உறுப்பினர்களை இழப்பது பற்றி அவர்கள் ஏன் கவலையாக இருக்கிறார்கள்?
அநேக சர்ச்சுகள் உறுப்பினர்களை இழந்து கொண்டிருக்கின்றன. இத்தாலியிலுள்ள விழித்தெழு! நிருபரின் இந்த முதல் மூன்று கட்டுரைகள், வத்திகனும் அநேக கத்தோலிக்க செய்தித் தாள்களும், கருத்துரையாளர்களும் கவலைப்படுவதைக் காண்பிக்கின்றன. சர்ச் உறுப்பினர்களின் இழப்புக்கு அவர்களும் மற்றவர்களும் தரும் காரணங்கள் யாவை?
வத்திக்கன் கவலையாக உள்ளது. மதப்பிரிவுகள் அல்லது புதிய மத இயக்கங்கள்: ஆயர்களுக்குச் சவால் (Sects or New Religious Movements: Pastoral Challenge) என்ற தலைப்பில் அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏன் இத்தனை அநேக கத்தோலிக்கர்கள் சர்ச்சை விட்டு போய் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க வத்திக்கனின் நான்கு இலாக்காக்கள் 1984-ல் செய்த ஆய்வின் முடிவாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கத்தோலிக்கர்கள் சர்ச்சுகளை விட்டு விலகிப் போய்கொண்டிருப்பதற்கு வத்திக்கன் கொடுத்த அநேக காரணங்களில் பின்வருகின்றவை இடம் பெறுகின்றன: ‘எதிர்காலத்தைப் பற்றிய கவலை; சத்தியத்தின் உள்ளார்ந்த பண்பு, அதை எவ்விதமாக காண்பது என்பது; வாழ்க்கையின் அர்த்தம்; தங்களுடைய கேள்விகளுக்குப் பதில் பெற இயலாமை; காட்டிக் கொடுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட, செவி கொடுத்துக் கேட்கப்படாத உணர்வு; சர்ச்சின், விதிமுறைகளிலும் பழக்கங்களிலும் அதிருப்தி.
இயேசுவிடமாக திரளாக வந்த ஜனங்களின் நிலைமையைப் போல இது இருக்கிறது: “ஆயனில்லா ஆடுகள் போல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு சோர்வாக இருந்தார்கள்.” (மத்தேயு 9:36)a “சர்ச்சின் உண்மையான இயங்கு முறையில் அநேக குறைபாடுகளும் தவறுகளும்” இருப்பதை வத்திக்கன் அறிக்கை ஒப்புக் கொண்டு “நிரப்பப்படுவதற்குச் சத்தமிட்டுக் கொண்டிருக்கும் வெற்றிடம் ஒன்று அங்கிருப்பதை” வலியுறுத்தி காண்பித்திருக்கிறது. “சர்ச் தலைவர்களின் பங்கில் தலைமை ஏற்று நடத்தும் ஆற்றலும் பொறுமையும் தனிப்பட்ட கடமை உணர்ச்சியும் குறைவுபடுவதை”யும் கூட குறிப்பிட்டிருந்தது.
சர்ச்சுகளிலிருந்து வெளியேறுவதற்கு கூடுதலான காரணங்களை மற்ற ஏடுகள் தருகின்றன. பிரபல ஹாலந்து நாட்டு கத்தோலிக்க இறைமையியல் வல்லுநர் ஜோஹன்ஸ் பாப்டிஸ்ட் மெட்ஸ் பின்வருமாறு சொன்னார்: “நமது மேற்கத்திய மதம் முற்றிலும் மதசார்பற்றதாக இருக்கிறது. அதின் மீது மேசியானிஸத்தின் தடம் எதுவும் இல்லை. கடவுளின் ஆட்சி அதிலிருந்து மறைந்துவிட்டிருக்கிறது சாச்சினுள்ளோ இறைமையியலினுள்ளோ, நம்முடைய நாளின் சமுதாய மற்றும் அரசியல் விவகாரங்களில் அவருக்குப் பிரதானமான இடமளிக்கப்படுவதில்லை.”
ஸ்பேயினிலுள்ள இளைய சமுதாயத்தினரின் நிலைமையைக் குறித்து, சர்வ தேசீய இறைமையியல் பத்திரிகையான கான்ஸிலியம் பின்வருமாறு சொன்னது: “இளைஞர்களும் சர்ச்சும் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தூரம் விலகி முற்றிலும் வெவ்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் இரண்டு உலகங்களாக இருக்கின்றன” இதே நிலைமை, ஹாலந்திலும் பெல்ஜியத்திலும் ஜெர்மன் குடியரசிலும் ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக இந்தப் பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கிறது.
