எஸ்றா
1 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார். யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில்,
2 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ 3 அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ அவர்களெல்லாம் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும். அவர்களுடைய கடவுள் அவர்களோடு இருப்பாராக. அவர்தான் உண்மைக் கடவுள்; அவருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது.* 4 அவருடைய ஜனங்கள் எங்கு தங்கியிருந்தாலும் சரி,+ அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் அவர்களுக்கு வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் ஆடுமாடுகளையும் கொடுத்து உதவ வேண்டும். அதோடு, உண்மைக் கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் காணிக்கைகளைக் கொடுத்தனுப்ப வேண்டும்’”+ என்று எழுதப்பட்டிருந்தது.
5 அப்போது, யூதா கோத்திரத்தையும் பென்யமீன் கோத்திரத்தையும் சேர்ந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், குருமார்கள், லேவியர்கள் என யாருடைய மனதை உண்மைக் கடவுள் தூண்டினாரோ அவர்கள் எல்லாரும் எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகப் புறப்பட்டார்கள். 6 அக்கம்பக்கத்தில் இருந்த எல்லாரும் அவர்களிடம் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அதோடு, வெள்ளிப் பாத்திரங்களையும், தங்கப் பாத்திரங்களையும், விலைமதிப்புள்ள பொருள்களையும், மற்ற சாமான்களையும், ஆடுமாடுகளையும் கொடுத்து உதவினார்கள்.*
7 முன்பு ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் எருசலேமில் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பாத்திரங்களை எடுத்துவந்து அவனுடைய தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்தான்.+ அவற்றையும் திருப்பிக் கொடுக்க கோரேஸ் ராஜா உத்தரவு போட்டார். 8 அவற்றைக் கோயிலிலிருந்து எடுத்து யூதா கோத்திரத் தலைவரான சேஸ்பாத்சாரிடம்*+ எண்ணிக் கொடுக்கும்படி பொக்கிஷ அறை அதிகாரியான மித்திரேதாத்துக்குக் கட்டளை தந்தார்.
9 எண்ணிக் கொடுக்கப்பட்டவை இவைதான்: தங்கக் கூடைகள் 30, வெள்ளிக் கூடைகள் 1,000, மாற்றுப் பாத்திரங்கள் 29, 10 சிறிய தங்கக் கிண்ணங்கள் 30, சிறிய வெள்ளிக் கிண்ணங்கள் 410, வேறு பாத்திரங்கள் 1,000. 11 தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மொத்தம் 5,400. பாபிலோனிலிருந்து விடுதலையான ஆட்களோடு+ சேர்ந்து எருசலேமுக்குப் போனபோது சேஸ்பாத்சார் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்.
2 மாகாணத்தை* சேர்ந்த அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனுக்குப்+ பிடித்துக்கொண்டு போயிருந்தான்.+ அவர்கள் அங்கிருந்து எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்து அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+ 2 அவர்கள் எல்லாரும் செருபாபேல்,+ யெசுவா,+ நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரெகூம், பாணா ஆகியவர்களோடு திரும்பி வந்திருந்தார்கள்.
திரும்பி வந்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை இதுதான்:+ 3 பாரோஷின் வம்சத்தார் 2,172; 4 செப்பத்தியாவின் வம்சத்தார் 372; 5 ஆராகின் வம்சத்தார்+ 775; 6 பாகாத்-மோவாபின் பரம்பரையில்+ வந்த யெசுவா மற்றும் யோவாபின் வம்சத்தார் 2,812; 7 ஏலாமின் வம்சத்தார்+ 1,254; 8 சத்தூவின் வம்சத்தார்+ 945; 9 சக்காயின் வம்சத்தார் 760; 10 பானியின் வம்சத்தார் 642; 11 பெபாயின் வம்சத்தார் 623; 12 அஸ்காத்தின் வம்சத்தார் 1,222; 13 அதோனிகாமின் வம்சத்தார் 666; 14 பிக்வாயின் வம்சத்தார் 2,056; 15 ஆதினின் வம்சத்தார் 454; 16 அதேரின் வழிவந்த எசேக்கியாவின் வம்சத்தார் 98; 17 பேசாயின் வம்சத்தார் 323; 18 யோராவின் வம்சத்தார் 112; 19 ஆசூமின் வம்சத்தார்+ 223; 20 கிபாரின் வம்சத்தார் 95; 21 பெத்லகேம் ஊர் ஆண்கள் 123; 22 நெத்தோபா ஊர் ஆண்கள் 56; 23 ஆனதோத்+ ஊர் ஆண்கள் 128; 24 அஸ்மாவேத் ஊர் ஆண்கள் 42; 25 கீரியாத்-யெயாரீம், கெப்பிரா, பேரோத் ஊர்களின் ஆண்கள் 743; 26 ராமா,+ கெபா+ ஊர்களின் ஆண்கள் 621; 27 மிக்மாஸ் ஊர் ஆண்கள் 122; 28 பெத்தேல், ஆயி+ ஊர்களின் ஆண்கள் 223; 29 நேபோ ஊர் ஆண்கள்+ 52; 30 மக்பீஷ் ஊர் ஆண்கள் 156; 31 மற்றொரு ஏலாமின் வம்சத்தார் 1,254; 32 ஆரீமின் வம்சத்தார் 320; 33 லோது, ஆதீத், ஓனோ ஊர்களின் ஆண்கள் 725; 34 எரிகோ ஊர் ஆண்கள் 345; 35 சேனாகா ஊர் ஆண்கள் 3,630.
36 குருமார்கள்:+ யெதாயாவின்+ வம்சத்தாராகிய யெசுவாவின்+ குடும்பத்தார் 973; 37 இம்மேரின் வம்சத்தார்+ 1,052; 38 பஸ்கூரின் வம்சத்தார்+ 1,247; 39 ஆரீமின் வம்சத்தார்+ 1,017.
40 லேவியர்கள்:+ ஒதாவியாவின் வழிவந்த யெசுவா மற்றும் கத்மியேலின்+ வம்சத்தார் 74. 41 பாடகர்கள்:+ ஆசாபின்+ வம்சத்தார் 128. 42 வாயிற்காவலர்கள்:+ சல்லூமின் வம்சத்தார், அதேரின் வம்சத்தார், தல்மோனின்+ வம்சத்தார், அக்கூபின்+ வம்சத்தார், அதிதாவின் வம்சத்தார், ஷோபாயின் வம்சத்தார் என மொத்தம் 139 பேர்.
43 ஆலயப் பணியாளர்கள்:*+ சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், 44 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், 45 லெபானாவின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார், 46 ஹாகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார், 47 கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாவின் வம்சத்தார், 48 ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார், 49 ஊத்சாவின் வம்சத்தார், பசெயாவின் வம்சத்தார், பெசாயின் வம்சத்தார், 50 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார், 51 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், 52 பஸ்லூத்தின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், 53 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், 54 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தார்.
55 சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தார்: சோதாயின் வம்சத்தார், சொபெரேத்தின் வம்சத்தார், பெருதாவின் வம்சத்தார்,+ 56 யாலாஹின் வம்சத்தார், தர்கோனின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், 57 செப்பத்தியாவின் வம்சத்தார், அத்தீலின் வம்சத்தார், பொகெரேத்-செபாயிமின் வம்சத்தார், ஆமியின் வம்சத்தார்.
58 ஆலயப் பணியாளர்களும்* சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும் மொத்தம் 392 பேர்.
