துப்பாக்கிகள் ஒரு மரண வழி
“அவர்களுக்கு இந்தப் போலி நம்பிக்கை இருக்கிறது” என்பதாக ஒரு பிரபல காவல் அதிகாரி சொன்னார். “தாங்கள் எவரையோ நோக்கி துப்பாக்கியைக் காட்டுவார்கள்; கட்டுப்பாட்டுடனே இருப்பார்கள், அது செயல்படவில்லையென்றால் ஓர் அரை நொடிப் பொழுது அநேக காவல் அதிகாரிகள் தயங்குவது போலவே தயங்குவார்கள், பின்பு அவர்கள் அதற்காகத் தங்கள் உயிரை விலையாகச் செலுத்துவார்கள்.” பெயர் பெற்ற ஐ.மா. பொதுமக்கள்–பாதுகாப்பு ஆணையரும்கூட இந்தக் கருத்தை தெரிவித்தார்: “சொந்தமாகத் துப்பாக்கி வைத்திருப்பது, மற்றொரு உயிரைக் கொன்றுவிட்டு அதன் பின்விளைவுகளோடு வாழ்வதற்குத் தயாராக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது என்ற உண்மையை அநேகர் சமாளிக்கமுடியாதவர்களாக இருக்கின்றனர். நீங்கள் உண்மையில் சுடாமல், குற்றவாளி உங்களை சுடுவாரேயானால், ஆயுதமே வைத்தில்லாமல் இருப்பதைவிட அதைச் சொந்தமாக வைத்திருப்பது அதிக ஆபத்தானதாகும்.”
கடைசியாக, இந்தக் காரியம் இருக்கிறது: “இந்த எல்லா ஆயுதமும் குறைவான தொந்தரவுக்கல்ல, அதிகமான தொந்தரவுக்கே வழிநடத்தும் என்பதைக் கொஞ்சம் கற்பனையும்கூட நமக்குச் சொல்லவேண்டும்” என்பதாக காவல்துறையிலுள்ள குடும்ப அங்கத்தினரும் சுடுவதில் தேர்ச்சிப் பெற்றவருமான ஒரு பெண் நிருபர் எழுதினார். “‘கவர்ச்சியான’ துப்பாக்கிகளை வாங்கும் பெண்கள், வெடித்து சிதறிய மூளைகளின் அழகுணர்ச்சியை எதிர்ப்பட்டிருக்கிறார்களா? விளைவு கவர்ச்சியாக இல்லை. வெடித்து சிதறிய முகத்தோடு ஒரு மனிதனை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” அல்லது “இருதயத்துக்குக் குறி வைக்கக்கூடுமா?” என்று அவள் கேட்கிறாள்.
எதிரி உங்களை சடுதியாக அணுகும்போது ஒளித்து வைக்கப்பட்டுள்ள உங்கள் துப்பாக்கியை எத்தனை விரைவாக உங்களால் எடுக்கமுடியும்? அவளுடைய சொந்த அனுபவத்தைக் கவனியுங்கள்: “இறைச்சி வெட்டும் கத்தியோடு ஒரு வெறியனால் நான் தாக்கப்பட்டபோது, என்னைத் தாக்குபவனை பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ முன்னால் கத்தி என் தொண்டையின் மீது இருந்தது. நான் துப்பாக்கி எடுக்கச் சென்றிருந்தால், இறுதிகட்ட நெருக்கடியில் யார் வெற்றி பெற்றிருப்பார்?” பின்பு அவள் சொல்கிறாள்: “சொந்த பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கியைக் கனவிலும் நான் வைத்துக்கொள்ள மாட்டேன். இது நன்னடத்தைப் பற்றிய விஷயமல்ல; அது நடைமுறைக்குரிய ஒரு விஷயமாகும்.”
