மனச்சாட்சியே, நீ ஏன் என்னை வேதனைப்படுத்துகிறாய்?
“ஓ கோழையான மனச்சாட்சியே, நீ என்னை எவ்வளவு துயரப்படுத்துகிறாய்!” அந்தப் புகழ்பெற்ற வார்த்தைகள் ஷேக்ஷ்பியரின் நாடகத்தில் மூன்றாவது ரிச்சர்ட் அரசனால் சொல்லப்பட்டவை. அந்த அரசனின் பெயரையே தலைப்பாகக் கொண்டிருந்த அந்நாடகம் மனித மனச்சாட்சி தூண்டக்கூடிய வியாகுலத்தை விவரிக்கிறது. உண்மை வாழ்க்கையில் மனச்சாட்சி அமைதியைக் கெடுத்து, அநேகருடைய வாழ்க்கையை வேறு விதமாக மாற்றியமைத்திருக்கிறது.
சமீபத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் மனிதனின் விஷயத்தில் மனச்சாட்சியின் வல்லமை விளக்கிக் காட்டப்பட்டது. பாதுகாப்புக் காவலராக அவர் வேலை செய்தார். அது பெரும் தொகையான பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதை உட்படுத்தியது. ஒரு நாள் அவர் சோதனைக்கு இடம் கொடுத்து விடும் வரை எல்லாம் சரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று அவர் 2,40,000 டாலர்கள் கொண்ட ஒரு சாக்குப் பையை திருடிவிட்டார். அவரோடு சேர்ந்து இன்னும் இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்ததால் அவர்களுள் அதை யார் திருடியது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் மூன்று பேரும் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
தான் திருடிய பணத்தை அவர் மறைவாக பதுக்கி வைத்திருந்தார், அத்திருட்டைப் பற்றிய பரபரப்பு முடிந்தவுடன் அதைப் பயன்படுத்தலாம் என்று எண்ணினார். ஆனால் அதற்குப் பதிலாக எதிர்பாராதவிதமான ஒரு வேதனை ஆரம்பித்தது. தன்னோடு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எவ்வித தவறும் செய்யாமல் வேலையை விட்டு நீக்கப்பட்டதைக் குறித்து அவரால் யோசிக்காமல் இருக்கவே முடியவில்லை. அவருடைய மனச்சாட்சி அவருக்கு ஒரு கணம்கூட அமைதியைக் கொடுக்கவில்லை. அவரால் உறங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. அவரைக் கையாளுவது கூடாத காரியமாகிவிட்டது.
இறுதியில் குற்றமுள்ள மனச்சாட்சி அவரை மேற்கொண்டது, தன்னுள் நடந்துகொண்டிருந்த போராட்டத்தினால் அவர் சோர்வுற்று, போலீசாரிடம் சென்று தான் திருடிய பணத்தைக் கொடுத்து விட்டார். அவர்களிடம் சொன்னார்: “அந்த வியாகுலம் மிகவும் அதிகமாக இருந்தது. அதை என்னால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியவில்லை!” அவர் மேலுமாக சொன்னார்: “திருடன் என்று உங்களைக் கண்டனம் செய்துகொண்டிருக்கும் மனச்சாட்சியோடு சுயாதீனமாக வெளியில் இருப்பதைக் காட்டிலும் நேர்மையுள்ளவனாய் சிறைச்சாலையில் இருப்பதே மேல்.”
மனச்சாட்சி என்பது எல்லா மனிதருக்கும் கடவுள் கொடுத்திருக்கும் ஒரு வெகுமதி. அது நம்மை குற்றப்படுத்தலாம் அல்லது அங்கீகரிக்கலாம். நாம் அதற்கு செவிகொடுத்தோம் என்றால், தவறுகளைச் செய்வதிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும், நியாயங்காட்டி வாதிட்டு வினைமையான தவறு செய்வதிலிருந்து தடுக்கும். ஆகையால், ஷேக்ஸ்பியரின் மூன்றாவது ரிச்சர்ட் அரசன் செய்தது போல அதன் குத்தல்களை அசட்டை செய்யாமல் அல்லது கோபத்தோடு அதை எதிர்த்துக் கொண்டிராமல் நாம் அதைப் பேணி ஆதரித்து பாதுகாக்க வேண்டும்.—ரோமர் 2:14, 15.