சங்கேத மொழிபேசும் கைகளால் சென்றெட்டுதல்
ஜூன் 1995-ல் ஆரம்பித்து கோடைகாலம் முழுவதுமாகத் தொடர்ந்து, ஐக்கிய மாகாணங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கிளை அலுவலகத்தைச் சேர்ந்த பிராந்தியத்தில், “சந்தோஷமாய் துதிப்போர்” என்ற பொருளில் 181 மாவட்ட மாநாடுகளை நடத்தினர். இவற்றுள் இரண்டு மாநாடுகளில்—ஒன்று கிழக்கில், மற்றொன்று மேற்கில்—நிகழ்ச்சிநிரல் முழுவதும் அமெரிக்க சங்கேத மொழியில் நேரடியாக அளிக்கப்பட்டது. இவ்விதமாக, நிகழ்ச்சிநிரல் தெளிவான விதத்தில் அளிக்கப்படுவதற்கு இது உதவியாய் இருந்தது—ஏனெனில் காது கேளாதோருக்கு, பேச்சு மொழியிலிருந்து அர்த்தம் சொல்வதைக்காட்டிலும் நேரடியாக சங்கேத மொழியில் பேசுவது இன்னும் அதிகமாய்ப் புரிந்துகொள்ள உதவி செய்யும்.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள 11 சங்கேத மொழி சபைகளிலிருந்தும், 30 சங்கேத மொழி தொகுதிகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால் பிரிட்டன், கனடா, டென்மார்க், தி டொமினிக்கன் ரிபப்ளிக், ஈக்வடார், ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, நார்வே, பியூர்டோ ரிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆகவே, ஒரு சர்வதேச சூழல் அங்கிருந்தது.
நிகழ்ச்சிநிரலை தொலைக்காட்சி (closed-circuit) மூலம் பார்ப்பதற்கேதுவாக வீடியோ மானிட்டர்கள் அமைக்கப்பட்டன. என்றபோதிலும், பல பிரதிநிதிகள் காது கேளாதவர்களாயும் கண்தெரியாதவர்களாயும் இருந்தனர். இத்தகைய ஆட்கள் அந்த நிகழ்ச்சிநிரலிலிருந்து எப்படி பயனடைவர்? தொடுதல் முறைப்படி அர்த்தங்கொள்ளுவதன் மூலமாக, ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சிநிரலையும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளுவதற்கு நூற்றுக்கும் மேலான தன்னார்வ ஊழியர்கள் ஒவ்வொருவராக தங்கள் முறையை எடுத்துச் செய்வதை கவனிப்பது உண்மையிலேயே மனதை நெகிழச் செய்வதாய் இருந்தது.
இவ்விரண்டு மாநாடுகளிலும், 36 பேர் யெகோவா தேவனுக்கு தாங்கள் ஒப்புக்கொடுத்திருந்ததை முழுக்காட்டுதல் மூலம் அடையாளமாகக் காட்டினர். மற்றொரு சிறப்பம்சம், தகுதியுள்ள முதியவர்களைக் கனம்பண்ணுதல் என்ற நாடகமாகும். நாடகத்தை அளிப்பதில் காது கேளாத அங்கத்தினர்கள் பெரும் பாகத்தை வகிக்கும்படி அனுமதித்து, இந்த நாடகம் முழுவதும் சங்கேத மொழியில் அளிக்கப்பட்டதானது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது!
பிறகு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற பைபிள் படிப்பு உதவிப் புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தின் பதிப்பு சங்கேத மொழியில் காட்சிப் பதிவு நாடாவாகக் (videotape) கிடைக்கச் செய்திருப்பதை அறிந்தபோது மாநாட்டினர் விசேஷமாக சந்தோஷப்பட்டனர்! மாநாட்டில் வெளியிடப்பட்ட தொகுதி 1, முதல் மூன்று அத்தியாயங்களை அடக்கியுள்ளது. இன்னும் ஐந்து தொகுதிகள் தொடர்ந்து வெளியிடப்பட இருக்கின்றன. “இந்த வீடியோவுக்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்,” என்று ஒஹையோவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி குறிப்பு தெரிவித்தார். “காது கேளாதோர் வாழ்ந்து வரும் பகுதியில் வேலையை வேகத்துடன் செய்வதற்கு அது எங்களுக்கு உதவும்.”
இவ்விரண்டு மாநாடுகளிலும் ஆஜராகியிருந்த 2,621 பேரும் ஆவிக்குரிய வகையில் புத்துணர்ச்சி பெற்றவர்களாய் வீடு திரும்பினர். முன்னொருபோதும் இராதவகையில், சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை எதிரொலிக்க அவர்கள் தீர்மானமாய் இருந்தனர்: “சுவாசமுள்ள யாவும்—யாவைத் துதிப்பதாக. மக்களே, யாவைத் துதியுங்கள்!”—சங்கீதம் 150:6, NW.