நாகூம்
1 நினிவே நகரத்துக்கு எதிரான தீர்ப்பைப்+ பற்றி எல்கோசைச் சேர்ந்த நாகூம்* பார்த்த தரிசனத்தின் புத்தகம்:
2 யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் கடவுள்;+ தப்பு செய்கிறவர்களைப் பழிவாங்கும் கடவுள்.
யெகோவா பழிவாங்குகிறவர், கோபத்தில் கொதித்தெழுகிறவர்.+
யெகோவா தன்னுடைய பகைவர்களைப் பழிதீர்க்கிறவர்.
எதிரிகள்மேல் கொட்டுவதற்காகக் கோபத்தைச் சேர்த்து வைக்கிறவர்.
3 யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மகா வல்லமை உள்ளவர்.+
கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுக்கத் தவறாதவர்.+
யெகோவா வரும்போது அழிவு உண்டாக்குகிற சுழல்காற்றும் புயல்காற்றும் வீசும்.
மேகங்கள் அவருடைய காலடி தூசிபோல் ஆகும்.+
பாசானும் கர்மேலும் காய்ந்துபோகின்றன.+
லீபனோனின் பூக்கள் வாடிப்போகின்றன.
அவருக்கு முன்னால் பூமி குலுங்கும்.
அவர் உலகத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் உலுக்குவார்.+
6 அவருடைய கடும் கோபத்துக்கு முன்னால் யாரால் நிற்க முடியும்?+
அவர் பயங்கர கோபத்தைக் காட்டும்போது யாரால் தாங்க முடியும்?+
அவர் கோபத்தை நெருப்பாகக் கொட்டுவார்.
அப்போது, பாறைகள் நொறுங்கித் தூள்தூளாகும்.
7 யெகோவா நல்லவர்.+ இக்கட்டு நாளில் அவர் கோட்டையைப் போல இருக்கிறார்.+
அவரிடம் அடைக்கலம் தேடி வருகிறவர்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்.+
8 ஆனால், நினிவே நகரத்தைப் பெரிய வெள்ளத்தால் அடியோடு அழித்துவிடுவார்.
அவருடைய எதிரிகளை இருள் துரத்தும்.
9 யெகோவாவுக்கு எதிராக நீங்கள் என்ன திட்டம் தீட்டுவீர்கள்?
அவர் ஒட்டுமொத்தமாக அழிக்கப்போகிறார்.
10 பின்னிக் கிடக்கிற முட்புதர்களைப் போல நினிவே ஜனங்கள் இருக்கிறார்கள்.
போதை ஏறுமளவுக்கு மது* குடித்தவர்களைப் போல இருக்கிறார்கள்.
ஆனால், வைக்கோலைப் போலப் பொசுங்கிவிடுவார்கள்.
11 யெகோவாவுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகிறவன் உன்னிடமிருந்து வருவான்.
ஒன்றுக்கும் உதவாத அறிவுரையைத் தருவான்.
12 யெகோவா சொல்வது இதுதான்:
“அசீரியர்களின்* படையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மகா பலசாலிகள்.
ஆனாலும் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள், ஒழிந்துபோவார்கள்.*
யூதாவே, நான் உனக்குக் கஷ்டம் கொடுத்தேன்; இனி அப்படிச் செய்ய மாட்டேன்.
13 அசீரியன்* உன் கழுத்தில் வைத்திருக்கும் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.+
உன்னைக் கட்டியிருக்கும் கயிறுகளை அறுத்தெறிவேன்.
14 அசீரியாவே, யெகோவாவின் தீர்ப்பைக் கேள்:
‘இனி உன் பெயர் நிலைக்காது.
உன் கோயில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைப்பேன்.
உனக்குக் கல்லறையை வெட்டுவேன், ஏனென்றால் நீ வெறுக்கத்தக்கவன்.’
யூதாவே, பண்டிகைகளைக் கொண்டாடு;+ உன் நேர்த்திக்கடன்களைச் செலுத்து.
வீணானவன் இனி உன் வழியில் வர மாட்டான்.
அவன் அடியோடு அழிக்கப்படுவான்.”
2 உன்னை* துரத்துகிறவன் உன்னைத் தாக்க வந்திருக்கிறான்.+
உன்னுடைய கோட்டைகளைப் பாதுகாத்துக்கொள்.
வழியெல்லாம் காவலர்களை நிறுத்து.
போருக்குத் தயாராகு, பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டு.
2 யாக்கோபை யெகோவா திரும்பவும் பெருமைப்படுத்துவார்.
இஸ்ரவேலை மறுபடியும் மகிமைப்படுத்துவார்.
சூறையாடுகிறவர்கள் அவர்களைச் சூறையாடினார்களே.+
அவர்களுடைய திராட்சைக் கொடிகளை நாசமாக்கினார்களே.
3 உன்னைத் துரத்துகிறவனுடைய* வீரர்களின் கேடயங்கள் சிவப்பாக இருக்கின்றன.
அவனுடைய மாவீரர்கள் கருஞ்சிவப்பு உடை போட்டிருக்கிறார்கள்.