59 தெல்-மெலா, தெல்-அர்சா, கேருப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து சிலர் வந்தார்கள். ஆனால், தந்தைவழிக் குடும்பத்தையும் பூர்வீகத்தையும் பற்றிய அத்தாட்சிகள் அவர்களிடம் இல்லை. அதனால், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.+ அவர்களுடைய விவரம்: 60 தெலாயாவின் வம்சத்தார், தொபியாவின் வம்சத்தார் மற்றும் நெகோதாவின் வம்சத்தார் 652 பேர். 61 குருமார்களின் வம்சத்தார்: அபாயாவின் வம்சத்தார், அக்கோசின் வம்சத்தார்,+ பர்சிலாவின் வம்சத்தார்; இந்த பர்சிலா, கீலேயாத்தியனான பர்சிலாவின்+ மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்ததால் அவளுடைய குடும்பப் பெயரால் அழைக்கப்பட்டார். 62 இவர்கள் எல்லாரும் தங்களுடைய வம்சாவளியை உறுதிசெய்ய பதிவேடுகளைத் தேடினார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் குருமார்களாகச் சேவை செய்யும் தகுதியை இழந்தார்கள்.+ 63 குருவானவர் வந்து ஊரீமையும் தும்மீமையும் வைத்து கடவுளை விசாரிக்கும்வரை+ மகா பரிசுத்தமான உணவுப் பொருள்கள்+ எதையும் இவர்கள் சாப்பிடக் கூடாதென்று ஆளுநர்* சொல்லிவிட்டார்.
64 சபையார் மொத்தம் 42,360 பேர்.+ 65 அவர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் 7,337 பேர்; பாடகர் பாடகிகள் 200 பேர். 66 குதிரைகள் 736, கோவேறு கழுதைகள்* 245, 67 ஒட்டகங்கள் 435, கழுதைகள் 6,720.
68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள். 69 அவரவருடைய வசதிப்படி, கட்டுமான வேலைக்காக 61,000 தங்கக் காசுகளையும்,* 5,000 வெள்ளிக் காசுகளையும்,*+ குருமார்களுக்கான 100 உடைகளையும் கொடுத்தார்கள். 70 குருமார்களும், லேவியர்களும், பொது ஜனங்களில் சிலரும், பாடகர்களும், வாயிற்காவலர்களும், ஆலயப் பணியாளர்களும்* மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+
3 அவரவர் நகரங்களில் குடியேறியிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும், ஏழாம் மாதம்+ வந்தபோது ஒருமனதாக எருசலேமில் கூடினார்கள். 2 யோசதாக்கின் மகன் யெசுவாவும்,+ அவருடன் குருமார்களாக இருந்தவர்களும், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ அவருடைய சகோதரர்களும் இஸ்ரவேலின் கடவுளுக்குப் பலிபீடம் கட்டினார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள தகன பலிகளைச் செலுத்துவதற்காக அதைக் கட்டினார்கள்.+
3 சுற்றியிருந்த மற்ற தேசத்தாரை நினைத்து அவர்கள் பயந்தாலும்,+ பலிபீடத்தை முன்பிருந்த இடத்திலேயே அமைத்து, காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய தகன பலிகளைச்+ செலுத்த ஆரம்பித்தார்கள். 4 பின்பு, திருச்சட்டத்தில் எழுதியிருந்தபடியே கூடாரப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.+ தினசரி கணக்கின்படி+ ஒவ்வொரு நாளும் தகன பலிகளைச் செலுத்தினார்கள். 5 அதன்பின், தினமும் செலுத்துகிற* தகன பலியையும்,+ மாதப்பிறப்புக்கான* பலிகளையும்,+ யெகோவாவின் புனித பண்டிகைகளுக்கான+ பலிகளையும், யெகோவாவுக்காக ஜனங்கள் விருப்பப்பட்டுக் கொண்டுவந்த காணிக்கைகளையும்+ செலுத்தினார்கள். 6 இப்படி, ஏழாம் மாதம், முதல் நாளிலிருந்தே+ யெகோவாவுக்குத் தகன பலிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், யெகோவாவின் ஆலயத்துக்கு அதுவரை அஸ்திவாரம் போடப்படவில்லை.
7 கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களுக்கும்+ கைத்தொழிலாளிகளுக்கும்+ அவர்கள் பணம் கொடுத்தார்கள். அதோடு, சீதோனையும் தீருவையும் சேர்ந்த ஜனங்களுக்கு உணவையும் பானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் பெர்சிய ராஜா கோரேசின் உத்தரவுப்படி+ தேவதாரு மரங்களை லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கடல் வழியாகக் கொண்டுவந்திருந்தார்கள்.+
8 சலாத்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும், அவர்களுடைய மற்ற சகோதரர்களான குருமார்களும், லேவியர்களும், மற்றவர்களும் எருசலேமுக்குத் திரும்பி வந்த பின்பு,+ இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்தில் உண்மைக் கடவுளான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள். அதை மேற்பார்வை செய்ய 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள லேவியர்களை அவர்கள் நியமித்தார்கள். 9 அதனால், யூதா என்பவரின் வம்சத்தைச் சேர்ந்த யெசுவாவும் அவருடைய மகன்களும் சகோதரர்களும், கத்மியேலும் அவருடைய மகன்களும் உண்மைக் கடவுளின் ஆலய வேலையை மேற்பார்வை செய்தார்கள். அவர்களோடு சேர்ந்து லேவியர்களான எனாதாத்தின் வம்சத்தாரும்+ அவர்களுடைய மகன்களும் சகோதரர்களும் அந்த வேலையை மேற்பார்வை செய்தார்கள்.
10 யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டபோது,+ குருமார்கள் தங்களுக்குரிய உடையில் எக்காளங்களோடும்,+ லேவியர்களான ஆசாபின் வம்சத்தார் ஜால்ராக்களோடும் எழுந்து நின்று யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; இஸ்ரவேல் ராஜா தாவீது கட்டளை கொடுத்திருந்தபடியே+ அப்படிச் செய்தார்கள். 11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள். 12 முன்பிருந்த ஆலயத்தைக்+ கண்ணால் பார்த்திருந்த பெரியோர்களான குருமார்கள், லேவியர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் பலர் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதைப் பார்த்தபோது சத்தமாக அழுதார்கள்; மற்றவர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள்.+ 13 ரொம்பத் தூரம் கேட்கும் அளவுக்கு ஜனங்கள் சத்தமிட்டதால், ஆனந்தக் குரலுக்கும் அழுகைக் குரலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.
4 சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதா, பென்யமீன் ஜனங்கள் திரும்பி வந்து+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு ஆலயம் கட்டிக்கொண்டிருந்ததை எதிரிகள்+ கேள்விப்பட்டார்கள். 2 உடனே அவர்கள் செருபாபேலிடமும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் போய், “உங்களோடு சேர்ந்து நாங்களும் ஆலயத்தைக் கட்ட விரும்புகிறோம். உங்களுடைய கடவுளைத்தான் நாங்களும் வணங்குகிறோம்.+ எங்களை இங்கு கொண்டுவந்த+ அசீரிய ராஜா எசரத்தோனின்+ காலத்திலிருந்தே உங்கள் கடவுளுக்குப் பலி செலுத்திவருகிறோம்” என்றார்கள். 3 அதற்கு செருபாபேலும் யெசுவாவும் இஸ்ரவேலின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும், “எங்களோடு சேர்ந்து எங்கள் கடவுளுக்கு ஆலயத்தைக் கட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ பெர்சிய ராஜா கோரேஸ் எங்களுக்கு ஆணை கொடுத்தபடி,+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு நாங்கள் மட்டும்தான் ஆலயம் கட்டுவோம்” என்று சொன்னார்கள்.
