எமது வாசகரிடமிருந்து
மறுபிறப்பு “நீங்கள் முன்பு வாழ்ந்திருக்கிறீர்களா? நீங்கள் மறுபடியும் வாழ்வீர்களா?” என்ற மிகச் சிறந்த தொடர் கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. (ஜூன் 8, 1994) மரித்தவர்களின் நிலைமையைக் குறித்த உண்மையை இந்தக் கட்டுரைகள் எளிய முறையிலும் அறிவுக்குப் பொருத்தமான விதத்திலும் விளக்குகின்றன. இப்பொருள் சம்பந்தமாக சத்தியத்துக்காகத் தேடிக்கொண்டிருக்கும் எவரும் நீங்கள் எழுதியிருப்பவற்றை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவர்.
F. P., இத்தாலி
முன்னாள் மல்யுத்த வீரர் “நான் நேசித்ததை வெறுக்க கற்றுக்கொண்டேன்” என்ற கட்டுரைக்கு உங்களுக்கு மிக்க நன்றி. (ஜூன் 8, 1994) அப்டலியோ நனஸ் என்பவரின் சரிதை என் கணவரின் சில மருத்துவ பிரச்சினைகளைக் குறித்து புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியிருக்கிறது. முன்பு மல்யுத்த வீரராக இருந்ததன் காரணமாக, அவரும்கூட மனச்சோர்வினால் கஷ்டப்படுகிறார். உண்மையில், தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள யெகோவா தேவன் தான் என் கணவருக்கு உதவினார்!
S. S., ஐக்கிய மாகாணங்கள்
வலி உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடும் தொழிலை நான் செய்கிறேன். “வலி இல்லாத வாழ்க்கை சாத்தியமா?” என்ற தொடர் கட்டுரைகளுக்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். (ஜூன் 22, 1994) இத்தகவலை ஆராய்ச்சி செய்து வெளியிட்டதில் உட்பட்டிருந்த உட்பார்வை, சமநிலை, ஞானம் ஆகியவற்றால் நான் பெரிதும் கவரப்பட்டேன். நிபுணர்கள், நோயாளிகள், இன்னும் மற்றவர்களுக்கு இந்தக் கட்டுரை அதிக மதிப்புவாய்ந்த உதவியாக இருக்கும். உடம்பைத் தேய்த்துப் பிசைந்துவிடும் தொழில்நுட்பங்களை உபயோகித்து, நான் தொடர்ந்து வலியை எதிர்த்துப் போராடுகிறேன். கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் நாட்பட்ட வலியே இல்லாமற்போகும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
D. T., டென்மார்க்
இந்தக் கட்டுரைகள் எனக்கு அதிக ஆறுதலைத் தந்தன. என்னைப் போல் தினமும் வலியைப் பொறுத்துக்கொள்ள வேண்டியவர்கள் அநேகரோடு நான் அதைப் பகிர்ந்து கொண்டேன்.
M. G., ஐக்கிய மாகாணங்கள்
நான் இதை உங்களுக்குப் படுக்கையிலிருந்து எழுதுகிறேன். தண்டெலும்புத் துண்டுகளின் இடைப்பட்ட மெல்லெலும்புத் தகடு இரண்டு இடங்களில் பிசகியிருந்ததன் காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் நான் அவ்வப்போது படுக்கையிலிருக்க வேண்டியிருக்கிறது. “முதுகு வலியினால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா?” என்ற மிகச் சிறந்த கட்டுரைக்கு உங்களுக்கு நன்றி. (ஜூன் 8, 1994) அதை வாசிக்கும்போது அழுதேன், ஏனென்றால் நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருப்பது போல் அது இருந்தது. இப்பிரச்சினையை இவ்வளவு தெளிவாக எவராவது புரிந்துகொண்டிருப்பார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
B. H., இங்கிலாந்து
பத்து நாட்களுக்கு முன்பு தான் எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்தது, திருத்தமான தகவல் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு ஏற்பட்ட வலியின் காரணத்தைப் புரிந்துகொள்ள அக்கட்டுரை உதவியது. கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகள் மிகவும் பிரயோஜனமுள்ளவையாய் இருக்கின்றன, அநேகர் அதைக் கடைப்பிடித்து அறுவை சிகிச்சையைத் தவிர்ப்பர் என்று நம்புகிறேன்.
K. G., ஹங்கேரி
இசைக் காலக்கணிப்பு முரண்பாடா? “நடந்தும் நடு நடுவே காரில் பிரயாணம் செய்யும் ஹிப்பியிலிருந்து தென் அமெரிக்க மிஷனரியாக” என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (மார்ச் 22, 1994, ஆங்கிலம்) ஆனால் ஒரு குறிப்பு என்னைக் குழப்பமடையச் செய்தது. செப்டம்பர் 1973-ல் பீட்டல்ஸ்-ஐக் காண லிவர்பூலுக்குச் சென்றதாக ரிச்சர்ட் ஃபிலீட் குறிப்பிடுகிறார். எனக்குத் தெரிந்தவரை, பீட்டல்ஸ் கடைசிமுறையாக 1969-ல் பொதுநிகழ்ச்சி நடத்தினர், 1970-ல் கலைந்து போயினர்.
C. S., ஜெர்மனி
தவறாகப் புரிந்துகொண்டதைக் குறித்து வருந்துகிறோம். முன்பு ஒரு சமயம் பீட்டல்ஸ் பொதுநிகழ்ச்சி நடத்தியிருந்த இரவுவிடுதியைக் காண அவர் லிவர்பூலுக்குச் சென்றிருந்தார் என்று ரிச்சர்ட் ஃபிலீட் சொல்ல எத்தனித்தார்.—ED.
தற்கொலை “இளைஞர் கேட்கின்றனர் . . . தற்கொலைதான் பரிகாரமா?” என்ற கட்டுரைக்கு உங்களுக்கு என் இருதயப்பூர்வமான நன்றி. (ஏப்ரல் 8, 1994) தற்கொலை செய்துகொள்ள எத்தனை முறை நான் விரும்பியிருக்கிறேன். நான் சிறு பிள்ளையாயிருந்தபோது, நம்பியிருந்த ஒருவரால் பாலின விஷயத்தில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டேன் . . . கடந்த காலங்களில் ‘நான் சாக விரும்புகிறேன்’ என்று அநேக முறைகள் எழுதியிருந்ததினால், மொத்தம் எத்தனை முறைகள் என்பதை மறந்துவிட்டேன். நான் இப்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆகியிருக்கிறேன், முழு-நேர ஊழியராக சேவை செய்து வருகிறேன். இருந்தபோதிலும் இத்தூண்டுதல் அவ்வப்போது எனக்கு வருகிறது. இந்தக் கட்டுரையைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு இந்த உணர்வு எனக்கு இருந்தது. அது என்னை அழும்படி செய்தது. ஆனால் தொடர்ந்து உயிரோடிருக்க யெகோவா என்னை அனுமதித்திருக்கிறார். ‘தொடர்ந்து உயிர்வாழ்ந்து கொண்டிரு’ என்று அவர் கனிவாக என்னிடம் சொல்வது போல் தோன்றுகிறது. உங்களுக்கு மிக்க நன்றி.
Y. K., ஜப்பான்