கண்டிப்பாக வாசிக்கப்போவதாக சொன்னார்கள்; மேலும், பேய்களை அண்டவிடாமலிருக்க, கென் கராவன் அல்லது “அதிர்ஷ்டப் பொருளாக” அதைப் பயன்படுத்த மாட்டார்களெனவும் எங்களுக்கு உறுதியளித்தார்கள். அங்குள்ள பெயர்போன சம்பிரதாயம் என்னவென்றால், பைபிளிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்து சுருட்டி ஒரு பாட்டிலுக்குள் வைத்து அதை ஒரு கம்பத்தில் அல்லது அருகிலுள்ள ஒரு மரத்தில் தொங்கவிடுவது; அது கெட்ட ஆவிகளை அண்டவிடாதென நம்புவதால் அவ்வாறு செய்கிறார்கள்.
நாங்கள் அங்கு அநேக நாட்களை சந்தோஷமாக கழித்தோம்; ஆனால் சனிக்கிழமையன்றோ, அந்தச் சூழ்நிலை மாறப்போவதை சீக்கிரத்திலேயே உணர்ந்தோம். அந்நாள் அதிகாலை, தெளிவான வெதுவெதுப்பான கடல்நீர் குட்டையில் நீந்தினோம்; இந்த இதமான அனுபவத்தோடு அந்நாள் துவங்கியது. கடற்கரையிலிருந்து திரும்பி வரும்போது, சாம்பல்நிற கப்பல் ஒன்று வருவதைக் கவனித்தோம்; அதைப் பார்த்தபோது ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக மனதுக்கு பட்டது. விரைவில், அதில் வந்து இறங்கியவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஏழு அமெரிக்க ராணுவ வீரர்கள் அடங்கிய ஒரு குழு, இந்தத் தீவிலிருந்த பழம் குண்டுகளை வெடிக்கச்செய்ய வந்திருப்பதாக ஒரு போலீஸ்காரர் விளக்கினார். பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, வீடுகளிலிருந்து அனைவரையும் வெளியேற்றி, இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்கள் கட்டிவைத்திருந்த பதுங்கு குழிகளில் அந்நாளைக் கழிக்கும்படி செய்தனர்.
தராவாவிற்கு செல்வோரது கண்களில் உடனே பளிச்சென்று தென்பட்டுவிடும் அந்தப் பதுங்கு குழிகள், கோரமான கடந்தகாலத்திற்கு அத்தாட்சி அளிக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்தத் தீவு அசல் வெப்பமண்டல பரதீஸ்போல் காட்சியளிக்கிறது; ஆனால் நெருங்கி வர வரத்தான் தெரிகிறது, தராவாவின் எழில், சுமார் 50 வருடங்களுக்கு முன் முடிவடைந்த போரின் பாதிப்புகளால் உருக்குலைந்திருப்பது. ஒருகாலத்தில் மிகப் பெரிய ஜப்பானிய விமானத்தளமாய் இருந்த இத்தீவு, எங்கு பார்த்தாலும் இரண்டாம் உலகப் போரை நினைவுபடுத்துகிறது. திரும்பிய பக்கமெல்லாம், போரை நினைப்பூட்டும் பொருட்கள்—போர் விமானங்கள், துப்பாக்கிகள், நீரடி ஏவுகணைகள்—துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன; இவற்றுடன் வெப்பமண்டல செடிகொடிகளும் அளவுக்கதிகமாய் வளர்ந்துகிடக்கின்றன.
என்றாலும், கதிகலங்க வைப்பவை, மிஞ்சியுள்ள வெடிகுண்டுகளே. போரின்போது, ஐ.மா. ராணுவ படைகள் 3,600 டன்னுக்கும் அதிகமான வெடிகுண்டுகளையும் தீக்குண்டுகளையும் ராக்கெட்டுகளையும் தராவாமீது எறிந்தன; அதுமட்டுமல்லாமல் ஜப்பானிய படைகள் வேறு, அவற்றின் குண்டுகளையும் ஆயுதங்களையும் நிலத்தில் வைத்திருந்தன. 50 வருடங்கள் பழமையான ஒரு குண்டு வெடிப்பது அரிது என்றாலும், அது திடீரென எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான், வெடிகுண்டுகளை அகற்றும் குழுக்கள், போர் முடிவடைந்த வருடமான 1945 முதற்கொண்டு இத்தீவிற்கு குறைந்தபட்சம் ஐந்து முறையாவது வந்திருக்கின்றன.
எச்சரிக்கை உண்மைதானா என நாங்கள் சந்தேகித்தோம்; ஆகவே வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் குழுவினர் வந்து இறங்கிய இடத்திற்கு சென்று அவர்களிடம் பேசினோம். எச்சரிக்கை உண்மை மாத்திரம் அல்ல, ஆனால் குண்டுகள் ஒருமணி நேரத்திற்குள் வெடிக்க ஆரம்பிக்கும் எனவும் அவர்கள் சொன்னார்கள்! நாங்கள் பதுங்கு குழியில் மறைந்துகொள்ளாவிட்டால், உடனடியாக அத்தீவை விட்டுச் செல்லவேண்டும் என எங்களிடம் சொன்னார்கள்.
