பிளாக் டெத் உலக முடிவாக இல்லை
அக்டோபர் 1347-ல், கிழக்கிலிருந்து வந்த வியாபாரக் கப்பல்கள் சிசிலியிலுள்ள மெஸ்ஸினா துறைமுகத்துக்குள் நுழைந்தன. மாலுமிகள் வியாதிப்பட்டு, மரிக்கும் தறுவாயில் இருந்தார்கள். இரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்த, கருத்த, முட்டை அளவு பெரிதான கொப்பளங்கள் அவர்களுடைய உடம்பில் இருந்தன. கப்பலோட்டிகள் கடும்வேதனையை அனுபவித்து, நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய சில நாட்களுக்குள்ளாகவே இறந்துபோனார்கள்.
கப்பலில் இருந்த எலிகள் அவ்வூர் எலிக்கூட்டத்தோடு சேர்ந்துகொள்ள பாய்ந்து ஓடின. மனிதர்களைக் கொல்லும் நுண்கிருமிகள், இந்த எலிகள் மேல் இருந்த பூச்சிகளில் தொற்றியிருந்தன. இவ்விதமாக, ஐரோப்பிய சரித்திரத்தில் அதுவரைக்கும் இருந்ததிலேயே மிகவும் மோசமான கொள்ளைநோயாகிய பிளேக் பரவியது; அது பிளாக் டெத் (Black Death) என அறியப்பட்டது.
பிளேக் நோய் இரண்டு விதமாக பரவியது. ஒரு விதம் நோய்த்தொற்றிய பூச்சி கடித்ததால் பரவியது; அது இரத்த ஓட்டத்தில் பரவி, வீக்கங்களையும் உட்புற இரத்தக்கசிவையும் ஏற்படுத்தியது. மற்றொன்று, அந்த நோய் தொற்றியிருந்தவர்கள் தும்முவதன் மூலமோ இறுமுவதன் மூலமோ மற்றவர்களுக்கு அந்த நோயை கடத்தினர்; அது நுரையீரல்களை பாதித்தது. இந்த இரண்டு விதங்களின் மூலமும் பரவ வாய்ப்பிருந்ததால், அந்த வியாதி விரைவாக பரவி, பயங்கர சீற்றத்துடன் தாக்கியது. வெறும் மூன்றே ஆண்டுகளில், அது ஐரோப்பாவிலிருந்த காற்பங்கு மக்களைக் கொன்றது; கிட்டத்தட்ட 2.5 கோடி மக்கள் இறந்தனர்.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அந்நோய் எப்படி பரவியது என்பதை அக்காலத்தில் வாழ்ந்த ஒருவரும் அறியவில்லை. ஒருவேளை ஒரு பூமியதிர்ச்சியினாலோ அல்லது கிரகங்களின் அச்சுப்பாதையில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ, காற்று விஷமடைந்திருக்கலாம் என்று சிலர் நம்பினார்கள். இந்நோய் தொற்றிக்கொண்ட ஒருவரை பார்த்தாலே நோய் வந்துவிடுமென மற்றவர்கள் நினைத்தார்கள். கருத்துக்கள் மாறுபட்ட போதிலும், இந்நோய் மிக விரைவாக தொற்றுவது தெளிவாக தெரிந்தது. ஒரு நோயாளியே போதும் “உலகமுழுவதும் இந்நோயைப் பரப்புவதற்கு” என்று ஒரு பிரெஞ்சு மருத்துவர் குறிப்பிட்டார்.
மக்கள் எந்தத் தடுப்புமுறையையும், சுகப்படுத்துதலையும் அறிந்திருக்கவில்லை. முடிவு காலத்தில் கொள்ளைநோய் ஏற்படுமென்று முன்னறிவித்த லூக்கா 21:11-ம் வசனப் பதிவையும், அதைப்போன்ற மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களையும் அநேகர் குறிப்பிட்டனர். சர்ச்சுகளுக்கு பணம் வாரியிறைக்கப்பட்டபோதிலும்கூட அந்த பிளேக் சீற்றத்துடன் பரவியது. அச்சமயத்தில் வாழ்ந்த இத்தாலியர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “ஒருவனுடைய இழப்பு எத்தகையதாயிருந்தபோதிலும் எந்த ஒரு சாவு மணியும் அடிக்கப்படவில்லை, அழுகிறவர்கள் ஒருவரும் இல்லை, ஏனென்றால் அநேகமாய் எல்லாருமே மரணத்தை எதிர்நோக்கியிருந்தனர் . . . ‘இது தான் உலகத்தின் முடிவு’ என்று மக்கள் சொன்னார்கள், நம்பினார்கள்.”
எனினும், அது முடிவாக இருக்கவில்லை. 14-ம் நூற்றாண்டின் முடிவில், அக்கொள்ளைநோய் மறைந்துவிட்டது. உலகமோ நிலைத்திருந்தது.
[படத்திற்கான நன்றி]
Archive Photos