4 அதனால் சுற்றியிருந்த தேசத்தார், யூதா ஜனங்களைச் சோர்ந்துபோக வைத்து கட்டுமான வேலையை நிறுத்துவதற்காக முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள்.+ 5 யூதர்களுடைய திட்டங்களை முறியடிப்பதற்காக+ ஆலோசகர்களுக்குக் கூலி கொடுத்தார்கள். பெர்சிய ராஜாக்களான கோரேசின் ஆட்சிக்காலம் முதல் தரியுவின் ஆட்சிக்காலம் வரைக்கும்+ இப்படித்தான் செய்துவந்தார்கள். 6 அகாஸ்வேரு ராஜா ஆட்சிசெய்ய ஆரம்பித்த சமயத்தில், அவர்கள் யூதா ஜனங்களையும் எருசலேம் ஜனங்களையும் குற்றம்சாட்டி ஒரு கடிதம் எழுதினார்கள். 7 பின்பு பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில், பிஸ்லாமும் மித்திரேதாத்தும் தபேயாலும் அவனோடு சேர்ந்தவர்களும் அர்தசஷ்டாவுக்குக் கடிதம் எழுதினார்கள். அதை அரமேயிக் பாஷையில் மொழிபெயர்த்து,+ அரமேயிக் எழுத்துக்களில் எழுதினார்கள்.*
8 * தலைமை அரசதிகாரி ரெகூமும் எழுத்தர் சிம்சாயும் எருசலேம் ஜனங்களைக் குற்றம்சாட்டி அர்தசஷ்டா ராஜாவுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், 9 “(தலைமை அரசதிகாரி ரெகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களோடு சேர்ந்த நீதிபதிகள், துணை ஆளுநர்கள், செயலாளர்கள், ஏரேக்+ நகரவாசிகள், பாபிலோனியர்கள், ஏலாமியர்களான+ சூசா+ நகரவாசிகள்,* 10 மாண்பும் மதிப்பும் உள்ள அஸ்னாப்பார் ராஜா சமாரியாவின் நகரங்களிலும் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்திலும் குடிவைத்த மற்ற ஜனங்கள்+ ஆகிய எல்லாரும் 11 எழுதி அனுப்பும் கடிதம்.)
ஆற்றுக்கு அப்பால் வாழ்கிற ஊழியர்கள் அர்தசஷ்டா ராஜாவுக்கு எழுதுவதாவது: 12 ராஜாவே, யூதர்கள் உங்களிடமிருந்து எருசலேமுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அந்த நகரம் கலகக்காரர்களின் நகரம், அக்கிரமக்காரர்களின் நகரம். அப்படிப்பட்ட நகரத்தை அவர்கள் திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் மதில்களைக் கட்டி முடிக்கப்போகிறார்கள்,+ அஸ்திவாரங்களைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 13 ராஜாவே, அவர்கள் அந்த நகரத்தையும் அதன் மதில்களையும் திரும்பக் கட்டிவிட்டால் எந்த வரியையும்*+ செலுத்த மாட்டார்கள். அதனால் ராஜாக்களின் கஜானாவுக்கு வருமானம் குறைந்துவிடும். 14 நாங்கள் அரண்மனை உப்பைச் சாப்பிடுவதால்,* ராஜாவுக்குப் பாதிப்பு ஏற்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால்தான் ராஜாவுக்கு இந்தக் கடிதத்தை அனுப்புகிறோம். 15 உங்களுடைய முன்னோர்களின் வரலாற்றுப் பதிவுகளைத்+ தயவுசெய்து அலசி ஆராயும்படி கேட்டுக்கொள்கிறோம். அப்போது நீங்களே உண்மையைத் தெரிந்துகொள்வீர்கள். அந்த நகரம் கலகக்காரர்களின் நகரம், ராஜாக்களுக்கும் மாகாணங்களுக்கும் கேடு உண்டாக்குகிற நகரம், பூர்வ காலத்திலிருந்தே தேசத் துரோகம் செய்துவருகிற நகரம். அதனால்தான் அது அழிக்கப்பட்டது.+ 16 ராஜாவே, அந்த நகரமும் அதன் மதில்களும் கட்டி முடிக்கப்பட்டால், ஆற்றுக்கு+ அப்பாலுள்ள பிரதேசம் உங்கள் கைவிட்டுப் போய்விடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று எழுதி அனுப்பினார்கள்.
17 சமாரியாவிலும் ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்திலும் வாழ்ந்துவந்த தலைமை அரசதிகாரி ரெகூமுக்கும் எழுத்தர் சிம்சாயுக்கும் அவர்களோடு சேர்ந்தவர்களுக்கும் ராஜா இப்படிப் பதில் அனுப்பினார்:
“வாழ்த்துக்கள்! 18 நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்குத் தெளிவாக வாசித்துக் காட்டப்பட்டது.* 19 என் ஆணைப்படி பதிவுகள் அலசி ஆராயப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே எருசலேமில் கலகங்களும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவந்திருப்பதைத் தெரிந்துகொண்டேன்.+ 20 அந்த நகரத்தில் பெரிய பெரிய ராஜாக்கள் இருந்திருக்கிறார்கள், ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசம் முழுவதையும் ஆட்சி செய்திருக்கிறார்கள், எல்லா விதமான வரிகளையும்* வசூலித்திருக்கிறார்கள். 21 அதனால், கட்டுமான வேலையை நிறுத்தும்படி அவர்களுக்கு இப்போதே ஆணை கொடுங்கள். நான் உத்தரவு கொடுக்கும்வரை அவர்கள் அந்த நகரத்தைத் திரும்பக் கட்டக் கூடாது. 22 கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்! உடனடியாகப் போய் வேலையை நிறுத்துங்கள்! இனி ராஜாவுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது.”+
23 அர்தசஷ்டா ராஜா அனுப்பிய கடிதம், ரெகூமுக்கும் எழுத்தர் சிம்சாயுக்கும் அவர்களோடு சேர்ந்தவர்களுக்கும் வாசித்துக் காட்டப்பட்டவுடன், அவர்கள் அவசர அவசரமாக எருசலேமுக்குப் போய், கட்டுமான வேலையைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினார்கள். 24 இப்படி, எருசலேமிலிருந்த ஆலயத்தின் கட்டுமான வேலை தடைபட்டது. பெர்சிய ராஜா தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம்வரை அது நிறுத்தி வைக்கப்பட்டது.+
5 பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள். 2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+ 3 அந்தச் சமயத்தில், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவர்களோடு சேர்ந்தவர்களும் வந்து, “இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?” என்று கேட்டார்கள். 4 அதோடு, “யாரெல்லாம் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறீர்கள்? உங்களுடைய பெயர்களைச் சொல்லுங்கள்” என்றார்கள். 5 ஆனால், யூத ஜனங்களின் பெரியோர்களை* கடவுள் பாதுகாத்துவந்தார்.*+ அதனால், தரியுவுக்குக் கடிதம் எழுதி அவரிடமிருந்து பதில் வரும்வரை அந்த ஆட்களால் கட்டுமான வேலையை நிறுத்த முடியவில்லை.
6 ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும், அவரோடு சேர்ந்த துணை ஆளுநர்களும் தரியு ராஜாவுக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்கள். 7 அந்தக் கடிதத்தில்,
“தரியு ராஜாவே:
வாழ்த்துக்கள்! 8 ராஜாவே, யூதா மாகாணத்திலுள்ள மகா தேவனின் ஆலயத்தை நாங்கள் போய்ப் பார்த்தோம். பெரிய பெரிய கற்களை உருட்டிவந்து கட்டிடத்தைக் கட்டுகிறார்கள். மரச்சட்டங்களை வைத்து மதில்களைக் கட்டுகிறார்கள். ஜனங்கள் மும்முரமாக வேலை செய்கிறார்கள். அதனால் வேலை மடமடவென்று நடக்கிறது. 9 நாங்கள் அவர்களுடைய பெரியோர்களைப் பார்த்து, ‘இந்த ஆலயத்தையும் இதன் மதில்களையும் கட்டி முடிக்க உங்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?’ என்று கேட்டோம்.+ 10 அந்த வேலையைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் யாரென்று உங்களுக்கு எழுதி அனுப்புவதற்காக அவர்களுடைய பெயர்களைக்கூட கேட்டோம்.
