மெக்ஸிகோவில் பேரழிவுகள் மத்தியில் கிறிஸ்தவ அன்பு
மெக்ஸிகோ நகர செய்தித்தாள் ஒன்று அறிக்கைசெய்தது: “கடந்த 20 நாட்களின்போது, இயற்கை நிகழ்வுகள்—சூறாவளிகளும் ஒரு நிலநடுக்கமும்—மெக்ஸிக்க கரைகள்மீது அடித்துச்சென்று, சாவு மற்றும் சேதத்தின் பின்விளைவுகளை விட்டுச்சென்றிருக்கின்றன.”—எல் ஃபினான்ஸ்யீரோ, அக்டோபர் 17, 1995.
அக்டோபரின் ஆரம்பத்தில் காம்பேச்சே, கென்டானாரோ, டபாஸ்கோ ஆகிய மெக்ஸிக்க மாகாணங்கள், ஓபால் சூறாவளியால் கடுமையாகச் சேதமாக்கப்பட்டன. ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டனர், 150 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டனர், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமாக்கப்பட்டன அல்லது முழுமையாக அழிக்கப்பட்டன.
யெகோவாவின் சாட்சிகளுடைய மெக்ஸிகோ கிளை அலுவலகம், அந்த சேதத்தைக் குறித்து கேள்விப்பட்டதும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாட்சிகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்கு ஒருவரை அனுப்பியது. அவர்களில் 2,500 பேருக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டுவரவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருந்தனர். இப்படிப்பட்டவர்கள் உடன் சாட்சிகளுடைய வீடுகளில் தயவாய் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
நிவாரண மையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. தேவையிலிருந்தவர்களுக்கு உணவு, உடை, பணம் வழங்கப்பட்டன. வெள்ளப்பெருக்குகளின் வெள்ளம் வற்றியபின், சாட்சிகள் தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களின் வீடுகளைத் திரும்ப கட்டத்தொடங்கினார்கள்.
அக்டோபர் 9 அன்று, ரிக்டர் அளவு முறையில் 7.6 அளவுள்ள பலமுள்ள நிலநடுக்கம் ஒன்று மெக்ஸிக்க மாகாணங்களாகிய கலிமாவையும் ஹலிஸ்கோவையும் சேதப்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளுடைய எட்டு ராஜ்ய மன்றங்கள் கடுமையாகச் சேதமாக்கப்பட்டன. அவர்களுடைய வீடுகளில் பன்னிரண்டு நாசமடைந்தன; சுமார் 65 சேதமடைந்தன. மீண்டும், ஒரு நிவாரண ஆலோசனை குழு ஒழுங்கமைக்கப்பட்டு, உதவி அளிக்கப்பட்டது.
பின்னர், அக்டோபர் 20 அன்று, வேறொரு நிலநடுக்கம் தாக்கி, சியாப்பஸ் மாகாணத்தைக் குலுக்கியது. மேலுமாக 88 சாட்சிகளுடைய வீடுகள் அழிக்கப்பட்டு, 38 கடுமையாகச் சேதமாக்கப்பட்டன. இரண்டு ராஜ்ய மன்றங்கள் முழுமையாக நாசமாக்கப்பட்டன; வேறு நான்கு மோசமாகச் சேதமாக்கப்பட்டன. ஏறக்குறைய அதே சமயத்தில், சூறாவளி ராக்ஸனுடன் சம்பந்தப்பட்ட வெள்ளப்பெருக்குகள், வெரக்ரூஸ் மாகாணத்தில் சுமார் 80 வீடுகளைச் சேதப்படுத்தியது. நான்கு வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளால் நிறுவப்பட்ட ஒரு நிவாரண நிதி, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விரைவாக உதவி அளித்தது.
சில சாட்சிகள் காயங்களையும் எலும்பு முறிவுகளையும் கொண்டிருந்தபோதிலும், இந்த இயற்கைச் சேதங்களில் எவருமே சாகவில்லை. மொத்தத்தில், சுமார் 24 டன் உணவும் 4 டன் உடையும், தேவையிலிருப்பவர்களுக்கு அனுப்பப்பட்டன. நிவாரண வேலையைப் பார்த்தவர்கள் பலர் அதற்குப் பாராட்டு தெரிவித்தனர். கலிமாவிலுள்ள ஒரு பெண்மணி இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நான் வெறுமனே கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதோ என்னுடைய சொந்த கண்களால் அதைப் பார்க்க முடிகிறது.”
அடிக்கடி மக்கள், சாட்சிகளையும் அவர்களுடைய நிவாரண வேலையையும் குறித்து இவ்வாறு குறிப்பிட்டனர்: “இவர்கள் நிஜமாகவே சகோதரர்கள்.” “அவர்கள்தான் சிறந்து ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதி.” சிலர் இப்படியும் சொன்னதாகக் கேள்வி: “உதவி செய்யவந்த நிவாரண தொகுதிகள் அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளைப் போல வேலை செய்திருந்தால், முழு நகரமும் ஏற்கெனவே சுத்தமாகி இருக்கும்.”
தற்போது 4,40,000-க்கும் அதிகமான சாட்சிகள் தங்கள் உடன் மெக்ஸிக்கர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சமீபத்திய இந்த இயற்கை சேதங்களின்போது அவர்கள் ஒருவருக்கொருவர் வெளிக்காட்டிய அன்பு ஒரு பலமான சாட்சியை அளித்தது.—யோவான் 13:34, 35.