குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாத்தல்
அநேக நாடுகளிலுள்ள பிள்ளைகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக த புரோகிரஸ் ஆஃப் நேஷன்ஸ் என்ற பிரசுரத்தில் ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணத்தால், ஐந்து வயதுக்கும் கீழேயுள்ள பிள்ளைகளின் இறப்பு விகிதம் அநேக நாடுகளில் குறைந்துள்ளது. இருந்தபோதிலும், விசேஷமாக வளரும் நாடுகளில் எளிமையான மற்றும் குறைந்த செலவுள்ள வழிகளிலும்கூட, இன்னுமதிக கோடிக்கணக்கான இளம் உயிர்கள் ஒவ்வொரு ஆண்டும் காக்கப்படலாம் என்பதையும் த புரோகிரஸ் ஆஃப் நேஷன்ஸ் காட்டுகிறது. அந்த நாடுகளிலும் வேறெந்த நாட்டிலும் உள்ள பெற்றோர்கள், அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த கீழ்க்காணும் பரிந்துரைகளை பிரயோஜனமளிப்பதாக காணலாம்.
தாய்ப்பாலூட்டுதல். “தாய்ப்பாலூட்டுவது நல்ல ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் நோக்கி எடுக்கப்படும் சாத்தியமான சிறந்த தொடக்கம்” என்று அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரகாரம், “முதல் ஆறு மாதத்திற்கு வெறும் தாய்ப்பால் மட்டும் கொடுக்கப்பட்டாலே, ஒரு ஆண்டில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிசுக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட முடியும்.” மருத்துவமனைகளும் பிரசவ வார்டுகளும் பலமான செல்வாக்கு செலுத்துவதால், UNICEF-ம் WHO-ம், “குழந்தைகளை நேசிக்கும் மருத்துவமனை திட்டம்” என்பதை முன்னேற்றுவிக்கின்றன. தாய்ப்பாலூட்டுவதைக் குறித்ததில் புதிதாக பிறந்த குழந்தையின் தாய்மார்களுக்கு ஆதரவையும் சரியான ஆலோசனையையும் கொடுக்கும்படி மருத்துவமனைகளைத் தூண்டுவதே இவற்றின் நோக்கமாக உள்ளது.
சுகாதாரமும் சுத்தமான நீரும். “சுத்தமான நீர், கழிப்பிடங்களைப் பயன்படுத்துதல், உணவைத் தொடுவதற்கு முன்பு கைகழுவுதல், பாதுகாப்பான முறையில் உணவை தயாரித்து சேமித்தல் ஆகியவை வியாதிகளுக்கு பலியாவோரின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவுக்கு குறைக்கக்கூடும்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அநேக சமுதாயங்களில், சுத்தமான நீரைப் போதியளவு பெறுவதற்கே பெரும் முயற்சி தேவைப்படுகிற போதிலும், பிள்ளைக்கும் குடும்பத்தின் சுகநலத்துக்கும் அது இன்றியமையாததாக உள்ளது.
ஊட்டச்சத்து. அந்த அறிக்கையின்படி, விட்டமின்-ஏ குறைநிரப்புதலைக் கொண்டு 30 லட்சம் பிள்ளைகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மரிப்பதைத் தடுக்க முடியும். இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு, கிடைப்பதோடு அதை அடையவும் முடியும்; திட்ட உணவை முன்னேற்றுவிப்பது, உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாக்குவது, அல்லது விட்டமின்-ஏ மாத்திரைகளை விநியோகிப்பது போன்றவற்றின் மூலம் அடையலாம் என்று அந்த அறிக்கை சொல்லுகிறது. விட்டமின்-ஏ குறைபாடு பரவலாக உள்ள நாடுகளில் மலிவாகக் கிடைக்கும் விட்டமின்-ஏ மாத்திரைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் கொடுத்து வருவது ஏற்கெனவே பலனுள்ளதாக நிரூபித்து வருகிறது. அதோடுகூட பப்பாளிகள், மாங்காய்கள், கேரட்டுகள், பச்சை இலைக் காய்கறிகள், முட்டைகள் போன்ற உணவு வகைகளும் சிபாரிசு செய்யப்படுகிறது.
வாய்வழி நீர் மருத்துவம். சுத்தமான தண்ணீர், உப்பு, சர்க்கரை அல்லது அரிசிமாவு இவற்றாலான, தயாரிப்பதற்கு எளிதானதும் குறைந்த செலவுள்ளதுமான கலவையைக்கொண்டு, வயிற்றுப்போக்கின் காரணமாக ஒரு வருடத்தில் மரிக்கும் பிள்ளைகளில் ஒரு பாதியினரின் மரணத்தை தடுக்க முடியும் என்று UNICEF சொல்லுகிறது. a குழந்தைக்கு உணவையும் பெற்றோர் விடாமல் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, இம்முறைகளால் ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
[அடிக்குறிப்பு]
a உங்கள் பிள்ளைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பதைக் குறித்து கூடுதலான தகவலுக்காக தயவுசெய்து ஏப்ரல் 8, 1995 விழித்தெழு!-வில் பக்கங்கள் 3-14-ஐக் காண்க.
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
WHO