11 அதற்கு அவர்கள், ‘பரலோகத்துக்கும் பூமிக்கும் கடவுளாக இருப்பவரின் ஊழியர்கள் நாங்கள். பல வருஷங்களுக்கு முன்பு இஸ்ரவேலின் மகா ராஜா ஒருவர் கட்டி முடித்த ஆலயத்தை+ இப்போது திரும்பக் கட்டிக்கொண்டிருக்கிறோம். 12 எங்கள் முன்னோர்கள் பரலோகத்தின் கடவுளைக் கோபப்படுத்தினார்கள்.+ அதனால் அவர் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்.+ அந்தக் கல்தேயன் இந்த ஆலயத்தை அழித்து,+ ஜனங்களை பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.+ 13 ஆனால் பாபிலோன் ராஜா கோரேஸ், தன்னுடைய ஆட்சியின் முதலாம் வருஷத்தில் இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு உத்தரவு கொடுத்தார்.+ 14 அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துக்கொண்டு போய் பாபிலோனின் கோயிலில் வைத்த தங்கப் பாத்திரங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும்+ ஆளுநராக+ தான் நியமித்திருந்த சேஸ்பாத்சாரிடம்* ஒப்படைத்தார்.+ 15 அப்போது அவரிடம், “இந்தப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேமிலுள்ள ஆலயத்தில் வையுங்கள். கடவுளுடைய ஆலயம் முன்பிருந்த இடத்திலேயே திரும்பக் கட்டப்பட வேண்டும்” என்றார்.+ 16 அதன்படியே, சேஸ்பாத்சார் எருசலேமுக்கு வந்து கடவுளுடைய ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டார்.+ அன்று ஆரம்பித்த கட்டுமான வேலை இன்றுவரை நடக்கிறது, இன்னும் முடிவடையவில்லை’+ என்று சொன்னார்கள்.
17 அதனால் ராஜாவே, உங்களுக்குச் சரியென்று பட்டால், பாபிலோனின் அரண்மனை கஜானாவை* ஆராயுங்கள். எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ராஜா உத்தரவு கொடுத்தது உண்மைதானா+ என்று பாருங்கள். அதன்பின், உங்கள் தீர்மானத்தைத் தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று எழுதி அனுப்பினார்கள்.
6 அதனால், தரியு ராஜாவின் உத்தரவுப்படி பாபிலோனின் கஜானாக்களில் வைக்கப்பட்டிருந்த பதிவேடுகள் ஆராயப்பட்டன. 2 மேதிய மாகாணத்தில், அக்மேதா நகரிலிருந்த கோட்டையில் ஒரு சுருள் கண்டெடுக்கப்பட்டது. அதில்,
3 “கோரேஸ் ராஜா தனது ஆட்சியின் முதலாம் வருஷத்தில் எருசலேம் ஆலயம் சம்பந்தமாகக் கொடுத்த உத்தரவு இதுதான்:+ ‘ஆலயத்தை முன்பிருந்த இடத்தில் திரும்பக் கட்டி, அங்கு பலிகளைச் செலுத்த வேண்டும். அதன் அஸ்திவாரங்களைப் பழுதுபார்க்க வேண்டும். அதன் உயரம் 60 முழமாகவும்,* அகலம் 60 முழமாகவும் இருக்க வேண்டும்.+ 4 பெரிய கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று வரிசைகளிலும், மரங்களை+ ஒரு வரிசையிலும் வைத்துக் கட்ட வேண்டும். அதற்கான செலவுகள் ராஜாவின் கஜானாவிலிருந்து தரப்படும்.+ 5 அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமில் உள்ள கடவுளுடைய ஆலயத்திலிருந்து பாபிலோனுக்கு எடுத்துவந்த தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும்+ திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். எருசலேமிலுள்ள கடவுளுடைய ஆலயத்தில் அவை இருந்த இடத்திலேயே வைக்கப்பட வேண்டும்.’+
6 அதனால், ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயுக்கும், சேத்தார்-பொஸ்னாயுக்கும், உங்களோடு சேர்ந்த துணை ஆளுநர்களுக்கும்+ நான் இப்போது கொடுக்கும் கட்டளை என்னவென்றால், யூதர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். 7 கடவுளுடைய ஆலய வேலையைத் தடுக்காதீர்கள். யூதர்களின் ஆளுநரும் பெரியோர்களும்* அந்த ஆலயத்தை முன்பிருந்த இடத்தில் திரும்பக் கட்டுவார்கள். 8 அந்தக் கட்டுமான வேலைக்காக யூத ஜனங்களின் பெரியோர்களுக்கு நீங்கள் உதவ வேண்டுமென்று ஆணையிடுகிறேன். அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் வேலையைத் தொடர்ந்து செய்வதற்காக+ அரசு கஜானாவிலிருந்து,+ முக்கியமாக ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வசூலிக்கப்படுகிற வரியிலிருந்து, உடனடியாக அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். 9 தேவைப்படுகிற மற்ற எல்லாவற்றையும்கூட கொடுக்க வேண்டும். அதாவது, எருசலேமிலுள்ள குருமார்கள் சொல்கிறபடியே பரலோகத்தின் கடவுளுக்குத் தகன பலி செலுத்த இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் கடாக்கள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள்+ ஆகியவற்றையும், கோதுமையையும்,+ உப்பையும்,+ திராட்சமதுவையும்,+ எண்ணெயையும்+ ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். 10 அப்போதுதான், அவர்களால் பரலோகத்தின் கடவுளுக்குப் பிரியமான பலிகளைத் தவறாமல் செலுத்தி, ராஜாவும் அவருடைய மகன்களும் நீடூழி வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்ய முடியும்.+ 11 இந்த ஆணையை யார் மீறினாலும் சரி, அவனுடைய வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் உருவி எடுக்கப்பட்டு, அதன்மீதே அவன் தொங்கவிடப்படுவான். என்னுடைய உத்தரவை மீறிய குற்றத்துக்காக அவன் வீடு பொதுக் கழிப்பிடமாக* மாற்றப்படும். 12 ராஜாக்களிலோ ஜனங்களிலோ யாராவது இந்த ஆணையை மீறி எருசலேம் ஆலயத்தை அழிக்க நினைத்தால், அங்கு தன்னுடைய பெயரை நிலைநாட்டியிருக்கிற கடவுள்+ அவனை அழிக்கட்டும்! தரியுவாகிய நான் இந்த உத்தரவைக் கொடுக்கிறேன், இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று எழுதப்பட்டிருந்தது.
13 ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர் தத்னாயும், சேத்தார்-பொஸ்னாயும்,+ அவர்களோடு சேர்ந்தவர்களும் தரியு ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் உடனடியாகச் செய்தார்கள். 14 ஆகாயும்+ இத்தோவின் பேரன் சகரியாவும்+ தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்டு உற்சாகம் அடைந்த யூத ஜனங்களின் பெரியோர்கள், கட்டுமான வேலையில் முழு வீச்சில் ஈடுபட்டார்கள்.+ இஸ்ரவேலின் கடவுளுடைய கட்டளைப்படியும்+ கோரேஸ், தரியு, பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா ஆகியவர்களின் ஆணைப்படியும்+ ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். 15 இப்படி, தரியு ராஜா ஆட்சி செய்த ஆறாம் வருஷம், ஆதார்* மாதம், மூன்றாம் நாளில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
16 பின்பு, இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும்+ சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த மற்றவர்களும் கடவுளுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள். 17 அந்த விழாவின்போது 100 காளைகளையும், 200 செம்மறியாட்டுக் கடாக்களையும், 400 செம்மறியாட்டுக் குட்டிகளையும், பாவப் பரிகார பலியாக இஸ்ரவேல் கோத்திரங்களின் எண்ணிக்கைப்படி 12 வெள்ளாட்டுக் கடாக்களையும் செலுத்தினார்கள்.+ 18 மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளபடியே,+ குருமார்களை வெவ்வேறு தொகுதிகளாகவும் லேவியர்களை வெவ்வேறு பிரிவுகளாகவும் பிரித்து,+ எருசலேமில் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக நியமித்தார்கள்.
