“உங்கள் கண்களைக் கொஞ்சம் திறந்து பாருங்களேன்”
உங்கள் பிள்ளைகள் எவற்றை பார்க்கிறார்கள்? யுத்தத்தையா? குற்றச்செயலையா? தூய்மைக்கேட்டையா? வறுமையையா? நோயையா? மெய்தான், என்றும் இருக்கும் நிஜங்களே இவை. ஆனால், இவற்றுக்கு அப்பாலுள்ள, பைபிளில் வாக்கு கொடுக்கப்பட்டுள்ள அற்புதமான எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்படி அவர்களுக்குக் கற்பித்திருக்கிறீர்களா? ஒன்பது வயது ஜோயல் பிர்ஸனின் பெற்றோர் இவ்வாறு கற்பித்திருக்கிறார்கள். என்ன விளைவுடன்?
“உங்கள் கண்களைக் கொஞ்சம் திறந்து பாருங்களேன்” என்ற தலைப்பில் ஜோயல் எழுதினதைப் பற்றி எண்ணிப் பாருங்கள். இது, அ.ஐ.மா.-வைச் சேர்ந்த வர்ஜீனியா மாவட்டப் பள்ளி ஒன்றில் இளைஞர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. ஆகஸ்ட் 22, 1996 தேதியிட்ட த சென்ட்ரல் வர்ஜீனியன் என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஜோயலின் கட்டுரை, கடவுளுடைய வார்த்தையிலிருந்து தான் கற்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்த நம்பிக்கையை எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பதைக் கவனியுங்கள். அவன் எழுதினதாவது:
“உங்கள் கண்களைக் கொஞ்சம் திறந்து பாருங்களேன்; இருந்திருக்க வேண்டிய அழகிய நிலை இதுவே.
“ஒருநாள் காலை எழும்போது, தூய்மைக்கேடு இனி இராது என்று கேள்விப்படுவது அற்புதமில்லையோ? கொலை, குற்றச்செயல் ஆகியவை தலைப்புச் செய்திகளாக இராமல், மக்களின் வாழ்வில் சமாதானமும் சந்தோஷமும் செழித்தோங்குதலைப் பற்றிய செய்தியைக் கொண்டிருப்பீர்.
“ஒரு நண்பர் தன் வீட்டைக் கட்டுவதில் அவருக்கு உதவ அக்கம்பக்கத்தார் ஒன்றுசேர்ந்து வேலை செய்யும் நிலையைக் காண்பீர்; அருகில், மற்றவர்கள் ஒரு தோட்டத்தை உருவாக்குவதையும் காண்பீர்; அக்கம்பக்கத்தார் சேர்ந்து வேலைசெய்வது மட்டுமோ, அவர்களுடைய உள்நோக்கும் அல்லவோ தூய்மையாய் இருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்ய எல்லாரும் ஒன்றுசேருகின்றனரே; அங்கு ஏழைகளே இரார், வேண்டிய அளவுக்கு ஏராளமான உணவும் இருக்குமே; உலகெங்கும் ஒற்றுமையும் சமாதானமும் நிலைத்திருக்குமே; எவருமே இனிமேலும் பசி, நோய்க்கு உட்படாரே; காண்பதற்கோ இனிய சுற்றுப்புறங்கள்; இதோ, ஒரு குழந்தை புலிமேல் சவாரி செய்வதைக் காண்பீர்! புலி மட்டுமா, அனைத்து விலங்குகளுமே மனிதருடன் சமாதானமாய் இருக்கின்றனவே.
“இதைப் போன்றதோர் இடத்தில் வாழ நான் விரும்புகிறேன்; அவ்விடத்தில் என்னுடன் வாழ நீவிரும் விரும்புவீரோ?”
இளம் ஜோயல் இங்கு விவரித்திருப்பதைப் போன்ற ஆசீர்வாதங்களை நிஜமாகவே கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறாரா? ஆம், நிஜமாகவே வாக்கு கொடுத்திருக்கிறார்! தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து, சங்கீதம் 46:8, 9; 67:6; 72:16; ஏசாயா 2:3, 4; 11:6-9; 33:24; 65:17-25; மத்தேயு 6:9, 10; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4 ஆகியவற்றில் காணப்படுவதைப் போன்ற அப்படிப்பட்ட வாக்குகளைப் பற்றி வாசியுங்கள்.