அது நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது
இதுவே ராஜ்ய செய்தி என்று அழைக்கப்பட்ட நான்கு-பக்க துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்ட ஒரு மனிதனின் உணர்ச்சிமிகுந்த கருத்து. அது, “வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதைப் பற்றி அந்த மனிதன் எழுதிய கடிதம் கொலம்பியாவிலுள்ள போகோடாவின் செய்தித்தாளான எல் டையம்போ-வில் பிரசுரிக்கப்பட்டது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார்:
“இன்று நடக்கிற செயல்கள் எல்லாமே வன்முறையும் ஊழலும் உள்ளவையாகத்தான் நமக்கு தோன்றுகிறது; இனி எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்றும் உணர வைக்கிறது; இத்தகைய காலங்களில், நம்முடைய விசுவாசத்தை உயிருடன் வைத்துக்கொள்ள உதவியாக, தேவையான அளவு ஆவிக்குரிய காரியங்களைத் தேட வேண்டியது நமக்கு பொருத்தமானதாய் உள்ளது. இது சம்பந்தமாக, எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரதியின் சாரம் தான் இது:
“ ‘இயேசு கிறிஸ்துவின் கைகளிலிருக்கும் பரலோக ராஜ்யத்தின் மூலம் மனித விவகாரங்களில் கடவுள் தலையிடுவார் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது. இந்த ராஜ்யம் பூமியிலுள்ள எல்லா ஊழல்மிக்க அரசாங்கங்களையும் நொறுக்கி போடும். இவ்வுலகம் முடிவடைகையில், தப்பிப்பிழைக்கும் சிலராவது இருப்பார்களா? தப்பிப்பிழைக்கிற இந்த ஆட்கள் எங்கு என்றென்றைக்கும் வாழ்வர்? நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். கடவுளுடைய புதிய உலகிலே, மரணம் ஒருபோதும் இருக்காது. குற்றச்செயலோ, ஏழ்மையோ, பசியோ, நோயோ, துயரமோ, மரணமோ இனியும் இருக்காது. மரித்தோர் மீண்டும் உயிர்ப்பெறுவர். மேலும் பூமிதானே சொல்லர்த்தமான பரதீஸாக மாற்றப்படும்.’ ”
பைபிளின் அறிவில் வளருவதற்கான ஆவலை உடையவர்களுக்கு உதவி செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany என்ற விலாசத்திற்கோபக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.