19 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள், முதலாம் மாதம் 14-ஆம் நாளில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள்.+ 20 எல்லா குருமார்களும் லேவியர்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு சுத்தமாக இருந்தார்கள்.+ அதனால் அந்தப் பண்டிகை நாளில், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த எல்லாருக்காகவும் மற்ற குருமார்களுக்காகவும் தங்களுக்காகவும் ஆட்டுக்குட்டிகளைப் பலி கொடுத்தார்கள். 21 பின்பு திரும்பி வந்தவர்களும், அவர்களோடு சேர்ந்துகொண்ட எல்லாரும், அதாவது இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்குவதற்காக* வேறு தேசங்களின் அசுத்தமான பழக்கங்களைவிட்டு விலகிய எல்லாரும், அவற்றைச் சாப்பிட்டார்கள்.+ 22 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையையும்+ ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். அவர்களுடைய சந்தோஷத்துக்குக் காரணம் யெகோவாவே. அவர்தான் அவர்களை அசீரிய ராஜாவின் இதயத்தில் இடம்பிடிக்கச் செய்திருந்தார்.+ அதனால், அந்த ராஜா இஸ்ரவேலின் கடவுளாகிய உண்மைக் கடவுளின் ஆலய வேலைக்கு ஆதரவு தந்திருந்தான்.
7 பின்பு, பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில்+ எஸ்றா*+ எருசலேமுக்குத் திரும்பி வந்தார். இவர் செராயாவின் மகன், செராயா+ அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின்+ மகன், 2 இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூப்பின் மகன், 3 அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின்+ மகன், அசரியா மெராயோத்தின் மகன், 4 மெராயோத் செராகியாவின் மகன், செராகியா உசீயின் மகன், உசீ புக்கியின் மகன், 5 புக்கி அபிசுவாவின் மகன், அபிசுவா பினெகாசின்+ மகன், பினெகாஸ் எலெயாசாரின்+ மகன், எலெயாசார் முதன்மை குருவான ஆரோனின்+ மகன். 6 பாபிலோனிலிருந்து வந்த எஸ்றா, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா மோசேயின் மூலம் கொடுத்திருந்த திருச்சட்டத்தில் புலமை பெற்றிருந்தார்;+ அதை நகலெடுப்பவராகவும்* இருந்தார். அவருடைய கடவுளாகிய யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால் அவர் கேட்ட எல்லாவற்றையும் ராஜா கொடுத்தார்.
7 குருமார்கள், லேவியர்கள்,+ பாடகர்கள்,+ வாயிற்காவலர்கள்,+ ஆலயப் பணியாளர்கள்*+ ஆகிய இஸ்ரவேலர்கள் சிலர் அர்தசஷ்டா ராஜா ஆட்சி செய்த ஏழாம் வருஷத்தில் எருசலேமுக்கு வந்தார்கள். 8 அதே வருஷம், ஐந்தாவது மாதம் எஸ்றா எருசலேமுக்கு வந்தார். 9 அவருடைய கடவுள் அவருக்கு உறுதுணையாக இருந்ததால், முதலாம் மாதம் முதலாம் நாளில் பாபிலோனிலிருந்து புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதலாம் நாளில் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்.+ 10 யெகோவாவின் திருச்சட்டத்தைப் படித்துப் பின்பற்றவும்,+ அதிலுள்ள விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இஸ்ரவேலில் கற்றுக்கொடுக்கவும்+ அவர் தன் இதயத்தைத் தயார்படுத்தியிருந்தார்.*
11 இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் ஆராய்வதில் நிபுணராகவும், அவற்றை நகலெடுப்பவராகவும்* இருந்த குருவாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா ராஜா ஒரு கடிதத்தைக் கொடுத்திருந்தார். அதில்,
12 * “ராஜாதி ராஜாவாகிய அர்தசஷ்டா,+ பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும்* குருவுமாகிய எஸ்றாவுக்கு எழுதுவதாவது: உனக்கு வாழ்த்துக்கள்! 13 என் ராஜ்யத்தில் குடியிருக்கிற இஸ்ரவேலர்களிலும் அவர்களுடைய குருமார்களிலும் லேவியர்களிலும் யாரெல்லாம் உன்னுடன் எருசலேமுக்குப் போக விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் போகலாம் என்று உத்தரவு கொடுக்கிறேன்.+ 14 ராஜாவாகிய நானும் என்னுடைய ஏழு ஆலோசகர்களும் உன்னை அனுப்புகிறோம். உன் கையிலுள்ள உன் கடவுளுடைய திருச்சட்டத்தை யூதாவிலும் எருசலேமிலும் வாழ்கிறவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்று நீ போய்ப் பார்க்க வேண்டும். 15 ராஜாவாகிய நானும் என் ஆலோசகர்களும் மனப்பூர்வமாகக் கொடுக்கிற வெள்ளியையும் தங்கத்தையும், எருசலேமில் குடிகொண்டுள்ள இஸ்ரவேலின் கடவுளுக்கு நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும். 16 அதோடு, உன் ஜனங்களும் குருமார்களும் எருசலேமிலுள்ள தங்கள் கடவுளின் ஆலயத்துக்காக மனப்பூர்வமாகத் தருகிற காணிக்கைகளையும், பாபிலோன் மாகாணம் முழுவதும் உனக்குக் கிடைக்கிற வெள்ளியையும் தங்கத்தையும் நீ எடுத்துக்கொண்டு போக வேண்டும்.+ 17 இந்தப் பணத்தை வைத்து காளைகளையும்,+ செம்மறியாட்டுக் கடாக்களையும்,+ செம்மறியாட்டுக் குட்டிகளையும்,+ அவற்றோடு செலுத்த வேண்டிய உணவுக் காணிக்கைகளையும்,+ திராட்சமது காணிக்கைகளையும்+ உடனடியாக வாங்கி, எருசலேமிலுள்ள உன் கடவுளுடைய ஆலயத்தின் பலிபீடத்தில் செலுத்த வேண்டும்.
18 மீதமுள்ள வெள்ளியையும் தங்கத்தையும் என்ன செய்ய வேண்டுமென்று நீயும் உன் சகோதரர்களும் நினைக்கிறீர்களோ அதை உங்கள் கடவுளுடைய விருப்பப்படி* செய்யலாம். 19 உன் கடவுளுடைய ஆலய சேவைக்காகக் கொடுக்கப்படுகிற எல்லா பாத்திரங்களையும் எருசலேமிலுள்ள கடவுளுடைய சன்னிதியில் நீ வைக்க வேண்டும்.+ 20 உன் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான மற்ற எல்லாவற்றையுமே அரசு கஜானாவிலிருந்து+ வாங்கிக் கொடுக்க வேண்டும்.
21 ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தைச் சேர்ந்த பொக்கிஷ அறை அதிகாரிகள் எல்லாருக்கும் அர்தசஷ்டா ராஜாவாகிய நான் உத்தரவிடுவது என்னவென்றால், பரலோகத்தின் கடவுளுடைய திருச்சட்டத்தை நகலெடுப்பவரும்* குருவுமாகிய எஸ்றா+ கேட்கிற எல்லாவற்றையும் நீங்கள் உடனே கொடுக்க வேண்டும். 22 அதிகபட்சமாக 100 தாலந்து* வெள்ளியும், 100 கோர் அளவு* கோதுமையும், 100 ஜாடி* திராட்சமதுவும்,+ 100 ஜாடி எண்ணெயும்+ கொடுக்க வேண்டும், உப்பையும்+ தாராளமாக அள்ளிக் கொடுக்க வேண்டும். 23 பரலோகத்தின் கடவுள் தன்னுடைய ஆலயத்துக்காக என்னவெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை தந்திருக்கிறாரோ+ அதையெல்லாம் பக்திவைராக்கியத்தோடு கொடுக்க வேண்டும். அப்போதுதான், ராஜாவின் குடிமக்களும் அவருடைய மகன்களும் பரலோகத்தின் கடவுளுடைய கடும் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பார்கள்.+ 24 குருமார்கள், லேவியர்கள், இசைக் கலைஞர்கள்,+ வாயிற்காவலர்கள், ஆலயப் பணியாளர்கள்*+ என அந்த ஆலயத்தில் சேவை செய்கிற யார்மேலும் எந்த வரியையும்*+ சுமத்தக் கூடாது.