போப்பாண்டவரின் அலுவலக அறிக்கையை, செய்திக் குறிப்பு ஒன்று, “வத்திக்கனின் அபாய கூக்குரல்” என்று குறிப்பிடுகிறது. அறிக்கை, “திருச்சபை குழுவின் அணுகு முறையை மறு ஆய்வு செய்வது அவசியம் என்றும், ‘சமுதாயத்துடன் தாராளமாக பழகி சாட்சி கொடுப்பது’ அவசியம் என்றும் பரிந்துரை செய்கிறது. மதப் பிரிவுகள் “ஜனங்களைச் சந்திப்பதற்காக, விசேஷ முயற்சி எடுத்து, அவர்களிருக்கும் இடங்களுக்குச் சென்று, உற்சாகத்தோடு தனிப்பட்ட விதமாகவும் நேரடியாகவும் அவர்களைச் சந்தித்து, பெயர் அறியப்படாத நிலையிலிருக்கும் அந்தத் தனி நபரை வெளியே கொணர்ந்து, ஈடுபாட்டையும், சுய விருப்பத்தையும் கடமையுணர்ச்சியையும் பொறுப்புணர்ச்சியையும் வளர்க்கிறார்கள்.’
இன்று சர்ச் அங்கத்தினர்கள் மத்தியில் மிகப் பரவலாக காணப்படும் மத சம்பந்தமான அறியாமையை எதிர்த்துப் போரட “விசுவாசத்தில் தொடர்ந்து கல்வி புகட்டப்பட” வேண்டும் என்று அது கேட்டுக் கொண்டது. சமுதாயத்தைக் கட்டி அமைப்பதில் ஒரு முக்கிய அம்சமாக கடவுளுடைய வார்த்தை மீண்டும் ஆராயப்பட” வேண்டும். பிரசங்க வேலையில் “பைபிளுக்கு முக்கியத்துவம்” கொடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
சுய பரிசோதனையை முடித்து, அறிக்கை பின்வரும் ஓர் அச்சுறுத்தலான குறிப்பை சேர்க்கிறது: “அரசு அதன் பங்கில் தன் சொந்த செல்வாக்கில் தீவிரமாக தலையிடுவது சில சமயங்களில் அவசியம் என்பதை நாம் ஒப்புக் கொண்டு அதை ஒருவேளை ஆதரிக்கவும் கூட வேண்டியிருக்கிறது.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) இந்தப் போரட்டத்தில் அரசின் உதவியைக் கோரிய அறிக்கையின் “அழைப்பை” செய்தித் துறை கவனியாமல் இல்லை. கத்தோலிக்கர்கள் அல்லாத மதங்களின் விஷயத்திலும், குறிப்பாக “மதப் பிரிவுகள் என்றழைக்கப்படுகின்றவற்றின் விஷயத்திலும் ‘அரசாங்க ஆயுதத்தின்’ நிழல் மீண்டும் தோன்றுகிறதா?” என்று 1986 ஜூன் 4 தேதியிட்ட லா ஸ்டம்பாவில் மார்க்கோ டாஸட்டி கேட்டார்.
அரசை பயன்படுத்திக் கொள்ளும் இந்தச் சாத்தியம், வணக்கத்தின் சுயாதீனத்தை ஒடுக்க, இருண்ட காலத்திலும் வரலாற்றின் இடைநிலை காலத்திலும் பயன்படுத்தப்பட்ட முறைகளுக்கு வத்திக்கன் திரும்ப விரும்புவதைச் சுட்டிக் காண்பிக்கிறதா? இயேசு தம்முடைய போதகங்களை எதிர்த்தவர்களைச் சரிக்கட்ட எப்போதாவது அரசியல் அதிகாரிகளின் உதவியை நாடினாரா? பேதுரு அவ்விதமாகச் செய்தானா? அப்போஸ்தலர்கள் அவ்விதமாகச் செய்தார்களா? இயேசுவை கழுமரத்தில் அறையும்படியாக பிலாத்துவிடம் மன்றாடியது பரிசேயர்கள் அல்லவா? அரசாங்க உதவியைக் கேட்பது ஆவிக்குரிய பலத்துக்கு நிரூபணமாக இருக்கிறதா? அல்லது பெலவீனத்தை ஒப்புக் கொள்வதாக இருக்கிறதா?
சர்ச்சை விட்டு வெளியேறும் எல்லா கத்தோலிக்கர்களும் வேறொரு மதத்தில் சேர்ந்து விடுவதில்லை. ஆனால் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மத அமைப்பை நோக்கி திரண்டும் வருகிறார்கள். அந்தத் தொகுதி எது? தங்களுடைய சர்ச்சுகளை விட்டு வெளியேறும் இத்தனை அநேகர் இதைத் தெரிந்து கொள்வதற்குக் காரணம் என்ன? (g87 3/22)
[அடிக்குறிப்புகள்]
a கத்தோலிக்க பைபிளான எருசலேம் பைபிளிலிருந்து மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையிலும் இதைத் தொடர்ந்து வரும் இரண்டு கட்டுரைகளிலும் மேற்கோள் காண்பிக்கப்பட்டிருக்கும் அனைத்து வேத வசனங்களும் மற்றபடியாக குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய அவை இந்தக் கத்தோலிக்க பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவையே.