ஹேட்ரியனின் சுவரருகே பழுப்புமஞ்சள் ஆந்தை
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஒரு இதமான இன்னிசையின் உச்சம் அதிகாலையின் அமைதியைக் குலைத்தபோது ஒரு மெல்லிய பனிப் படலம் மரத்தின் உச்சியளவுவரை படர்ந்திருந்தது. கோடைகாலத்தில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் உள்ளூர் கருங்குருவிகள் மற்றும் த்ரஷர் பறவைகளின் பாட்டுகளோடு தங்களுடைய பாட்டுகளைக் கூட்ட இங்கிலாந்தின் வடபகுதிக்கு இப்பொழுதுதான் வந்து சேர்ந்திருக்கின்றன.
ப்ரிம்ரோஸ், வுட் வயலட் ஆகிய மலர்கள் பதிக்கப்பட்ட கரைகளினிடையில், ஹேட்ரியனின் சுவரில் பழுப்புமஞ்சள் ஆந்தையின் மூதாதையர் வீட்டை நோக்கிப் பாயும் நீரோடையின் போக்கிலேயே நான் போனேன். a நீரோட்டத்திற்கெதிரே இன்னும் சுமார் ஒரு மைல் தொலைவில், ஒரு பழைய எல்ம் மரத்தின் அடிமரத்திற்கு அருகில் அவள் தன்னுடைய நான்கு குஞ்சுகளையும் காவல் காத்துக்கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். பட்டுப்போன ஒரு மரத்தின் துளையுள்ள அடிக்கட்டையில் அவை மகிழ்ச்சியாயும் திருப்தியுடனும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஆந்தை—படைப்பின் என்னே ஓர் அதிசயம்! இரவு நேரத்தில் அதன் கண்பார்வை மனிதர்களுடைய கண்பார்வையைவிட நூறு மடங்கு கூர்மையுள்ளதாக இருக்கிறது. மங்கலான நிலா வெளிச்சத்திலும்கூட, ஆந்தை தன்னுடைய இரையைப் பிடிக்கமுடிகிறது. மனிதக் கண்களில் நிறங்களைப் பிரிக்கும் கூம்புகள் (cones) என்றழைக்கப்படும் செல்களும், ஒளியைக் கூட்டிச் சேர்க்கும் தண்டுகள் (rods) என்றழைக்கப்படும் செல்களும் இருக்கின்றன. ஆனால் ஆந்தையின் கண்களோ விஷுவல் பர்ப்பிள் என்று அறியப்படும் ஒரு ரசாயனப்பொருளைத் தன்னுள் கொண்ட தண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன. இது மிகவும் மங்கிய மினுங்கொளியைக்கூட ரசாயனக் குறிகளாக மாற்றி பறவைக்கு தெளிவாகக் காணக்கூடிய உருவத்தைத் தருகிறது. ஆனால் மனிதர்களோ ஏதோ ஒளி இருப்பதை மட்டும் பார்க்கிறார்கள்.
பெரும்பாலான விலங்குகளால் செய்யமுடிவதுபோல, ஆந்தைகளால் அவற்றின் கண்குழிகளில் தங்களுடைய கண்களைச் சுழற்றமுடியாது. ஒவ்வொரு கண்ணும் ஒரு காரின் ஹெட்லைட்டைப் போலப் பொருத்தப்பட்டிருக்கிறது. இதை ஈடுகட்ட, ஆந்தையால்—ஆச்சரியப்படும்வகையில் சுழன்றுகொடுக்கும் கழுத்தின் உதவியால்—எல்லா திசைகளிலும் பார்ப்பதற்கு தன் தலையைக் குறைந்தது 270 டிகிரியாவது சுழற்றமுடிகிறது!