25 எஸ்றாவே, உன் கடவுள் தந்திருக்கிற ஞானத்தால் நீ நடுவர்களையும் நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும். ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வசிக்கிற எல்லாருக்கும், அதாவது உன் கடவுளுடைய சட்டதிட்டங்களைத் தெரிந்துவைத்திருக்கிற எல்லாருக்கும், அவர்கள் நீதி வழங்க வேண்டும். அந்தச் சட்டதிட்டங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு நீ அவற்றைக் கற்றுத்தர வேண்டும்.+ 26 உன் கடவுளுடைய திருச்சட்டத்துக்கும் ராஜாவின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவர்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டும். அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது அவர்களுக்கு மரண தண்டனையோ சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்க வேண்டும்” என்று எழுதியிருந்தார்.
27 எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தை அழகுபடுத்த ராஜாவின் இதயத்தைத் தூண்டிய நம் முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்குப் புகழ் சேருவதாக!+ 28 ராஜாவுக்கும் அவருடைய ஆலோசகர்களுக்கும்+ உயர் அதிகாரிகளுக்கும் முன்னால் கடவுள் எனக்கு மாறாத அன்பைக் காட்டினார்.+ என் கடவுள் யெகோவா எனக்குத் துணையாக இருந்ததால் நான் தைரியமடைந்து, என்னோடு கூட்டிக்கொண்டு போவதற்காக இஸ்ரவேலர்களில் முக்கியமானவர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
8 அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சிக்காலத்தில்+ பாபிலோனிலிருந்து என்னுடன் வந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடைய வம்சாவளிப் பட்டியல் இதுதான்: 2 பினெகாஸ்+ வம்சத்தில் வந்த கெர்சோம்; இத்தாமார்+ வம்சத்தில் வந்த தானியேல்; தாவீது வம்சத்தில் வந்த அத்தூஸ்; 3 பாரோஷின் பரம்பரையைச் சேர்ந்த செக்கனியாவின் வம்சத்தில் வந்த சகரியா; இவருடன் வந்த ஆண்கள் 150 பேர்; 4 பாகாத்-மோவாப் வம்சத்தில்+ வந்த செராகியாவின் மகன் எலியோவெனாய்; இவருடன் வந்த ஆண்கள் 200 பேர்; 5 சத்தூ வம்சத்தில்+ வந்த யகாசியேலின் மகன் செக்கனியா; இவருடன் வந்த ஆண்கள் 300 பேர்; 6 ஆதின் வம்சத்தில்+ வந்த யோனத்தானின் மகன் எபெத்; இவருடன் வந்த ஆண்கள் 50 பேர்; 7 ஏலாம் வம்சத்தில்+ வந்த அத்தாலியாவின் மகன் யெசாயா; இவருடன் வந்த ஆண்கள் 70 பேர்; 8 செப்பத்தியா வம்சத்தில்+ வந்த மிகாவேலின் மகன் செபதியா; இவருடன் வந்த ஆண்கள் 80 பேர்; 9 யோவாப் வம்சத்தில் வந்த யெகியேலின் மகன் ஒபதியா; இவருடன் வந்த ஆண்கள் 218 பேர்; 10 பானி வம்சத்தில் வந்த யொசிபியாவின் மகன் செலோமித்; இவருடன் வந்த ஆண்கள் 160 பேர்; 11 பெபாய் வம்சத்தில்+ வந்த பெபாயின் மகன் சகரியா; இவருடன் வந்த ஆண்கள் 28 பேர்; 12 அஸ்காத் வம்சத்தில்+ வந்த அக்கத்தானின் மகன் யோகனான்; இவருடன் வந்த ஆண்கள் 110 பேர்; 13 அதோனிகாம் வம்சத்தில்+ கடைசியாக வந்தவர்கள் எலிப்பேலேத், எயியேல், செமாயா; இவர்களுடன் வந்த ஆண்கள் 60 பேர்; 14 பிக்வாய் வம்சத்தில்+ வந்தவர்கள் ஊத்தாய், சபூத்; இவர்களுடன் வந்த ஆண்கள் 70 பேர்.
15 அகாவா+ வழியாக ஓடுகிற ஆற்றுக்குப் பக்கத்தில் இவர்கள் எல்லாரையும் நான் கூடிவரச் செய்தேன். அங்கு மூன்று நாட்கள் கூடாரம் போட்டுத் தங்கினோம். ஆனால், ஜனங்களையும் குருமார்களையும் நான் பார்வையிட்டபோது லேவியர்களில் ஒருவர்கூட அங்கு இல்லை. 16 அதனால், தலைவர்களான எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மெசுல்லாம் ஆகியவர்களையும், போதகர்களான யோயாரிபையும் எல்நாத்தானையும் வரச் சொன்னேன். 17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக* இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன். 18 எங்கள் கடவுள் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததால், விவேகமுள்ளவரான செரெபியாவையும், அவருடைய மகன்களையும், சகோதரர்களையும் அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவர்கள் மொத்தம் 18 பேர். இந்த செரெபியா+ இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் பேரனான மகேலியின்+ வம்சத்தைச் சேர்ந்தவர். 19 அதோடு அஷபியா, மெராரியரான+ யெசாயா, அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மகன்கள் என 20 பேரை அவர்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். 20 தாவீது ராஜாவும் அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவியாக நியமித்திருந்த ஆலயப் பணியாளர்களில்* 220 பேரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள்.
21 பின்பு, கடவுளுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்தவும், பயணத்தின்போது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் பொருள்களையும் பாதுகாக்கும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்கவும் அகாவா ஆற்றுக்குப் பக்கத்தில் எல்லாரையும் விரதமிருக்கச் சொன்னேன். 22 வழியில் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க படைவீரர்களையும் குதிரைவீரர்களையும் துணைக்கு அனுப்பும்படி ராஜாவிடம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. ஏனென்றால், “எங்கள் கடவுள் தன்னைத் தேடி வருகிற எல்லாரையும் காப்பாற்றுவார்.+ ஆனால், தன்னைவிட்டு விலகிப்போகிற எல்லாருக்கும் எதிராகத் தன்னுடைய பலத்தையும் கோபத்தையும் காட்டுவார்”+ என்று அவரிடம் சொல்லியிருந்தோம். 23 அதனால், இதற்காக நாங்கள் விரதமிருந்து, ஜெபம் செய்தோம். அவர் எங்கள் ஜெபத்தைக் கேட்டார்.+
24 பின்பு, முதன்மை குருமார்களாகிய செரெபியா, அஷபியா,+ அவர்களுடைய 10 சகோதரர்கள் என மொத்தம் 12 பேரை நான் தேர்ந்தெடுத்தேன். 25 எங்கள் கடவுளுடைய ஆலயத்துக்காக ராஜாவும் அவருடைய ஆலோசகர்களும் அதிகாரிகளும் அங்கிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டுக் கொடுத்தேன்.+ 26 அவற்றின் விவரம்: 650 தாலந்து* வெள்ளி, 2 தாலந்து மதிப்புள்ள 100 வெள்ளிப் பாத்திரங்கள், 100 தாலந்து தங்கம், 27 1,000 தங்கக் காசுகள்* மதிப்புள்ள 20 சிறிய தங்கக் கிண்ணங்கள், தங்கத்தைப் போல மதிப்புள்ள, பளபளப்பான 2 உயர்தர செம்புப் பாத்திரங்கள்.