எங்கள் சிநேகிதி தராவா தீவிலேயே இருந்துவிட தீர்மானித்தாள்; அவள் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ஒரு பெரிய பதுங்கு குழிக்குள் மற்ற அநேக குடும்பங்களோடு சேர்ந்து பதுங்கியிருந்தாள். அதைப் பற்றி அவள் எங்களுக்குப் பிற்பாடு சொன்னாள்; அந்தப் பழைய கான்க்ரீட் பதுங்கு குழியில் துப்பாக்கிகளுக்கான துளைவாயில்கள் மட்டும்தான் இருந்தனவாம், மற்றபடி ஜன்னல்களே இல்லையாம். அதுமட்டுமல்லாமல் உள்ளுக்குள் புழுக்கத்தையும் நெரிசலையும் தாங்கமுடியவில்லையாம். அங்கு அந்நாளைக் கழித்தது போர் நடைபெற்ற நாட்களை நினைவுபடுத்தியதாக சொன்னாள். சிறுபிள்ளையாக இருந்தபோது வெடிகுண்டுகள் தன்னைக் கவர்ந்திருந்தாலும் இப்போது அவை தன்னை மிரளவைத்ததாக அவள் ஒப்புக்கொண்டாள்.
அவளது கணவர், எட்டு கிலோமீட்டர் தள்ளியிருந்த வாலட் தீவிற்கு ஒரு சிறு மோட்டார் படகில் எங்களை அழைத்துச்செல்ல சம்மதித்தார். கரையைவிட்டு ஒருசில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், டமால் என்று வெடித்தது ஒரு குண்டு. திரும்பி தாராவை பார்த்தபோது, அத்தீவின் குடியிருப்புப் பகுதியருகே புகைமண்டலம் எழும்புவதைக் கவனித்தோம். சற்று நேரத்தில் இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது, அதன்பின் மூன்றாவது, இது காதையே கிழித்துவிட்டதுபோல் இருந்தது.
வாலட் தீவிலே பிரசங்கம் செய்தபடி அந்நாளைக் கழித்தோம்; தொலைதூரத்தில் அவ்வப்போது குண்டுகள் வெடிப்பது அந்நாள் முழுவதும் கேட்ட வண்ணம் இருந்தது. பல மாதங்களுக்கு முன்பாகவே பழைய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு குறியிடப்பட்டிருந்தன. யுத்த தளவாடங்கள் மூலை முடுக்கெல்லாம்—கடற்கரையோரங்களில், உள்நாட்டு விமான ஓடுதளம் அருகே, இன்னும் மக்களின் கொல்லைப்புறங்களிலும்கூட—காணப்பட்டன! குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, குண்டுகளை அப்புறப்படுத்தும் குழு, அநேக சிறு குண்டுகளை ஒன்றுதிரட்டி ஒட்டுமொத்தமாக வெடிக்க வைத்தது.
நாங்கள் தராவாவிற்கு திரும்பியபோது, சூரியன் அஸ்தமிக்கவிருந்தது. தீவை நெருங்கியபோது, சமையல் அடுப்புகளிலிருந்து வரும் வழக்கமான புகை தென்படவில்லை. ஏதோ சிக்கல் என புரிந்தது. திடீரென, ஒரு சிறு படகு எங்களை நோக்கி விரைந்துவந்து, இதற்குமேலும் தீவை நெருங்கவேண்டாமென எச்சரித்தது. நீரடி பாறையருகே ஒரு பெரிய குண்டு இன்னமும் வெடிக்காமல் இருந்தது. ஆகவே அந்திப்பொழுதில் நாங்கள் வந்தவழியே திரும்பினோம்; அப்போது, இன்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் பார்த்திருக்காத ஒன்றை பார்த்தோம். இரண்டாம் உலகப் போரைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நீருக்கடியில் வெடித்தது. அதனால் நூற்றுக்கணக்கான மீட்டர் உயரத்திற்கு தண்ணீரும் புகையும் பீறிட்டுக்கொண்டு மேலெழும்பின!
தராவாவிலிருந்த எவருமே அன்று காயமடையாதது சந்தோஷமளித்த விஷயம். குண்டுகளை அப்புறப்படுத்தும் குழு, மிஞ்சிய குண்டுகள் அனைத்தையும் அத்தீவிலிருந்து அகற்றிவிட்டதா? உறுதியாக சொல்லமுடியாது. எதிர்காலத்தில் இன்னுமதிக பழைய ஆயுதங்களை தீவுவாசிகள் கண்டெடுக்க வாய்ப்பிருக்கிறது என அக்குழுவின் தலைவர் சொன்னார். தராவா மக்களிடம் பேசுவதற்கு ஓர் ஆர்வமூட்டும் சங்கதி கிடைத்தது; இப்படியாக, அங்கு பிரசங்க வேலையை முடித்தோம். யெகோவாவின் ராஜ்யம் ‘பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணும்’ என்பதைப் பற்றி இந்தத் தீவுவாசிகளிடம் சொன்னது பெரும் சிலாக்கியமாய் இருந்தது.—சங்கீதம் 46:9.
நான்ஸி வான்டர் வெல்டே என்பவரால் சொல்லப்பட்டது
[பக்கம் 27-ன் படம்]
வெடிக்காத ஒரு குண்டு