எமது வாசகரிடமிருந்து
சமாளிக்கமுடியாத பிள்ளைகள் நவம்பர் 22, 1994 இதழில் வந்த “சமாளிக்கமுடியாத பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல்” என்ற கட்டுரைகளை இருதயப்பூர்வமான நன்றியுணர்வுடன் நான் வாசித்தேன். என்னுடைய மகனுக்கு கவனப்பற்றாக்குறை மிகை இயக்கச் சீர்கேடு (Attention Deficit Hyperactivity Disorder) உள்ளது. மிகவும் சாமாளிக்கமுடியாதபடி இந்தப் பையன் இருந்துவருவதற்கு என்ன மிகப் பெரிய தவற்றை நான் செய்துவருகிறேன் என்பதாக பல வருஷங்களாக எனக்குள்ளாகவே நான் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அவனுடன் பைபிள் படித்தேன், அவனுடைய எல்லா தேவைகளையும் கவனித்துக்கொண்டேன், ஆனால் காலையில் அவனை எழுப்புவதையும் பின்பு பள்ளிக்கூடத்திலிருந்து அவனைக் கூட்டிக்கொண்டு வருவதையும் குறித்து ஒவ்வொரு நாளும் நான் பயப்பட்டேன். ADHD உள்ள பிள்ளைகளுடன் தொடர்புகொள்பவர்கள் அனைவருக்கும் இந்தத் தகவல் உதவிசெய்யும் என்று நம்புகிறேன்.
இ. டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்
மிகவும் சமாளிக்கமுடியாத பத்து வயது மகன் ஒருவன் எனக்கு இருக்கிறான். சிலசமயங்களில் நான் உதவியற்றவளாக, மனச்சோர்வடைந்தவளாக, தனிமையானவளாக, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவளாக உணர்ந்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கையையும் நடைமுறையான அநேக ஆலோசனைகளையும் அளித்ததற்காக உங்களுக்கு ரொம்ப நன்றி.
ஹெச். எஸ்., தென் ஆப்பிரிக்கா
அந்தக் கட்டுரைகளைப் படித்து நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னுடைய மகனுக்கு கவனப்பற்றாக்குறை சீர்கேடு (Attention Deficit Disorder) உள்ளது. இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு வாழ்க்கை அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. என்றபோதிலும், மதிப்பையும், மிக முக்கியமாக அன்பையும் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பி. டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்
எங்களுடைய மகன் ADHD-யால் அவதியுறுகிறான் என்பதை ஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் கண்டுபிடித்தோம். இரண்டு வயதில், அவன் சூறைப்புயலாக இருக்கிறான், கிறிஸ்தவ கூட்டங்களில் அமைதியாக இருக்க முடியாது, மற்றவர்களைத் தள்ளுகிறான், அங்குமிங்கும் ஓடித்திரிகிறான், எப்போது பார்த்தாலும் விழுந்து அடிபட்டுக்கொள்கிறான். எங்களிடமிருந்து சிலர் தங்களை ஒதுக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்கள், சிலசமயங்களில் நல்ல நண்பர்கள்கூட புண்படுத்துகிற சொற்களை சொல்லாமல் இருக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட புரிந்துகொள்கிற ஒரு முறையில் பிரச்சினைகளை விவரித்துக் கூறியதற்காக நன்றி.
ஆர். எஃப்., ஜெர்மனி
எனக்கு 15 வயது, எனக்கு ADHD இருக்கிறது. யெகோவா நம்மைப் புரிந்துகொள்கிறார் என்றும் நமக்கு உதவியளிக்க முடியும் என்றும் அறிவது அதிக ஆறுதலளிப்பதாக இருக்கிறது. நான் ஒழுங்காக மருந்து சாப்பிட்டுவருகிறேன், அது அதிக உதவியளிக்கிறது. நான் என்னுடைய பள்ளிக்கூட பாடங்கள், வீட்டு வேலைகள், பைபிள் படிப்பு ஆகியவற்றில் நன்றாக கவனத்தை ஒருமுகப்படுத்த முடிகிறது. நான் அந்தக் கட்டுரைகளை வெகுவாகப் போற்றினேன், ஏனென்றால் இந்தக் கோளாறு ஏதோவொரு மிகைப்படுத்தப்பட்ட ஆர்வமல்ல, உண்மையிலேயே ஏற்படுகிறது என்பதை மற்றவர்களுக்குக் காண்பித்தீர்கள்.
