“குருமாருக்கும் பாமரருக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாகிறது”
“அமெரிக்க இவாஞ்சலிக்கல் சர்ச்சுகளில் குருமாருக்கும் பாமரருக்கும் மத்தியில் இடைவெளி அதிகமாகிறது” என்று இறையியல் மற்றும் பண்பாட்டின் பேராசிரியராக இருக்கும் ராபர்ட் கே. ஜான்ஸ்டன் கூறுகிறார். சர்ச்சுகளின் உலக கவுன்சில் பத்திரிகையான மினிஸ்டீரியல் ஃபார்மேஷன் என்பதில், இந்தப் பிளவுக்கான சில காரணங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்: குடும்ப அழுத்தங்கள் அதிகரிப்பதால், “மருத்துவர்கள், வாரயிறுதியில் ஒருவர் மாற்றி ஒருவர் வேலை செய்வது” போன்ற வேலை நியமிப்புகளை பாதிரிமார்களும் விரும்புகின்றனர். ஒரு பாதிரி கூடுதலான மணிநேரம் வேலை செய்தால், அவருடைய முயற்சிக்கு ஈடுகட்ட ஏதாவது வேண்டுமென எதிர்பார்க்கிறார். கூடுதலாக, “நன்னெறி மற்றும் சட்டம் சார்ந்த நிர்ப்பந்தங்கள் அதிகரிப்பதால்” பிரச்சினைகளை தவிர்க்கும்படி இறையியல் கல்லூரிகள் தங்கள் பட்டதாரிகளை எச்சரிக்கின்றன என்று அந்தப் பேராசிரியர் கூறுகிறார். இதை செய்வதற்கு, “மற்ற பாதிரிமார்களாகிய தங்கள் ‘குழுவினர்’ மத்தியில் மட்டுமே நெருக்கமான நண்பர்களை” வைத்துக்கொள்ளும்படியும் தங்கள் வட்டாரத்திலுள்ள பாமர மக்களை “வாடிக்கையாளர்களாக” நடத்தும்படியும் அந்தக் கல்லூரிகள் கூறுகின்றன. இதன் விளைவாக, வட்டாரத்திலுள்ள அநேகர் தங்கள் பாதிரிமார்களை, சர்ச்சுக்கு செல்லும் சாதாரண ஆட்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள இயலாத மேல் வகுப்பைச் சேர்ந்தவர்களாக நோக்க ஆரம்பித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இந்த இடைவெளியை எப்படிப்பட்ட பாதிரியால் நிரப்ப முடியும்? பாதிரிமார்கள் தங்கள் ஊழியத்தில் ஏன் தோல்வி அடைகின்றனர் என்பதை கண்டறிவதற்காக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று, ஒரு பாதிரியின் கல்வியறிவையும் தொழில்ரீதியான திறமைகளையும் மக்கள் முக்கியமாய் கருதவில்லை என காண்பித்தது. அறிவுத்திறமுள்ள மேதையோ, சொல்வன்மை மிக்க பேச்சாளரோ, திறம்பட்ட நிர்வாகியோ சர்ச் அங்கத்தினர்களுக்கு தேவையில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் பாதிரி, ‘கடவுளுடைய மனிதனாக,’ தான் பிரசங்கிப்பதை கடைப்பிடிக்கும் ஒருவராக இருக்கும்படியே எதிர்பார்க்கின்றனர். ஒரு பாதிரி அவ்வாறு இல்லையென்றால், “அவர் எவ்வளவு அதிக தகவல் அறிந்தவராக இருந்தாலும் அல்லது திறமையை வெளிக்காட்டினாலும்” அந்த இடைவெளியை நிரப்ப முடியாது என பேராசிரியர் ஜான்ஸ்டன் கூறுகிறார்.
ஒரு சபையில் மூப்பராக இருப்பதற்கு என்ன தகுதிகள் தேவை என்று பைபிள் கூறுகிறது? “ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். . . . அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:2-4, 7.