மிருதுவான பவழம் கடலின் மலர் விலங்குகள்
பவழம் என்று ஒருவர் குறிப்பிடுவதைக் கேட்கும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒருவேளை நீங்கள் அதை, அதிவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள தீவுகளும் மணலான கடற்கரைகளும் உண்டாவதற்கான அடிப்படைக் கட்டுமானப் பொருளாக எண்ணலாம். நீங்கள் கரீபியனில் வாழ்பவராக இருந்தால், ஒருவேளை உங்களுடைய வீடு நிலத்திலிருந்து வெட்டப்பட்ட பவழத்துண்டுகளால் கட்டப்பட்டிருக்கலாம் அல்லது ஒருவேளை விலையுயர்ந்த கல்லின் தரமுள்ள பவழத்தால் செய்யப்பட்ட உங்களுக்குப் பிடித்தமான ஒரு நகை உங்கள் மனதில் தோன்றலாம். சந்தேகத்திற்கிடமின்றி இந்தவிதமானப் பவழத்தைத்தான், நீதிமொழிகள் எழுத்தாளர், ஒரு நல்ல மனைவி அவளுடைய கணவனுக்கு எவ்வளவு மதிப்பு வாய்ந்தவள் என்பதை விவரிக்கும்போது குறிப்பிடுகின்றார்.—நீதிமொழிகள் 31:10.
பாலிப் எனப்படும் ஒரு தனிப்பட்ட பவழ விலங்கானது, தாய் உடலிருந்து வெளியே தள்ளப்பட்ட ஒரு சிறிய செல்களின் கூட்டமாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, நங்கூரமிட்டு நிரந்தரமாக இருக்கக்கூடிய பொருத்தமான இடத்தை அடையும் வரையிலாக, சமுத்திரத்தின் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லப்படுகின்றது. கல்போன்ற பவழத்தில், லார்வா ஓர் உறுதியான அடிபாகத்தில் இணைந்தவுடனே கால்சியம் கார்பனேட்டைச் சுரக்கத் தொடங்கி, அது கடினமான கல்போன்ற வெளிப்புற எலும்புக்கூடாக உருவாகின்றது. இந்தப் பவழங்கள் வருடத்திற்கு நான்கு அங்குலங்கள் என்ற அளவில் வளருகின்றன.
ஆனால், நீங்கள் என்றாவது பவழத்தை மிருதுவான நுண்மையான மலராக நினைத்திருக்கின்றீர்களா? தங்களுடைய வித்தியாசமான வடிவங்களினாலும், வண்ணங்களினாலும் மலர் விலங்குகள் என்று அழைக்கப்பட்டுவருகின்ற பலவகையான மிருதுவான பவழங்கள் இருக்கின்றன. மிருதுவான பவழங்களும் நீந்துகின்ற லார்வாக்களாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், அதிக அளவாக கால்சியம் கார்பனேட் எலும்புக்கூட்டைச் சுரப்பதில்லை. எனவே இந்தச் சதைப்பற்றுள்ள மரம்போன்ற பவழமானது, கல்போன்ற பவழத்தைவிட வேகமாக வளருகின்றது, மற்றும் இவை நிரந்தரமாக இருப்பதில்லை.
