விவேகத்தின் அடையாளங்கள் இச்சையடக்கமும் ஒற்றை மணவாழ்க்கையும்
இப்போதுவரை, கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனால் இறந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 8,500 பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகிறது—இவர்களில் 1,400 பேர், பொதுவாக ஒரு வயதிற்குள்ளாகவே இறந்துவிடும் பிள்ளைகளாவர். பாதுகாப்பான பாலுறுவு என அழைக்கப்படுபவற்றின் பிரச்சாரங்கள், பொது மக்களின் கவனத்தை தூண்டியெழுப்பியிருந்தாலும் இவை போதாதென சிலர் நினைக்கின்றனர். “எய்ட்ஸ் உயிரைப் பறிக்கும் நோயாகும், இது பரவாமலிருக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் 100% பயன்தரத்தக்கதாய் இருக்க வேண்டும்” என த டம்ப்பா ட்ரிப்யூன் என்ற செய்தித்தாளில் டாக்டர் ஸ்டிவன் ஜே. ஸேன்ஸ்பரி எழுதுகிறார்.
எய்ட்ஸ் பரவுவதைத் தவிர்க்க கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதைப் பற்றி டாக்டர் ஸேன்ஸ்பரி இவ்வாறு சொல்கிறார்: “இந்த விதத்தில் சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை, ஏதோ ஒரு காரணத்தால், எவராவது ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் வாகனங்கள் திடீரென வெடிக்க ஆரம்பிப்பதாக வைத்துக்கொள்வோம். நாடு முழுவதிலும், வாகனத்தில் செல்வோர் அந்த வெடி விபத்தால் இறக்கின்றனர். கடைசியில் அரசாங்கம் ஒரு தீர்வை அளிக்கிறது. வெறுமனே இந்தச் சேர்மானப் பொருளை எரிபொருளில் கலக்குங்கள், வெடிப்பதற்கான வாய்ப்பு 90 சதவீதம் குறையும் என அது சொல்கிறது. பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நீங்கள் நினைப்பீர்களா? அதன்பின்னும் நீங்கள் உங்கள் காரை ஓட்டிக்கொண்டிருப்பீர்களா? சந்தேகம்தான். அப்படியென்றால் நாம் ஏன் கருத்தடை உறைகளை மட்டும் எய்ட்ஸ் நோயிற்கான தீர்வாக ஏற்றுக்கொள்கிறோம்?”
பெரும்பாலும் பாலுறவினால் எய்ட்ஸ் ஏற்படுகிறதென்பதை அறிந்தவராய் டாக்டர் ஸேன்ஸ்பரி இந்தத் தீர்வை அளிக்கிறார்: “எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படாத நபருடன் ஒற்றை மணவாழ்க்கை நடத்த ஒருவர் தயாராயிருந்தால்தான் பாலுறவுகொள்ள வேண்டும். முக்கிய வார்த்தைகள் இச்சையடக்கம், ஒற்றை மணவாழ்க்கை.”
திருமணமாகாதவர்கள் இச்சையடக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டுமெனவும் திருமணமானவர்கள் ஒற்றை மணவாழ்க்கை நடத்த வேண்டுமெனவும் பைபிள் கட்டளையிடுகிறது. வேசித்தனம், விபச்சாரம், ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி ஆகியவற்றை பைபிளின் உயர்ந்த தராதரங்கள் தடை செய்கின்றன. (மத்தேயு 19:4-6; 1 கொரிந்தியர் 6:9, 10; 7:8, 9) இந்தத் தராதரம் பழமைப்பட்டது அல்லது நம் காலத்திற்கானதல்ல என சொல்லி அநேகர் ஏளனம் செய்தாலும், பைபிளின் ஒழுக்க தராதரம் உடலாரோக்கியத்தை முன்னேற்றுவித்து மன அமைதியை அளித்திருக்கிறது.—ஏசாயா 48:17.