அவன் போருக்குத் தயாராகும் நாளில்
அவனுடைய போர் ரதங்களின் இரும்புத் தகடுகள் நெருப்புபோல் தகதகக்கின்றன.
வீரர்கள் ஈட்டிகளைச் சுழற்றுகிறார்கள்.
4 போர் ரதங்கள் வீதிகளில் வெறித்தனமாக ஓடுகின்றன.
பொது சதுக்கங்களில் அங்குமிங்கும் பாய்ந்து போகின்றன.
அவை தீப்பந்தங்களைப் போலப் பிரகாசிக்கின்றன, மின்னலைப் போலப் பளிச்சிடுகின்றன.
5 ராஜா தன்னுடைய படை அதிகாரிகளைக் கூப்பிடுவார்.
அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு வருவார்கள்.
மதில் பக்கமாய் அவசரமாக ஓடுவார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
6 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும்.
அரண்மனையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
7 தீர்ப்பு இதுதான்: அவள்* வெறுமையாக்கப்படுவாள், வேறு தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்படுவாள்.
அவளுடைய அடிமைப் பெண்கள் புலம்புவார்கள்.
புறாவைப் போல முனகுவார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள்.
8 இத்தனை காலமாக நினிவே+ ஒரு குளத்தைப் போல் இருந்தாள்.
ஆனால் இப்போது எல்லாரும் அவளைவிட்டு ஓடிப்போகிறார்கள்.
“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற சத்தம் கேட்கிறது.
ஆனால், யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.+
9 வெள்ளியைச் சூறையாடுங்கள், தங்கத்தைக் கைப்பற்றுங்கள்!
அங்கே புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
விலை உயர்ந்த பொருள்களும் குவிந்துகிடக்கின்றன.
10 நகரம் வெறுமையாக்கப்பட்டது, பாழாக்கப்பட்டது, நாசமாக்கப்பட்டது!+
பயத்தில் ஜனங்களுடைய இதயம் படபடக்கிறது,
கால் நடுநடுங்குகிறது, இடுப்பு கிடுகிடுவென ஆடுகிறது.
எல்லாருடைய முகமும் வெளுத்துப்போகிறது.
11 சிங்கங்களின் குகை எங்கே?+ இளம் சிங்கங்கள் இரை தின்ற இடம் எங்கே?
சிங்கம் தன் குட்டிகளோடு சுற்றிவந்த இடம் எங்கே?
அவை பயமில்லாமல் திரிந்த இடம் எங்கே?
12 ஆண் சிங்கம் இரையைக் கடித்துக் குதறி தன் குட்டிகளுக்குப் போட்டது.
மிருகங்களைக் கொன்று பெண் சிங்கங்களுக்குக் கொடுத்தது.
தன் குகைகளை இரையால் நிரப்பியது.
பீறிப்போட்ட மிருகங்களை அங்கே குவித்து வைத்தது.
13 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“நான் உன்னைத் தண்டிப்பேன்.+
உன்னுடைய போர் ரதங்களை எரித்துப் புகைக்காடாக்குவேன்.+
உன் இளம் சிங்கங்கள் வாளுக்குப் பலியாகும்.
நீ எங்குமே வேட்டையாட முடியாதபடி செய்துவிடுவேன்.
உன் தூதுவர்களின் சத்தம் இனி கேட்காது.”+
3 இரத்தக்கறை படிந்த நகரமே, உனக்கு ஐயோ கேடு!
நீ திருட்டிலும் பொய் புரட்டிலும் ஊறிப்போயிருக்கிறாய்!
ஓயாமல் சூறையாடுகிறாய்!
2 சவுக்கின் சத்தம் கேட்கிறது, சக்கரங்களின் ஓசை ஒலிக்கிறது.
குதிரை வேகமாக ஓடிவருகிறது, ரதம் மின்னலாகப் பாய்ந்து வருகிறது.
3 வீரர்கள் குதிரைமேல் ஏறி வருகிறார்கள்.
அவர்களுடைய வாள்கள் தகதகக்கின்றன, ஈட்டிகள் பளபளக்கின்றன.
ஏராளமானவர்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறார்கள்.
அவர்களுடைய உடல்கள் குவியல் குவியலாகக் கிடக்கின்றன.
திரும்பிய பக்கமெல்லாம் கணக்குவழக்கில்லாத சடலங்கள்.
அவற்றின் மேல் வீரர்கள் தடுக்கி விழுகிறார்கள்.
4 எல்லாவற்றுக்கும் அந்த விலைமகளின் விபச்சாரம்தான் காரணம்.
அவள் கவர்ச்சியும் வசீகரமும் உள்ள சூனியக்காரி.
பல தேசத்தாரை விபச்சார வலையில் சிக்க வைக்கிறாள்.
பல இனத்தாரை சூனியங்களால் வசியப்படுத்துகிறாள்.
5 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
உன்னுடைய ஆபாசத்தை எல்லாருக்கும் காட்டுவேன்.
மற்ற தேசத்தார் உன்னுடைய நிர்வாணக் கோலத்தையும்,
மற்ற ராஜ்யங்கள் உன்னுடைய கேவலமான நிலைமையையும் பார்க்கும்படி செய்வேன்.