இப்படிப்பட்ட ஒரு மிருதுவானப் பவழம், பெரிய, ‘ரப்பர்’ போன்ற, மரம்போன்ற உடலைக் கொண்டுள்ளது. பவழமானது தாவர இனத்தைச் சேர்ந்தது அல்ல, விலங்கினத்தைச் சேர்ந்தது. எனினும் இந்தப் பவழமானது ஓர் அழகிய மலர்ப்போன்று இருப்பதால் இதை மலர் விலங்கு என்றழைக்கின்றனர். அந்த மரப் பவழமானது, சிறிய ஊசிப் போன்ற கால்சியம் ஸ்பகூல்களினாலும் (இவைத் துண்டமிடப்பட்ட ஆல்மண்டுகள் போன்று தோன்றும்) அதன் உடலிலிருக்கும் சதைப்பற்றுள்ள திசுக்களிலிருக்கும் நீரோட்டத்தினால் ஏற்படும் அழுத்தத்தினாலும் மட்டுமே தாங்கப்படுகின்றது. வெப்பக்காற்று பலூன்களில் உஷ்ணமாக்கப்பட்ட காற்று நிரம்புவதைப் போன்று, இந்தப் பவழங்கள் தங்கள் மாம்சத்துக்கு உருவம் கொடுப்பதற்கு கடல்நீரை உள்ளே எடுக்கின்றன, ஆனால் நீரின் அழுத்தமும் அதிகம் இல்லை, நீரின் வெப்பமும் அதிகமில்லை. எனினும் அதனுடைய உடலும் கிளைகளும் தாங்கப்படுவதற்கு அந்த அழுத்தமானது சுற்றிலுமுள்ள நீரின் விளைவுடன் சேர்ந்து சரியாக உள்ளது. இந்த வகையான பவழமானது அதன் அமைப்பின் காரணமாக மூன்று அடிக்கு மேல் வளருவதில்லை. மேலும் இவை ஆழமில்லாத ஏரியையும் அமைதியான கடல் பகுதிகளையும் விரும்புகின்றன.
தங்களுடைய மரம்போன்ற உருவத்திற்கு உப்பியதும் இந்த மரப்பவழங்களானது மிக அழகாக, பார்ப்பவருக்கு, பூக்கள் நிறைந்த ஓர் அழகான பலவண்ண மலர்த்தோட்டத்தை நினைப்பூட்டும்படி இருக்கின்றன. வெளிச்சம் உட்புகக்கூடிய அவைகளின் உடலானது, வெள்ளை, மஞ்சள், தங்கம், இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் நீலம் கலந்த சிவப்பினாலான பாலிப்புகளைக் கொண்ட கிளைகளைத் தாங்கிக் கொண்டு, சுற்றிலுமுள்ள ஒளி மற்றும் நீரின் நிறம் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு பார்க்கும்போது கண்ணுக்கு இன்பமூட்டுகின்றன.
மற்றுமொரு மிருதுவான பவழம், டெய்சி பவழமாகும். டெய்சி பவழம் அதன் பெயர்க்காரணமாயிருக்கும் டெய்சியுடன் அதிகச் சாயலைக் கொண்டிருப்பதால் அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. டெய்சி பவழத்தில் பல வகைகள் உண்டு. அவைப் பாலிப்பின் வாயைச் சுற்றியுள்ள “இதழ்களின்” (உணர்ச்சி அவயவங்கள்) எண்ணிக்கையால் வேறுபடுத்தப்படுகின்றன.
வெள்ளை மற்றும் பழுப்புக் கலந்த வெள்ளை நிறமுள்ள இந்த நுண்மையான பவழங்கள் மரப்பவழங்கள் போன்று வண்ணம் நிறைந்ததாக இல்லாவிடினும், அவைகளின் அளவு, நீண்ட காம்புகள், உருவம் ஆகியவை பவழப்பாறைகளின் மேல் காண்பதற்கு இன்பமானவை. ஒரு கூட்டமானது, 15-லிருந்து 20 அடிகள் அகலம்வரை வளரக்கூடியது, நீரில் மூழ்குபவருக்கு, மலையடிவாரத்தில் உருளுகின்ற சிறுகுன்றினைச் சுற்றிலுமுள்ள டெய்சி வயலைக் காண்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கக்கூடியது. நீரோட்டமானது, பாலிப்புகளை நீரின் தாளத்திற்கு ஏற்ப மெதுவாக அசைத்து, காற்றினால் ஆடும் டெய்சிகள் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
நீர் மூழ்குபவர் ஒருவர் விரும்பும் பவழ வகைளில் ஒன்று கடல்விசிறி. ஒரு முதிர்ந்த கடல் விசிறியானது பளீரென்ற அழகுடன், கம்பீரமாகக் காணப்படும் பவழக் கூட்டமாகும். இந்த விசிறி, மிருதுவான பவழங்களுக்கு மிக நெருங்கிய உறவினராகும். எனினும் அதன் அமைப்பின் காரணமாக, இது “கொம்புள்ள பவழம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகைப் பவழங்கள் உள்ளேயிருக்கும் மரக்கட்டைப் போன்ற தண்டினைச் சுற்றியுள்ள மிருதுவான திசுக்களின் வரிசையில் பதிக்கப்பட்டிருக்கும் பாலிப்புகளைக் கொண்டது. இந்தத் தண்டு, நகங்கள், முடி மற்றும் குளம்புகள் ஆகியவற்றின் உயிரியல் உற்பத்தியில் உபயோகிக்கப்படும் கார்கோனின் என்ற புரதத்தை (கடல்விசிறிக்கு மற்றுமொரு வழங்குப் பெயர் கார்கோனியன் என்பதாகும்) உள்ளடக்கியுள்ளது.
இந்த விசிறிகளின் அடிமரம் பெரும்பாலும் தடிமனாகவும், உறுதியாகவும் கடினமானதாகவும் இருக்கும். கிளைகள் வெளிப்புறமாக அதன் நுனிகளை அடையும்போது (பெரும்பாலும் பல அடிகள்) அவை அதிகம் வளையும் தன்மையுடையதாகி, அவைகள் உண்டுவாழும் சிறிய ஜந்துக்களை அவைகளுக்குக் கொண்டுவரும் அழுத்தமான நீரோட்டத்தில் மெதுவாக ஆடும்.
இந்தக் கடல் விசிறிகளின் நிறமானது பழுப்பு, தங்கம் மற்றும் ஆரஞ்சு முதல் நீலம் கலந்த சிவப்பு மற்றும் பிரகாசிக்கும் சிவப்பு வரை வேறுபடுகின்றது. நுண்மையாகத் தோன்றும் பாலிப்புகள் உணவு உண்ண வெளியே வந்து தங்களுடைய வசீகரமான இறகுகள் போன்ற உணர்ச்சி அவயவங்களைக் கொண்டு கிளைகளை முற்றிலும் மறைக்கும் போது, குறிப்பிடத்தக்க வகையில் மிக அழகாக இருக்கும்.
பவழத்தைப் பற்றி சிந்திக்கும்போது, ஒருவர் எல்லாப் பவழங்களும் மதிப்பு வாய்ந்தவை அல்ல என்பதையும், எல்லாப் பவழங்களும் கட்டுவதற்குத் துண்டுகளாக உபயோகிக்கமுடியாது என்பதையும், ஆனால் எல்லாப் பவழங்களும் அழகானவை என்பதையும் கவனிக்க வேண்டும். இது, சிருஷ்டிப்பில் காணப்படும் உயிரினங்களில் உள்ள பலவகைகளையும் ஒவ்வொரு உயிரினத்தில் உள்ள பலதரப்பட்ட வேறுபாடுகளையும்பற்றிச் சிந்திப்பதற்கு நமக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தைத் தருகின்றது. அதைச் செய்யும்போது, சிருஷ்டிகரின் படைப்பாற்றல், கற்பனை மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றைக் கண்டு பிரமித்து நிற்கின்றோம். (சங்கீதம் 104:24) யெகோவாவின் ஞானம் மற்றும் அறிவைப் புரிந்து கொள்ளத் தொடங்குபவன் யார்!—ரோமர் 11:33.
பூமியின் 70 சதவிகிதத்தை மூடியுள்ள சமுத்திரங்களில் காணப்படும் உயிரினங்களைக் கவனிக்கும்போது, சங்கீதக்காரன் சங்கீதம் 104:25-ல் குறிப்பிடும் வார்த்தைகள் பற்றி நாம் ஆச்சரியப்படுகின்றோம்: “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது. அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும், பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.” (g89 3/22)
[பக்கம் 26, 27-ன் படங்கள்]
மேலே: தோல் டெய்சி
கீழே: மிருதுவான பவழ மரங்கள்
எதிர் பக்கம்:
மேலே: மிருதுவான பவழத்தின் அடிமரம்
கீழே: மிருதுவான பவழமும் ஒரு சிறிய மீன்வகையும்
[பக்கம் 28-ன் படங்கள்]
மேலே: சிவப்பு வண்ண கடல் விசிறி
கீழே: பொன் வண்ண கடல் விசிறி