28 அதன்பின் நான் அவர்களிடம், “நீங்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவர்கள்,+ இந்தப் பாத்திரங்களும் பரிசுத்தமானவை. இந்த வெள்ளியும் தங்கமும் உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்குச் சொந்த விருப்பத்தோடு கொடுக்கப்பட்ட காணிக்கைகள். 29 எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலய அறைகளில்* முதன்மை குருமார்களிடமும் லேவியர்களிடமும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களிடமும் மிகக் கவனமாக எடைபோட்டுக் கொடுக்கும்வரை இவற்றைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னேன். 30 குருமார்களும் லேவியர்களும், தங்களிடம் எடைபோட்டுக் கொடுக்கப்பட்ட வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எருசலேம் ஆலயத்துக்கு எடுத்துக்கொண்டு போவதற்காக வாங்கிக்கொண்டார்கள்.
31 கடைசியில், முதலாம் மாதம்+ 12-ஆம் நாளில் அகாவா ஆற்றைவிட்டு+ எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுள் எங்களுக்குத் துணையாக இருந்து, வழியில் எதிரிகளிடமிருந்தும் திருடர்களிடமிருந்தும் பாதுகாத்தார். 32 பின்பு, நாங்கள் எருசலேமுக்குப் போய்ச் சேர்ந்து,+ அங்கே மூன்று நாட்கள் தங்கினோம். 33 நான்காம் நாளில், எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டு,+ ஊரியாவின் மகனும் குருவுமாகிய மெரெமோத்திடம்+ ஒப்படைத்தோம். அவரோடு பினெகாசின் மகன் எலெயாசாரும், லேவியர்களான யெசுவாவின் மகன் யோசபத்தும்,+ பின்னூயின்+ மகன் நொவதியாவும் இருந்தார்கள். 34 எல்லாமே எண்ணப்பட்டு, எடைபோடப்பட்டன. எல்லாவற்றின் எடையும் பதிவு செய்யப்பட்டது. 35 சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள் இஸ்ரவேலின் கடவுளுக்குத் தகன பலிகளைச் செலுத்தினார்கள். இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் 12 காளைகளையும்,+ 96 செம்மறியாட்டுக் கடாக்களையும்,+ 77 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும், பாவப் பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக் கடாக்களையும்+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தினார்கள்.+
36 பின்பு, நாங்கள் ராஜாவின் உத்தரவுக் கடிதத்தை+ அதிபதிகளிடமும்* ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநர்களிடமும் கொடுத்தோம். அவர்கள் உண்மைக் கடவுளின் ஜனங்களுக்கும் ஆலயத்துக்கும் ஆதரவு தந்தார்கள்.+
9 பின்பு அதிகாரிகள் என்னிடம் வந்து, “வேறு தேசத்தாரான கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், எபூசியர்கள், அம்மோனியர்கள், மோவாபியர்கள், எகிப்தியர்கள்,+ எமோரியர்கள்+ ஆகியவர்களோடு இஸ்ரவேல் ஜனங்களும் குருமார்களும் லேவியர்களும் ஒட்டி உறவாடுகிறார்கள். அவர்களுடைய அருவருப்பான பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்.+ 2 அவர்களுடைய குடும்பங்களிலிருந்து தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண் எடுக்கிறார்கள்.+ பரிசுத்த சந்ததியாகிய+ இவர்கள் இப்போது வேறு தேசத்தாரோடு ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.+ அதிகாரிகளும் துணை அதிகாரிகளும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்” என்றார்கள்.
3 இதைக் கேட்டதும் நான் என் உடையை* கிழித்து, என் தலையிலிருந்தும் தாடியிலிருந்தும் முடியைப் பிடுங்கி, அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். 4 அப்போது, இஸ்ரவேலின் கடவுளுடைய வார்த்தைகளுக்குப் பயந்த எல்லாரும், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களுடைய பாவங்களின் காரணமாக என்னிடம் கூடிவந்தார்கள். ஆனால், நான் சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும்வரை அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
5 துக்கத்தில் மூழ்கிப்போயிருந்த நான், சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும் நேரம் வந்தபோது, கிழிந்த உடையோடு* மண்டிபோட்டு, என் கடவுளாகிய யெகோவாவிடம் கைகளை விரித்து இப்படிக் கெஞ்சினேன்: 6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+ 7 முன்னோர்களின் காலத்திலிருந்து இன்றுவரை நாங்கள் செய்துவந்திருக்கிற அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.+ அதனால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் குருமார்களும் வேறு தேசத்து ராஜாக்களின் கையில் விடப்பட்டோம், வாளுக்குப் பலியாக்கப்பட்டோம்,+ கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்பட்டோம்,+ கொள்ளையடிக்கப்பட்டோம்,+ அவமானப்படுத்தப்பட்டோம். இன்றுவரை எங்கள் நிலை இதுதான்.+ 8 ஆனால் எங்கள் கடவுளாகிய யெகோவாவே, கொஞ்சக் காலத்துக்கு எங்கள்மேல் கருணை காட்டி, எங்களில் சிலருக்கு விடுதலை தந்திருக்கிறீர்கள். உங்களுடைய பரிசுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள்.+ எங்கள் கடவுளே, அடிமைத்தனத்திலிருந்து கொஞ்சம் விடுதலை கொடுத்து எங்கள் கண்களைப் பிரகாசிக்கச் செய்திருக்கிறீர்கள். 9 எங்கள் கடவுளே, நாங்கள் அடிமைகளாக இருந்தாலும்+ அந்த அடிமைத்தனத்திலேயே நீங்கள் எங்களை விட்டுவிடவில்லை. எங்களுக்குப் புது வாழ்வு கொடுப்பதற்காக பெர்சிய ராஜாக்களுக்குமுன் எங்களுக்கு மாறாத அன்பைக் காட்டினீர்கள்.+ பாழாய்க் கிடக்கிற உங்களுடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகவும்,+ யூதாவிலும் எருசலேமிலும் எங்களுக்கென்று கற்சுவரை* எழுப்புவதற்காகவும் அப்படிச் செய்தீர்கள்.
10 எங்கள் கடவுளே, இனி நாங்கள் என்ன சொல்வது? தீர்க்கதரிசிகள் மூலம் நீங்கள் கொடுத்த கட்டளைகளை நாங்கள் விட்டுவிட்டோமே. 11 நாங்கள் சொந்தமாக்கப்போகிற தேசம், ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை வேறு தேசத்தாரின் அசுத்தத்தினாலும் அருவருப்பான பழக்கங்களினாலும் நிறைந்திருக்கிற தேசம் என்று அவர்கள் மூலம் சொல்லியிருந்தீர்கள்.+ 12 நாங்கள் வலிமையான தேசமாகி, நிலத்தின் விளைச்சலை அனுபவித்து, தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ வேண்டுமென்றால், அவர்களுக்குப் பெண் கொடுக்கவோ அவர்களிடம் பெண் எடுக்கவோ கூடாது+ என்று சொல்லியிருந்தீர்கள். அவர்களுடைய சமாதானத்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும் எதையும் செய்யக் கூடாது+ என்றும் கட்டளை கொடுத்திருந்தீர்கள். ஆனால், நாங்கள் அதைக் கேட்காமல் போய்விட்டோம். 13 நாங்கள் செய்த கெட்ட காரியங்களாலும் பெரிய பாவங்களாலும்தான் எங்களுக்கு இப்படியெல்லாம் நடந்தது. ஆனாலும் எங்கள் கடவுளே, எங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை நீங்கள் கொடுக்கவில்லை.+ எங்களைக் காப்பாற்றி இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறீர்கள்.+ 14 அப்படியிருக்கும்போது, அருவருப்பானதைச் செய்கிற ஜனங்களோடு நாங்கள் சம்பந்தம்* பண்ணி மறுபடியும் உங்களுடைய கட்டளைகளை எப்படி மீற முடியும்?+ அப்படிச் செய்தால், நீங்கள் கோபத்தில் பொங்கியெழுந்து எங்களில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் எல்லாரையும் அடியோடு அழித்துவிட மாட்டீர்களா? 15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+ அதனால்தான், இன்று கொஞ்சம் பேராவது மிஞ்சியிருக்கிறோம். இதோ, நாங்கள் குற்றவாளிகள், உங்கள் முன்னால் நிற்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை.”+
10 இப்படி, எஸ்றா உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து, கண்ணீரோடு ஜெபம் செய்துகொண்டும்,+ பாவங்களை ஒத்துக்கொண்டும் இருந்தார். அப்போது ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என இஸ்ரவேலர்கள் பெருங்கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொண்டு, கதறி அழுதார்கள். 2 பின்பு, ஏலாம் வம்சத்தைச்+ சேர்ந்த யெகியேலின்+ மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து,* கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.+ ஆனாலும், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. 3 இப்போது, நம் கடவுளாகிய யெகோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து,+ அந்தப் பெண்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் அனுப்பிவிடலாம். கடவுளுடைய அறிவுரை அதுதான்; அவருடைய கட்டளைகளுக்குப் பயந்து வாழ்கிறவர்களுடைய+ ஆலோசனையும் அதுதான். நாம் திருச்சட்டம் சொல்கிறபடியே நடக்கலாம். 4 எழுந்திருங்கள், இது உங்கள் கடமை. நாங்கள் உங்களோடு இருப்போம். தைரியமாக நடவடிக்கை எடுங்கள்” என்று சொன்னார்.
