கருச்சிதைவு—யாருடைய உரிமைகள் உட்பட்டிருக்கின்றன?
நோவா ஸ்காஷியாவிலுள்ள ஹாலிபேக்ஸின் மருத்துவர்கள் P.M.A. நிக்கோல்ஸும் கார்லோஸ் டெல் கம்போவும், கருச்சிதைவில் யாருடைய உரிமைகள் உட்பட்டிருக்கின்றன என்ற விஷயத்தில் பேரில், கனேடியன் மருத்துவ சங்க பத்திரிகை-க்கு உண்மைகளை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றை எழுதினார்கள். கருச்சிதைவை செய்துகொள்வதா என்பது பற்றிய தீர்மானம் முக்கியமாக பெண்ணின் பேரில் சார்ந்திருப்பதாகவும், தன்னுடைய சொந்த ‘உடலுக்கு’ நடக்க இருப்பதை தீர்மானிக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்பதாக கருச்சிதைவை நாடும் அநேக பெண்களும் பெரும்பாலான கருச்சிதைவு தொகுதிகளும் நம்புவதாகவும், இந்தக் காரணத்தால் கருச்சிதைவு அனுமதிக்கப்படலாம் என்பதாகவும் மற்றவர்கள் சொல்லியிருப்பதை இவர்கள் முதலில் குறிப்பிட்டிருந்தார்கள். என்றபோதிலும், கீழே காணப்படும் இந்த மருத்துவர்களின் கருத்துக்கள் ஒரு நபரைச் சற்று நின்று யோசிக்கும்படியாகச் செய்கின்றன.
“இந்த விஷயத்தை எல்லா மருத்துவர்களும் அறிந்திருந்த போதிலும் பின்வருவதை பொதுவாக எவரும் யோசிப்பதே இல்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விந்தும் முட்டையும் இணைவதைத் தொடர்ந்து ஒரு உயிரணு இரண்டு உயிரணுக்களாக பிரிகிறது. இந்தச் சமயம் முதற்கொண்டு முதிர்கருவானது தாயினிடமிருந்து மரபில் மாறுபட்ட பண்புகளையுடைய ஒரு உள்பொருளாக வாழ்கிறது; அதாவது அது ஈடிணையற்ற, ஒழுங்காக அமைக்கப்பட்ட குரோமஸோம் தகவல்களை உடையதாக இருக்கிறது. நச்சுக்கொடி அடைப்பு மாத்திரம் இல்லாதிருந்தால், உடல் கண்டிப்பாக அதை ஏற்க மறுத்து விடும் என்ற உண்மையில் இதற்கு பொய்யென நிரூபிக்க முடியாத அத்தாட்சி இருக்கிறது.
“அப்படியென்றால், குடல்முளையை, பித்தப்பையை அல்லது வேறு ஒரு உறுப்பை நீக்குவதை கருதுவது போல, கருச்சிதைவை நாம் எப்படிக் கருதுகிறோம்? (நிச்சயமாகவே, கருச்சிதைவினால் ஏற்படும் மனோ தத்துவ விளைவுகளை நாம் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.) ஆரோக்கியமான ஒரு பித்தப்பையை நீக்கிவிடும் படியாக ஒரு அறுவை மருத்துவரை ஒப்புக்கொள்ளச் செய்வதைவிட, உயிர் வாழக்கூடிய ஒரு முதிர் கருவை நீக்கிவிடும்படி ஒரு மகப்பேறு மருத்துவ வல்லுநரிடம் சொல்வது வெகு சுலபமாக இருப்பது விசித்திரமாக உள்ளது. என்றபோதிலும் ஒரு முதிர் கருவை போலில்லாமல், இந்த உறுப்பு, சந்தேகமின்றி நோயாளியின் ஒரு பாகமாக இருக்கிறது. பொதுவாக நிலவி வரும் ‘என்னுடைய உடல்’ என்ற அந்த மனநிலையை நாம் ஏற்றுக் கொண்டு, முதிர்கருவின் உயிரை அழிப்பதற்குரிய தீர்மானம் அந்தப் பெண்ணையும் அவளுடைய மருத்துவரையும் சார்ந்திருக்கிறது என்பதாக நாம் ஒப்புக்கொள்ள முடியுமா? மறுபடியுமாக, இதைத் தர்க்க ரீதியாக ஆரோய்வோமேயானால், பிரச்னை ஒரு பெண்ணின் உடல் இல்லை. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி தனித்தியங்கும் மரபு நியதிகளையுடைய பிரிந்திருக்கும் ஒரு உயிராக இருக்கிறது.
முடிவில், இந்த மருத்துவர்கள் பின்வருமாறு எச்சரித்தனர்: “இந்தப் பிரச்னையை எதிர்படுகையில், வசதிக்காக அல்லது ‘இரக்க உணர்ச்சியை’ முன்னிட்டு எது உண்மை என்று நமக்குத் தெரிந்திருக்கிறதோ அதை அசட்டை செய்வது எளிதாக இருக்கிறது. என்றபோதிலும் அதிகரித்துவரும் கட்டுப்பாடற்ற சமுதாயத்தின் கருத்துக்களை அல்லது நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு விடுவதை அல்லது அவைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை தவிர்ப்பது ஒவ்வொரு மருத்துவரின் கடமையாகவும் இருக்கிறது.” (g86 11/8)