எஸ். கே., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கட்டுரைகள், பெற்றோர்களாக நாங்கள் குறைவுபடுகிறோம் என்ற உணர்ச்சிகளை நீக்குவதற்கு எங்கள் இருவருக்கும் உதவிசெய்திருக்கிறது. ADHD-யால் அவதிப்படுகிற என்னுடைய மகனுக்கு அதிக செல்லங்கொடுக்கிறோம் அல்லது “பின்னாடி அடிகொடுக்க வேண்டும்” என்று நல்லெண்ணமுள்ள நண்பர்கள் சாடைமாடையாக கூறியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எண்ணற்ற பெற்றோர்களுக்கு இருக்கிற இக்கட்டான நிலையைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவிசெய்யக்கூடும்.
டி. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
வேலைகளை ஏற்படுத்துதல் “வளரும் நாடுகளில் வேலைகளை ஏற்படுத்துதல்,” என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. (அக்டோபர் 22, 1994) நான் இப்பொழுதிருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வருகிறேன், நான் படித்து பட்டம்பெறும்போது ஒரு பயனியராக ஆகவும் (முழுநேர சுவிசேஷகர்) திட்டமிட்டிருக்கிறேன். வேலை கிடைப்பதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும். நான் சரீரப்பிரகாரமாக பிரயாசப்பட வேண்டியதில்லாமல் உட்கார்ந்தே செய்யக்கூடிய ஒரு வேலைக்காக இதுவரை விரும்பினேன், ஆனால் வளரும் நாடுகளிலுள்ள என்னுடைய சகோதரர்கள் தங்களால் முடிந்த எந்த வேலையையும் எப்படிச் செய்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறிந்துகொண்டபோது, நான் என்னையே குறித்து வெட்கப்பட்டேன். பயனியர் சேவை செய்வதற்கு அனுமதிக்கிற எந்த வேலையையும் இப்பொழுது நான் செய்வேன்.
ஒய். டி., ஜப்பான்
1914 “1914—நம் உலகை இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி வெடிச்சத்தங்கள்,” (நவம்பர் 8, 1994) என்ற உங்களுடைய கட்டுரையை நான் இப்பொழுதுதான் படித்து முடித்தேன். விவாதத்துக்குரிய இப்படிப்பட்ட ஒரு தலைப்பில் இந்தளவுக்குத் தெளிவாகவும் எளிதாகவும் இருந்த தகவலை நான் வாசித்ததே இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். என்னுடைய நாட்டிலுள்ள பள்ளிகள் உலகப் போர்களைப் பற்றிய சரித்திர பாடத்தில் விஷயங்களை ஆழமாக கொடுப்பதில்லை, ஆனால் இந்தப் பொருளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொண்டது உலக சம்பவங்களைப் புரிந்துகொள்வதில் மிகப் பெரிய உதவியாய் இருக்கிறது.
டபிள்யு. எஸ்., வெனிசுவேலா
குறுக்கெழுத்துப் புதிர் உங்களுடைய குறுக்கெழுத்துப் புதிரை, குறிப்பாக டிசம்பர் 8, 1994 ஆங்கில இதழில் உள்ளதை நான் எவ்வளவாக அனுபவித்துக் களித்தேன் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவை கூடுதலான பைபிள் ஆராய்ச்சி செய்யும்படி என்னைத் தூண்டுகின்றன. நான் விடையை ஏற்கெனவே அறிந்திருக்கக்கூடும் என்றாலும்கூட இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனத்தைத் தேடிப்பார்க்கும்படி என்னைத் தூண்டுகிற ஒரு முறையில் புதிருக்கான தீர்வுகள் எழுதப்பட்டுள்ளன. ஆரோக்கியமான, அனுபவித்துக் களிக்கத்தக்க புதிர்களுக்காக உங்களுக்கு நன்றி!
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்