“இயற்கையின் படைப்புகளில் தலைச்சிறந்த ஒன்று”
“இப்படித்தான் தென் ஆப்பிரிக்க விஞ்ஞானி ஒருவர் யானையின் தும்பிக்கையை வருணிக்கிறார். எலும்பில்லாத, தசைப்பற்றுக்களாலான இந்த உறுப்பு, ஒரு காலன் தண்ணீரை உறிஞ்சி, பின்னர் அதன் வாய்க்குள் பீற்றுக் குழலாற் பீற்றிக்கொள்ள உதவி செய்கிறது. இந்த ஆற்றல் இல்லாவிடில், இந்த மாபெரும் மிருகம் ஒவ்வொரு சமயமும் நீர் அருந்துவதற்காக மண்டியிட வேண்டிய அலங்கோலமான வேலையை செய்ய வேண்டியிருக்கும். தும்பிக்கை ஒரு நாளில் 500 அல்லது அதற்கும் அதிகமான பவுண்டுகள் காய்கறிகளை உண்பதற்கும்கூட உதவி செய்கிறது. ஆகவே, இன்றியமையாத இந்த உறுப்பு மோசமாக காயமடைகையில், யானைகள் பட்டினியால் இறந்துவிடும் ஆபத்திலிருக்கின்றன.
தும்பிக்கை மற்ற அநேக வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. ஆபத்து நேரிடுகையில், பிளிறுவதற்கும், யானைக் கன்றை அன்பாகத் தடவிக் கொடுப்பதற்கும், குறும்புச் செய்கையில் குட்டியை அடிப்பதற்கும் பயன்படுகிறது. அடிக்கடி இது தன்னுடைய சொந்தக்காரரின் மேல் தண்ணீர் அல்லது சேற்றை வாரி இறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஏன் சேறு? ஒருவேளை அதன் தோலை உஷ்ணத்திலிருந்தும் பூச்சுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காக. சில சமயங்களில் யானை ஏன் தன்னுடைய தும்பிக்கையை, நீர்மூழ்கிக் கப்பலின் முகட்டு மேற்பரப்புக் காட்சிக் கருவிப் போன்று, காற்று மண்டலத்தில் தூக்குகிறது? காற்றின் திசையை உணருவதற்கும், எல்லை மீறி நுழைபவர்களை மொப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதற்குமே. ஆம், கூர்மையான தொட்டுணர்வு உறுப்பாக இருப்பதோடுகூட, எத்திசையிலும் இயங்கும் திறம்கொண்ட இந்த உறுப்பு, மூக்கின் தொடர்ச்சியாகவும்கூட இருக்கிறது. யானை அலகு என்ற தன்னுடைய புத்தகத்தில் காலஞ்சென்ற ஜிம் வில்லியம்ஸ், யானைகள் தங்கள் தும்பிக்கையை பயன்படுத்தும் பல்வேறு சுவாரசியமான வழிகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்:
“தன் தும்பிக்கையால் எட்டமுடியாத உடலின் ஒரு பாகத்தில் அரிப்பு ஏற்படுகையில், அவன் எப்போதும் அதை மரத்தின்மேல் தேய்த்துக் கொள்வதில்லை, அதற்குப் பதிலாக, அவன் நீளமான ஒரு கம்பை எடுத்து, அதை வைத்து நன்றாக அரித்துக்கொள்வான். ஒரு கம்பு போதிய அளவு நீளமாக இல்லையென்றால், அவ்விதமாக இருக்கும் மற்றொன்றை அவன் தேடுவான்.
“கொஞ்சம் புல்லை அவன் பிடுங்க, அது வேரோடும் மண்கட்டியோடும் சேர்ந்து வெளியே வந்தால், காலின் கீழ் போட்டு எல்லா மண்ணையும் உதறித் தள்ளும்வரை அதை அடிப்பான் அல்லது அருகில் தண்ணீர் இருந்தால், அதை வாயில் போட்டுக்கொள்வதற்கு முன்பாகச் சுத்தமாகக் கழவிக்கொள்வான்.”
20 ஆண்டுகளுக்கு மேலாக, வில்லியம்ஸ் என்பவர் பர்மா தேக்கு மரக் காடுகளிலிருந்து மரத்தை எடுத்துச்செல்ல பயிற்றுவிக்கப்பட்ட யானைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். ஆனால் சில சமயங்களில், நோயுற்ற யானைகளின் உணவில் மருந்தைக் கலந்து வைப்பதில் அவர் தோல்வியுற்றார். அவனுடைய தும்பிக்கையால், “கிரிக்கெட் பந்தளவிலுள்ள புளியம் பழத்தில் வைத்திருக்கும் (ஆஸ்ப்பிரின் அளவுள்ள) ஒரு மாத்திரையை பிரித்தெடுத்து, ‘நீ என்னை ஏமாற்ற முடியாது’ என்று சொல்வதுப்போலச் செய்கிறது” என்பதாக வில்லியம்ஸ் விளக்குகிறார்.
“இரண்டு கைகளை வைத்து வேலைசெய்யும் மனிதனைவிட, யானைகள், மிக அதிக திறமையாக ஒரு மரத்தில் விடாது ஒட்டிக்கொண்டு படரும் தென்னாப்பிரிக்க படர் செடி வகைப் போன்ற ஒரு கொடியைப் பிரித்தெடுத்துவிடக்கூடும். மிகக் கூர்மையான தொடு உணர்ச்சி திறமே இதற்குக் காரணமாகும்” என்பதாக அவர் தொடர்ந்து சொல்கிறார்.
ஆகவே அடுத்த முறை நீங்கள் வேட்டை விலங்கு பூங்காவிலோ அல்லது மிருக காட்சி சாலையிலோ, ஒரு யானையைப் பார்க்கையில், ஆப்பிரிக்க வனவிலங்கு பத்திரிகை கஸ்டாஸ்-ல் டாக்டர் ஜெரி டி க்ராஃப் கொடுத்துள்ள யோசனைபடி ஏன் செய்யக்கூடாது: “அதற்கு ஆச்சரியத்தோடும் மதிப்போடும் மிருகத்தைப் பார்த்து, இயற்கையின் படைப்புகளில் தலைச்சிறந்த ஒன்றாகிய—யானைத் தும்பிக்கையைப் பற்றி சிந்திக்க நீங்கள் கொஞ்ச நேரத்தை உங்களுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.” பின்னர் நீங்கள் ‘இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க, எத்திசையிலும் இயங்கும் திறன்படைத்த உறுப்புக்காக, யாருக்குப் புகழ் சேர வேண்டும்?’ என்பதாக உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அந்தக் கேள்விக்குப் பைபிள், யெகோவா தேவன் “பூமியில் ஊரும் எல்லாப் பிராணிகளையும் ஜாதி ஜாதியாக” உண்டாக்கினார் என்றும் “தேவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது” என்றும் பதிலளிக்கிறது.—ஆதியாகமம் 1:25, 31. (g88 12/22)