இப்பொழுது உணர்ச்சியில் ஆழ்த்தும் உண்மைகளைக் கவனித்துப் பாருங்கள். “வீட்டுக்காரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குமிடையே அபூர்வமாகவே நிகழும் சுடுதல்களில், ஒப்பிட்டுப் பார்க்கையில், தன் கைத்துப்பாக்கியைக் கையாளுவதில் அதிக திறமையுள்ளவனாக நிரூபிப்பது சுலபமாகவே கொள்ளைக்காரனாக இருக்கக்கூடும், இது வீட்டுக்காரரை செத்தவர்களின் மனைக்கு முடிவில் கொண்டுசெல்லக்கூடும்” என்பதாக 1989, பிப்ரவரி 6 டைம் பத்திரிகை அறிவிப்பு செய்தது. குற்றச்செயலை தடுப்பதில் ஒரு துப்பாக்கி எத்தனை தடையாக இருந்தபோதிலும், பாழாக்கும் மற்ற காரியங்களால் இது ஈடுசெய்யப்பட்டுவிடுகிறது. உதாரணமாக தற்கொலைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே 12 மாத காலப்பகுதியில், 18,000 ஆட்கள் தங்களைச் சுட்டுக் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.
துப்பாக்கி ஒன்று கைப்பையிலிருந்து அல்லது ஒப்பனை மேசையிலிருந்து எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்திராவிட்டால் முன்னேற்பாடற்ற இந்தச் செயல்களில் எத்தனை நிறைவேற்றப்படாமல் இருந்திருக்கக்கூடும் என்பதை தீர்மானிக்க முடியாது. என்றபோதிலும் இது ஆயத்தமாக இருந்தது, பகுத்தறிவோடு யோசித்து ஒருவேளை தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு போதிய நேரத்தைக் கொண்டிருப்பதிலிருந்து ஒருசில ஆட்களை தடுத்திருப்பது உறுதியாகும். ஐ.மா.-வில் துப்பாக்கியினால் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை எண்ணிக்கையை, உலகின் மீதமுள்ள இடங்களினுடையதோடுக் கூட்டினால், மொத்த எண்ணிக்கை நிச்சயமாகவே அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
1989, ஜூலை 17 டைம் பத்திரிகை, 1989 மே மாதம் முதல் வாரத்தில் ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே 464 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக அறிவிப்பு செய்தது. “இந்த வருடம், 30,000-க்கும் அதிகமான மற்றவர்கள் அவர்களுடைய முடிவில் பங்குபெறுவார்கள்” என்று டைம் குறிப்பிட்டது. “இன்றுவரை எய்ட்ஸினால் மரித்திருப்பவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் துப்பாக்கி குண்டு காயங்களால் அதிகமான அமெரிக்க மக்கள் மரித்திருக்கிறார்கள். அதேவிதமாகவே, முழு வியட்நாம் போரிலும் இருந்ததைவிட இரண்டு ஆண்டுகளில் துப்பாக்கிகள் அதிகமான அமெரிக்க உயிர்களை எடுத்திருக்கிறது” என்பதாக பத்திரிகை அறிவிப்பு செய்தது.
சொந்தமாகத் துப்பாக்கிகளை வைத்திருக்கும் பெற்றோர், தங்களுடைய உயிரையோ அல்லது மற்றவர்களுடைய உயிரையோ எடுப்பதற்கு அவைகளைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்குப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். “அதிகமதிகமான வீட்டுச் சொந்தக்காரர்கள் தங்கள் வீடுகளை பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கையில், 1988-ல் இளைஞர்களின் மத்தியில் தற்கொலை அதிகரிப்பு, துப்பாக்கி எளிதில் கிடைக்கக்கூடியதாயிருப்பதோடு ஓரளவு தொடர்புடையதாயிருக்கலாம். . . . உங்கள் வீட்டில் ஓர் ஆயுதம் இருக்குமேயானால், ஒரு பிள்ளை ஒருநாள் அதைக்கொண்டு எவரையாவது சுடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று ஒரு செய்திதாள் எழுதியது. “1988-ல் 3,000-க்கும் அதிகமான பிள்ளைகள் மற்ற பிள்ளைகளைச் சுட்டுக்கொன்றார்கள்” என்பதாக 1989 ஜூன் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவித்தது.
பெற்றோர்களே, உங்கள் துப்பாக்கிகள் எங்கே இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பெற்றோர் அறிந்திருந்தார், அவருடைய பத்து வயது பையனும் அறிந்திருந்தான். “அவன் தன்னுடைய அப்பாவின் உயர்–சக்தி வேட்டைத் துப்பாக்கியில் குண்டுகளைத் திணித்து, வீடியோ விளையாட்டுகளில் அவனைவிட சிறந்துவிளங்கியதாக பெருமைப்பாராட்டிய ஒரு பெண்ணைச் சுட்டுக்கொன்றான்” என்பதாக 1989, ஆகஸ்ட் 26 நியு யார்க் டைம்ஸ் அறிவிப்பு செய்திருந்தது. உங்கள் பிள்ளையின் சாப்பாட்டு பையில், அவனையோ அவளையோ பள்ளிக்கு அனுப்பி வைக்கையில் ரொட்டியும் இனிப்பு அப்பமும் தவிர எது இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் துப்பாக்கி இருக்கக்கூடும் என்பதை நீங்கள் நம்புவீர்களா? நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரொட்டி, பால் மற்றும் இனிப்பு அப்பங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், ஜனநெரிசல் இருந்த சிற்றுண்டிச்சாலையில் அவர்களுடைய பையனிடமிருந்து பள்ளி அதிகாரிகள், .25–காலிபர் ஆற்றலுள்ள மருந்து திணிக்கப்பட்ட கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்தபோது, ஐந்து வயது சிறுவர்களுக்குரிய விளையாட்டுமுறைக் கல்விப்பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் பெற்றோர் என்னவென்று நினைப்பது?
பின்னால் 1989-ல் முதல் வகுப்பிலிருந்த ஆறு வயது பிள்ளை மருந்து திணிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை பெருமையாக காண்பித்துக்கொண்டிருக்கையில் பிடிபட்டான். அதே மாதத்தில் 12 வயது பிள்ளை மருந்து திணிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றதற்காகக் கைதுசெய்யப்பட்டான். இவை அனைத்துமே, அதே பள்ளியிருந்த, ஜில்லாவில் நிகழ்ந்தன. ஃப்ளாரிடாவில், ஒரு மாணவி, ஒரு பிள்ளையின் கைகளிலிருந்த மருந்து திணிக்கப்பட்ட துப்பாக்கியின் ஆபத்தை தப்பித்துக்கொள்ள போதிய அதிர்ஷ்டமுள்ளவளாக இருக்கவில்லை. 11 வயது பெண் தன் சிநேகிதிகளுக்கு காண்பிக்க கொண்டுவந்திருந்த துப்பாக்கியை தற்செயலாகச் சுட்டபோது, அவள் பின்பக்கத்தில் சுடப்பட்டாள்.
“நம்முடைய ஆறு வயது பிள்ளைகள் வீட்டுக்குச் செல்கின்றனர், பெரும்பாலும் வீட்டில் துப்பாக்கி ஒன்று இருப்பதை அனைவரும் அறிவர்,” என்று ஒரு பள்ளி முதல்வர் குறிப்பிட்டார். “அவர்கள் அநேகர் துப்பாக்கியின் விளைவைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றனர்” என்றார் மூன்றாவது வகுப்பு ஆசிரியர். “ஒரு துப்பாக்கியின் விளைவால் ஒருவேளை ஒரு தகப்பன், ஒரு மாமா அல்லது ஒரு சகோதரன் இனிமேலும் வீட்டில் இல்லாமலிருக்கலாம்” என்று அவர் சொன்னார். மிகச் சிறிய பிள்ளைகளால் கொண்டுவரப்படும் துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்காக உலோகத்தை தடங்காட்டும் கருவியைப் பொருத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை ஒருசில பள்ளி அமைப்புகள் கண்டிருக்கின்றன, வயதில் மூத்த மாணவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை! பெற்றோர்கள், விசேஷமாக தங்கள் பிள்ளைகள் கண்டுபிடிக்கக்கூடிய இடத்தில் தங்களுடைய வீடுகளில் துப்பாக்கிகளைக் கொண்டிருப்பதை பொருத்தமாகக் காணும் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளின் செயல்களுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
