“ஓர் அருமையான சனிக்கிழமைக்காக சாட்சிகளுக்கு எனது நன்றி”
நார்வேயிலிருந்து விழித்தெழு! நிருபர்
டெலிமார்க் ஆர்பேய்டெர்ப்ளா என்ற நார்வே நாட்டு நாளிதழின் எழுத்தாளரான ஏவின் ப்ளிக்ஸ்டா, தன்னுடைய கட்டுரைக்கு இந்தத் தலைப்பையே கொடுத்தார். முக்கியமாக சனிக்கிழமை காலையில், வேண்டாத தபால்களோ விற்பனை சம்பந்தமான தொலைபேசி அழைப்புகளோ வருகையிலும், அனாவசியமாக எவரேனும் வீட்டிற்கு வருகையிலும் தான் எரிச்சலடைவதாக அவர் முதலாவது குறிப்பிட்டார். பின்னர் இவ்வாறு எழுதினார்:
“சனிக்கிழமை காலை. திடீரென்று பார்த்தால், அவர்கள் வந்து நிற்கின்றனர். என் கதவண்டையில். யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் கையில் செப்டம்பர் 8, 1996 விழித்தெழு! பத்திரிகை எண் 17. [“அமெரிக்க இந்தியர்கள்—அவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?”] எனக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும் என அவர்கள் நினைத்த விஷயம் அந்தப் பத்திரிகையில் இருந்ததால் நான் அதை வாசிக்க விரும்புகிறேனா என்று கேட்டனர். . . . எனக்கு விருப்பமில்லை என்று நான் சொல்வதற்குள் அவர்களில் ஒருவர் சொன்னார்: ‘அமெரிக்க இந்தியர்களைப் பற்றி இதுல ஒரு கட்டுரை இருக்கு. இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் நிறையா எழுதியிருக்கிறீங்கன்னு எங்களுக்குத் தெரியும்.’
“ஆ, நான் வசமா மாட்டிக்கொண்டேன். உங்களைப் பற்றி உச்சிகுளிர பேசும்போது, எல்லா உறுதியான தீர்மானங்களும் பறந்துபோய்விடுகின்றன. பத்திரிகையுடன் சாப்பாட்டு மேஜையில் உட்காரும்போது, என் ஆவல் தூண்டப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளும் அமெரிக்க இந்தியர்களின் எதிர்காலமும் சம்பந்தமே இல்லாத தலைப்பு என்பதை மறுக்கமுடியாது. இந்தப் பத்திரிகையை வாசிப்பது நேரத்தை வீணாக்குவதே என்ற சற்று பெருமித எண்ணத்துடன் நான் கண்ணாடியை போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
“சுருக்கமாக சொன்னால், அமெரிக்க இந்தியர்களின் நிலைமை பற்றிய சாட்சிகளின் கட்டுரை நல்லா இருந்தது மட்டுமல்ல, அபாரமாகவும் இருந்தது. நார்வேயின் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் தப்பெண்ணங்களை விட்டுவிட வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். தங்கள் வகுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியை ஆர்டர் செய்யவேண்டும்! பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆதார மூலங்கள் போற்றத்தக்கவை; போதனாமுறையும் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. இந்தியர்கள் மற்றும் சாட்சிகளுடைய கருத்துகள் வித்தியாசப்படும் விஷயங்களிலும்கூட, அது முழுவதும் நேர்மையானதாக இருக்கிறது. அதில் எந்த ஜோடிப்பும் இல்லை. அநேக இந்திய ஒதுக்கீட்டுப் பகுதிகளில் நிலவும் இரண்டக நிலையானது, சூதாட்ட அரங்குகள் ஸ்தாபிக்க வேண்டுமா என்பதைப் பற்றியதே. அதிகமாக தேவைப்படும் வேலைவாய்ப்பை அவை அளிக்கிறபோதிலும், தார்மீக காரியங்களும் உட்பட்டிருக்கின்றன. நம்முடைய நூற்றாண்டில் ஒரு இந்தியராக இருப்பது எப்படியிருக்கும் என்பதைப் பற்றிய உட்பார்வையை வாசகர் பெறும்படி அந்தக் கேள்வி அவ்வளவு திறமையாக கையாளப்பட்டிருக்கிறது.”
ப்ளிக்ஸ்டா இவ்வாறு முடிக்கிறார்: “நான் வாசித்தவற்றால் புத்துணர்ச்சி பெற்றவனாக, முழு விழித்தெழு!-வையும் வாசித்து முடித்தேன். வேல்ஸிலுள்ள சுரங்கம் வெட்டும் பள்ளத்தாக்காகிய ரான்டாவில் சர்ச்சுகளும் சேப்பல்களும் இழுத்து மூடப்பட்டு வருவதைப் பற்றிய மிக உருக்கமான கட்டுரை ஒரு போனஸாக இருந்தது. . . .
“என்னுடைய முழு பகுத்துணர்வையும் இழந்துவிட்டேனா? ஒரு நாத்திகன் எந்த மறுப்புமின்றி சாட்சிகளை ஏற்றுக்கொண்டானா? . . . சனிக்கிழமையில் அல்ல. தப்பெண்ணம் என்ற களைகளை நீக்கிவிட வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி நாம் தொடர்ந்து நினைப்பூட்டப்பட வேண்டியது அவசியம். சாட்சிகள் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டப்படுவதை நான் அடுத்தமுறை கேள்விப்படும்போது, இந்தியர்களைப் பற்றிய விஷயத்திலாவது அவர்கள் பொய் சொல்லவில்லை என்று அறிந்திருப்பேன்.”
பூர்வீக இந்தியர்கள் பற்றிய விழித்தெழு! வெளியீட்டிற்கு அவ்வளவு அதிக மவுசு இருந்ததால், நியூ யார்க்கிலுள்ள உவாட்ச்டவர் சங்கத்தின் அச்சகங்களில் 37,000 கூடுதல் பிரதிகள் அச்சிடப்பட்டன. விசேஷ ஊழியம் செய்து தங்கள் பிராந்தியத்தை முடிப்பதற்கு 10,000 பத்திரிகைகளை அரிஜோனாவிலுள்ள ஒரு சபை ஆர்டர் செய்தது.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நீங்கள் தப்பெண்ணமற்ற விதத்தில் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசங்களில் உங்களுக்கு அருகில் இருப்பதை பயன்படுத்தி, இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளருக்கு எழுத தயங்க வேண்டாம்; அல்லது உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொடர்புகொள்ளுங்கள். எந்த கட்டாயமும் இல்லை, எந்த செலவும் இல்லை. நேர்மையான பதில்கள் மட்டுமே.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
(பக்கம் 31-ல் தொடர்கிறது) இந்தியனுடைய முகம்: D. F. Barry Photograph, Thomas M. Heski Collection; நடனமாடும் இந்தியன்: ஆண்கள்: A Pictorial Archive from Nineteenth-Century Sources/Dover Publications, Inc.; இந்தியர் கூடாரம்: Leslie’s; நீள்சதுர வடிவம்: Decorative Art; வட்ட வடிவம்: Authentic Indian Designs