மிஸ்ட்ரல் நிலக்காட்சியின் திறம்பெற்ற சிற்பி
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஒழுங்கான வரிசைகளிலுள்ள இணையான வேலிகள், காற்றின் திசைக்கு எதிர்புறமிருக்கும் மலைப்பகுதிகளில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமங்கள், ஒரு பக்கத்தில் எல்லா இலைகளையும் கிளைகளையும் இழந்துவிட்டிருப்பதாகத் தோன்றும் மரங்கள். தென்கிழக்கு பிரான்ஸிலுள்ள ப்ராவென்ஸ் நிலக்காட்சியின் பொதுவான அம்சங்கள்தான் இவை, மிஸ்ட்ரல் என்றழைக்கப்படும் காற்று இவையனைத்திற்கும் பங்களித்திருந்தது.
ஆல்ப்ஸின் ஃபோஹன், தென் அமெரிக்காவின் பாம்பெரோ, வட அமெரிக்க மலைத்தொடரின் சினூக், வடமேற்கு ஆப்பிரிக்காவின் ஹர்மாட்டன், பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் யூரோக்கிலிதோன் போன்ற மற்ற புகழ்பெற்ற காற்றுகளைப் போலவே மிஸ்ட்ரல் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. a (அப்போஸ்தலர் 27:14) மிஸ்ட்ரல் என்ற வார்த்தை “திறம்பெற்ற” என்று அர்த்தத்தை அளிக்கும் ப்ராவென்ஸல் வார்த்தை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்று, பெயருக்குப் பொருத்தமாகவே, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
பிரான்ஸ் மையப்பகுதியின்மீதான உயர்ந்த காற்றழுத்தத்திற்கிடையேயும் மத்தியதரைக்கடலின்மீதான குறைந்த காற்றழுத்தத்திற்கிடையேயும் உள்ள என்றும் தீராத “மோதலின்” காரணமாக மிஸ்ட்ரல் உண்டாகிறது. மலை-இடைவெளி விளைவு என்பதாக அழைக்கப்படும் ஒன்றிலிருந்து அது மகா பலத்தைப் பெறுகிறது. ஆல்ப்ஸ் மற்றும் மாசிஃப் சென்ட்ரல் பீடபூமி ஆகியவற்றுக்கு இடையே தன் பாதையைக் கொண்டுள்ள இந்த மிஸ்ட்ரல், ஒரு புனல் மூலம் வருவதைப்போல் டான்சர் பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பிய பிறகு மிகப் பலமுள்ளதாய் இருக்கிறது.
கோடைகாலத்தின்போது மிஸ்ட்ரல் மேகங்களை அங்கிருந்து விரட்டிவிடுகிறது. குளிர்காலத்தின்போது தாங்கமுடியாத அளவுக்கு குளிர்ச்சியை மிஸ்ட்ரல் உண்டுபண்ணுகிறது, மித உஷ்ணப் பிரதேசங்களில் குளிர்காலம் கிட்டத்தட்ட முடியும் பருவத்திலும் உறைபனியை அது உண்டுபண்ணக்கூடும். எந்தக் காலத்திலும், உள்ளூர்வாசிகள் அசௌகரியமாக உணரும்போது மிஸ்ட்ரல் அடிக்கடி குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆனால் காற்றில் பறக்கும் கொடிகளைப்போல் காட்சியளிக்கும் விதமாக மரங்களை சிற்ப வடிவில் அமைப்பதன் மூலமாக ல்யூபாரோனின் சிறப்பான கேதுரு மரக்காடுகளில்தான் மிஸ்ட்ரல் தன் திறமையை முழுவதுமாக வெளிக்காட்டுகிறது. மறுபட்சத்தில், வறட்சியான காலப்பருவத்தின்போது, மிஸ்ட்ரல் அடிக்கடி காட்டுத் தீக்களை உண்டுபண்ணி, இவ்வாறு அதன் உழைப்பின் பலன்களை நாசமாக்குகிறது.
எவ்வளவு காலம் மிஸ்ட்ரல் வீசும் என்பதைக் குறித்ததில் “மூன்று, ஆறு அல்லது ஒன்பது நாட்கள்,” என்பதாக பண்டைய ப்ராவன்சல் வாக்கியம் ஒன்று சொல்கிறது. ஆனால் இந்தத் திறம்பெற்ற காற்று அதைக் காட்டிலும் அதிக காலப்பகுதிக்கு வீசக்கூடும். உதாரணத்திற்கு, 1965-ல் இடைவிடாமல் அது 23 நாட்களுக்கு வீசியது!
மிஸ்ட்ரலை எவ்வாறு சமாளிப்பதென்பதை மனிதன் கற்றுக்கொண்டிருக்கிறான். ஒழுங்கான வரிசைகளிலுள்ள இணையான வேலிகள் வயல்களைப் பாதுகாக்கின்றன; பழைய கிராமப்புற வீடுகள் வடக்கு திசையில் எந்த திறப்பையும் கொண்டிருப்பதில்லை. மிஸ்ட்ரலின் குளிர்ச்சியான காற்று அதிகமான அசௌகரியத்தை உண்டுபண்ணினாலும், அது திறம்பெற்ற நிலக்காட்சியின் சிற்பியாக கருதப்படலாம்.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான தகவலுக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கம் 770-ஐக் காண்க.