6 குப்பையைத் தூக்கி உன்மேல் வீசுவேன்.
எல்லாரும் உன்னை வெறுக்கும்படி செய்வேன்.
உன்னை வேடிக்கைப் பொருளாக்குவேன்.+
7 உன்னைப் பார்க்கிற எல்லாரும்,
‘நினிவே அழிந்துவிட்டது!
அவளுக்காகப் பரிதாபப்பட ஒருவரும் இல்லை’ என்று சொல்லி ஓடிப்போவார்கள்.+
உனக்கு ஆறுதல் சொல்ல நான் எங்கே போய் ஆள் தேடுவேன்?
8 நைல் நதிக்கரைகளில்+ இருந்த நோ-அம்மோனைவிட*+ நீ மேலானவளோ?
தண்ணீர் அவளைச் சூழ்ந்திருந்தது.
கடல்தான் அவளுடைய சொத்து; அதுதான் அவளுடைய கோட்டைச் சுவர்.
9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அவளுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தன.
பூத்+ ஜனங்களும் லீபியா ஜனங்களும் அவளுக்கு* உறுதுணையாக இருந்தார்கள்.+
அவளுடைய பிள்ளைகள் எல்லா தெரு முனைகளிலும் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
அவளுடைய முக்கியப் பிரமுகர்கள்மேல் குலுக்கல் போடப்பட்டது.
பெரிய ஆட்களுக்கு விலங்கு மாட்டப்பட்டது.
எதிரியிடமே பாதுகாப்பு தேடுவாய்.
12 உன்னுடைய எல்லா கோட்டைகளும், முதலில் பழுத்த பழங்கள் உள்ள அத்தி மரங்களைப் போல இருக்கின்றன.
அவற்றை உலுக்கும்போது, விழுங்குகிறவர்களின் வாயில் பழங்கள் விழுகின்றன.
13 உன்னுடைய படைவீரர்கள் பெண்களைப் போலப் பலவீனமாக இருக்கிறார்கள்.
எதிரிகள் நுழைவதற்கு வசதியாக உன்னுடைய வாசல் கதவுகள் திறந்து போடப்படும்.
அவற்றின் தாழ்ப்பாள்கள் தீயில் சுட்டெரிக்கப்படும்.
14 முற்றுகைக் காலத்துக்காகத் தண்ணீரைச் சேமித்து வை.+
கோட்டைகளைப் பலப்படுத்து.
சேற்றிலே கால்வைத்து களிமண்ணை மிதி.
செங்கற்களைச் செய்.
15 அங்கேயும் நெருப்பு உன்னைப் பொசுக்கும்.
வாள் உன்னை வெட்டி வீழ்த்தும்.+
இளம் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்குவதுபோல் அது உன்னை நாசமாக்கும்.+
இளம் வெட்டுக்கிளிகள் போல அதிகமாகப் பெருகு!
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப் போல ஏராளமாகப் பெருகு!
16 உன் வியாபாரிகள் வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக இருக்கிறார்கள்.
இளம் வெட்டுக்கிளி தன் தோலை உரித்துவிட்டுப் பறந்துபோகும்.
17 உன் காவலர்கள் அந்த வெட்டுக்கிளி போல இருக்கிறார்கள்.
உன் அதிகாரிகள் வெட்டுக்கிளிப் பட்டாளத்தைப் போல இருக்கிறார்கள்.
குளிர்ச்சியான நாளில் அவை கற்சுவர்களின் இடுக்குகளில் பதுங்கிக்கொள்ளும்.
ஆனால், வெயில் அடிக்கும்போது பறந்துபோகும்.
அவை போகும் இடம் யாருக்கும் தெரியாது.
18 அசீரிய ராஜாவே, உன் மேய்ப்பர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
உன்னுடைய பிரமுகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்.
உன் ஜனங்கள் மலைகளில் சிதறிப்போயிருக்கிறார்கள்.
அவர்களைக் கூட்டிச்சேர்க்க ஆளே இல்லை.+
19 பேரழிவிலிருந்து நீ மீண்டுவரவே மாட்டாய்.
உன் காயம் ஆறவே ஆறாது.
உன் கதியைக் கேள்விப்படுகிற எல்லாரும் கைகொட்டிச் சிரிப்பார்கள்.+
ஏனென்றால், உன்னுடைய கொடூரமான பிடியில் சிக்காதவர்கள் யாருமே இல்லை.”+
அர்த்தம், “ஆறுதல் தருபவர்.”
வே.வா., “இக்கட்டு; வேதனை.”
அதாவது, “கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர்.”
நே.மொ., “அவர்களின்.”
அல்லது, “அதன்பின் அவர் கடந்துபோவார்.”
நே.மொ., “அவன்.”
அதாவது, “நினிவே ஜனங்களை.”
அல்லது, “கடவுளுடைய.”
அதாவது, “நினிவே.”
அதாவது, “நினிவே நகரத்தை.”
அதாவது, “தீப்ஸ் நகரத்தைவிட.”
நே.மொ., “உனக்கு.”