ஒரு மரத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் தன்னுடைய கூட்டிலிருந்து, புல்லில் ஊர்ந்து செல்லும் ஒரு எலியை பார்க்கமுடிவதோடு இல்லாமல், அதன் சலசலப்பு சத்தத்தை ஒரு ஆந்தையால் கேட்கவும் திறமைபடைத்ததாக இருக்கிறது என்பதாக சொல்லப்படுகிறது. அற்புதகரமான அதன் கேள்வித்திறன் அதன் காதின் வடிவமைப்பின் காரணமாகவே இருக்கிறது. ஒரு ஆந்தையின் முகத்தை நீங்கள் பார்த்தீர்களானால், அதன் காது விறைப்பான வளைந்த இறகுகளால் சூழப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இவை ஒலியலைகளைக் கூட்டிச்சேர்த்து காதுகளுக்குள் செலுத்தி, பறவைகளுக்கெல்லாம் இருப்பதிலேயே மிகப்பெரிய இந்தச் செவிப்பறையில் சத்தத்தை மோதச் செய்கின்றன. காதுகள் ஒன்று மற்றொன்றைவிட சிறிது உயர்மட்டத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. இது சத்தத்தை துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள ஆந்தைக்கு உதவிசெய்கிறது.
பார்வையினாலோ சத்தத்தினாலோ ஆந்தை தனது இரையைக் கண்டுபிடித்து விட்டால், அது சத்தம்போடாமல் விரைந்து தாக்குகிறது. அனைத்து சப்தங்களும் அடக்கப்படுகிற அளவுக்கு ஆந்தையின் உடல் மிகவும் மிருதுவான இறகுகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. அதன் இறக்கையிலுள்ள இறகுகளின் ஓரங்களும்கூட, பறக்கும்போது சிறகடிக்கும் சப்தம் கேட்கப்படுவதைத் தவிர்க்குமளவுக்கு மிருதுவாக இருக்கின்றன. இருண்ட ஓர் இரவில், தெருவின் ஓரத்தில் ஒரு ஆந்தை கீழாக பறந்துவந்து விரைந்து தாக்கும்போது அதன் ஒளியைக்கண்டு கிராமவாசிகள் அவ்வப்போது பயந்திருக்கின்றனர். அதன் கூட்டில் இருக்கும் அழுகிப்போகும் குச்சிகளில் வளரும் ஓளிவீசுகிற பாசி வகையோடு இறகுகள் உராய்ந்ததன் காரணமாக அவர்களுக்கே தெரியாமல் அது இரவு நேரங்களில் ஒளிவீசுகிறது.
நீரோட்டத்திற்கு எதிரே தொடர்ந்து போய் வளைந்து நெளிந்த பழைய மரத்தின் அடிமரத்திற்கு விரைவில் நான் வந்துசேர்ந்தேன். காலைவேளையின் வெதுவெதுப்பு, இளம் பறவைகளில் ஒன்றை துளைக்கு வெளியே வந்து, மேலே இருக்கும் இலைப்படலத்தை ஊடுருவி வரும் சாய்வான சூரியவொளிக் கதிர்களில் குளிர்காயும்படி செய்திருந்தது. அங்கு அது உட்கார்ந்து பரவிய சூரிய வெளிச்சத்தில் கண்ணைச் சிமிட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது—இன்பகரமான ஒரு காட்சி!
மேலேயுள்ள கிளைகளில் எங்கேயோ மறைந்துகொண்டிருந்த பழைய பழுப்புமஞ்சள் ஆந்தை அதன் துணையுடன் தன் கூட்டில் ஓய்வெடுக்கையில் தன்னுடைய பாதித் திறந்த கண்களால் தனக்கு முன் இருக்கும் அனைத்தையும் நோட்டமிடுகிறது. அவை தங்களுடைய மகத்தான படைப்பாளரால் கொடுக்கப்பட்ட இயல்பான ஞானத்தால் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் காலக்கட்டம் வரும்வரை அந்த ஆந்தை தன்னுடைய குஞ்சுகளைப் பராமரித்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும்.
[அடிக்குறிப்புகள்]
a ரோமப் பேரரசர் ஹேட்ரியனின் ஆணையின்படி பொ.ச. 120-க்கும் 130-க்கும் இடையில், இங்கிலாந்துக்கு வடக்கேயுள்ள கீழ்ப்படுத்தப்படாத காலிடோனிய இனத்தவரின் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு ஹேட்ரியனின் சுவர் எழுப்பப்பட்டது. இது இங்கிலாந்தின் மேற்கே சால்வே கழிமுகத்திலிருந்து கிழக்குக் கடற்கரையில் டைன் ஆற்றுமுகம் வரை 117 கிலோமீட்டருக்கும் சற்று அதிக நீளத்தைக் கொண்டதாய் இருக்கிறது.