பெற்றோர் தங்களுடைய துப்பாக்கிகள், தங்கள் பிள்ளைகளோ மற்றவர்களோ கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக தங்களைத் தேற்றிக்கொள்ளக்கூடும். ஆனால் எதிர்பாராதவகையில் மரித்துப்போன பிள்ளைகள் தங்கள் பெற்றோரை தவறென காண்பித்திருக்கின்றனர். மேலும் தெளிவாக இருக்கும் இதைச் சிந்தித்துப்பாருங்கள். “இரண்டு வழிகளையும் நீங்கள் கொண்டிருக்கமுடியாது” என்பதாகக் காவல்துறை முதல்வர் குறிப்பிட்டார். “உங்கள் வீட்டிலுள்ள பழிபாவமறியாதவர்கள், உங்கள் பிள்ளைகள் அல்லது வீட்டுக்கு வருகிறவர்கள் அல்லது வேறு எவரும் அதனால் காயமடையாதபடி உங்கள் துப்பாக்கியை நீங்கள் உண்மையில் பாதுகாப்புச் செய்வீர்களேயானால், முதலிடத்தில் நீங்கள் எந்த வகையான நெருக்கடிக்காக அதை வாங்கினீர்களோ, அது நேரிடும்போது, அதை நீங்கள் எடுக்கக்கூடாதவர்களாக இருப்பீர்கள்.”
வீட்டுத் துப்பாக்கி எப்போதாவது பயன்படுத்தப்பட்டதேயானால், அதனால் “குடும்ப அங்கத்தினர் அல்லது நண்பர் மீது சுடுகிற வாய்ப்பு, உரிமையில்லாது நுழைபவரைச் சுடுவதைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது” என்பதாக டைம் பத்திரிகை அறிவிப்பு செய்தது. “ஒரு மனைவி அல்லது தாய், வீட்டிற்குள் புகுந்து விடும் திருடனின் சப்தத்தைக் கேட்பதாக நினைத்து வீட்டுக்கு பிந்திய நேரத்தில் வரும் கணவனையோ அல்லது மகனையோ சுட்டுவிடுகிறாள்” என்று பொதுமக்கள்–பாதுகாப்பு ஆணையர் ஒருவர் சொன்னார். ‘அப்படியென்றால் மக்கள் எவ்விதமாக தங்கள் வீடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?’ என்பதாக அவர் கேட்கப்பட்டார். “ஒருவேளை உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழி, உங்கள் உயிருக்குப் பதிலாக உடைமைகளை ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்வதாகும். பெரும்பாலான திருடர்களும் வீட்டில் புகுந்து திருடுபவர்களும் கொல்வதற்கு அல்ல, திருடுவதற்காகவே அங்கு இருக்கிறார்கள். வீட்டில் பெரும்பாலான வேட்டுப்படைக் கருவிகளினால் ஏற்படும் மரணங்கள், வீட்டுக்காரருடைய துப்பாக்கிகளாலேயே நிகழுகின்றன. எப்படியிருந்தாலும், நகரவாசிகள் ‘நகர் சுற்றுக் காவல்’ தொகுதிகளை அமைத்துக்கொள்வதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.” கடைசியாக துப்பாக்கி சொந்தக்காரர்கள் ஒரு கைப்பை அல்லது பணப்பையிலுள்ளதை அல்லது ஒரு வீட்டிலுள்ள ஒருசில விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாத்துக்கொள்ள மற்றொரு மனித உயிரை எடுக்க அவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதாகத் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஞானமுள்ளவராக இருந்தால், உங்கள் விலைமதிப்புள்ள பொருட்களுக்காக உங்கள் உயிரை மிரட்டுகின்ற ஒருவனை நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள். இவைகளைவிட உங்கள் உயிர் அதிக மதிப்புள்ளதாகும். (g90 5/22)