5 உடனே எஸ்றா எழுந்து, “இதைச் செய்வதாக உறுதிமொழி கொடுங்கள்” என்று முதன்மை குருமார்களிடமும் லேவியர்களிடமும் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் கேட்டார்.+ அவர்களும் உறுதிமொழி கொடுத்தார்கள். 6 பின்பு, எஸ்றா உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் முன்னாலிருந்து எழுந்து எலியாசிபின் மகனான யெகோனானின் அறைக்குள்* போனார். ஆனாலும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் செய்திருந்த பாவத்தை நினைத்துத் துக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் எஸ்றா எதையும் சாப்பிடவில்லை, தண்ணீர்கூட குடிக்கவில்லை.+
7 அதன்பின், சிறையிருப்பிலிருந்து வந்த எல்லாரும் எருசலேமில் கூடிவர வேண்டுமென்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. 8 மூன்று நாட்களுக்குள் வந்து சேராதவர்களின் பொருள்கள் எல்லாமே பறிமுதல் செய்யப்படும் என்றும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் சபையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகளும் பெரியோர்களும்* முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.+ 9 அதன்படியே யூதா, பென்யமீன் கோத்திரங்களைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரும் மூன்று நாட்களுக்குள் எருசலேமில் ஒன்றுகூடி வந்தார்கள். அதாவது, ஒன்பதாம் மாதம் 20-ஆம் நாளில் கூடி வந்தார்கள். ஜனங்கள் எல்லாரும் என்ன நடக்குமோ என்று பயந்துபோயிருந்தார்கள். மழை வேறு பலமாகப் பெய்துகொண்டிருந்தது. அதனால் அவர்கள் நடுங்கியபடியே, உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
10 குருவான எஸ்றா எழுந்து அவர்களிடம், “நீங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள்.+ இப்படி, இஸ்ரவேல் சுமக்கிற குற்றத்தைக் கூட்டிவிட்டீர்கள். 11 அதனால், உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவிடம் உங்களுடைய பாவத்தை ஒத்துக்கொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள். வேறு தேசத்து ஜனங்களையும் மனைவிகளையும் விட்டுவிலகுங்கள்”+ என்றார். 12 அப்போது சபையார் எல்லாரும் மிகுந்த சத்தமாக, “நீங்கள் சொன்னபடியே செய்கிறோம், இது எங்கள் கடமை. 13 ஆனால் நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம், மழை வேறு பெய்வதால் வெளியிலேயே நின்றுகொண்டிருக்க முடியாது. அதோடு, நாங்கள் மகா பெரிய பாவம் செய்திருப்பதால் ஒன்று, இரண்டு நாட்களில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. 14 அதனால், தயவுசெய்து சபையார் எல்லாருடைய சார்பாகவும் எங்களுடைய அதிகாரிகள் மட்டும் இங்கு இருக்கட்டும்.+ வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருக்கிற எல்லாரும் அவரவர் நகரத்தின் பெரியோர்களுடனும் நீதிபதிகளுடனும் குறிக்கப்பட்ட ஒரு நாளில் வரட்டும். கடவுளுடைய கடும் கோபத்தைத் தணிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யட்டும்” என்றார்கள்.
15 ஆனால் ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். லேவியர்களான மெசுல்லாமும் சபெதாயும்+ அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். 16 ஆனாலும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள், மற்ற எல்லாரும் ஒத்துக்கொண்டபடியே செய்தார்கள். குருவாகிய எஸ்றாவும், பெயர்ப் பட்டியலில் இருந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் பத்தாம் மாதம் முதலாம் நாளில் விசாரணைக்காகக் கூடி வந்தார்கள். 17 வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்த எல்லாரையும் முதலாம் மாதம் முதலாம் நாளுக்குள் விசாரித்து முடித்தார்கள். 18 குருமார்களின் மகன்கள் சிலரும் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்தது+ விசாரணையில் தெரியவந்தது. அவர்களில், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின்+ மகன்களும் சகோதரர்களுமான மாசெயா, எலியேசர், யாரிப், கெதலியா ஆகியவர்கள் இருந்தார்கள். 19 இவர்கள் தங்களுடைய மனைவிகளை அனுப்பிவிடுவதாகவும், தாங்கள் செய்த குற்றத்துக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவைப்+ பலி செலுத்துவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்கள்.
20 இம்மேரின் வம்சத்தார்:+ அனானி, செபதியா; 21 ஆரீமின் வம்சத்தார்:+ மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா; 22 பஸ்கூரின் வம்சத்தார்:+ எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபத், எலியாசா. 23 லேவியர்கள்: யோசபத், சீமேயி, கெலாயா (அதாவது, கேலிதா), பெத்தகியா, யூதா, எலியேசர்; 24 பாடகர்: எலியாசிப்; வாயிற்காவலர்கள்: சல்லூம், தேலெம், ஊரி.
25 இஸ்ரவேலர்களில் பாரோஷின் வம்சத்தார்:+ ரமீயா, யெசியா, மல்கீயா, மியாமின், எலெயாசார், மல்கீயா, பெனாயா; 26 ஏலாமின் வம்சத்தார்:+ மத்தனியா, சகரியா, யெகியேல்,+ அப்தி, எரேமோத், எலியா; 27 சத்தூவின் வம்சத்தார்:+ எலியோனாய், எலியாசிப், மத்தனியா, எரேமோத், சாபாத், அசிசா; 28 பெபாயின் வம்சத்தார்:+ யெகோனான், அனனியா, சாபாய், அத்லாயி; 29 பானியின் வம்சத்தார்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசூப், செயால், எரேமோத்; 30 பாகாத்-மோவாபின் வம்சத்தார்:+ அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூய், மனாசே; 31 ஆரீமின் வம்சத்தார்:+ எலியேசர், இஸியா, மல்கீயா,+ செமாயா, ஷிமியோன், 32 பென்யமீன், மல்லூக், செமரியா; 33 ஆசூமின் வம்சத்தார்:+ மத்னாய், மத்தத்தா, சாபாத், எலிப்பேலேத், எரெமாய், மனாசே, சீமேயி; 34 பானியின் வம்சத்தார்: மாதாய், அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலியாசிப், 37 மத்தனியா, மத்னாய், யாசாய்; 38 பின்னூயின் வம்சத்தார்: சீமேயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாய், சாசாய், ஷாராய், 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப்பு; 43 நேபோ ஊர் ஆண்கள்: எயியேல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா. 44 இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+
அல்லது, “அவர் எருசலேமில் இருக்கிறார்.”
நே.மொ., “அவர்களுடைய கையைப் பலப்படுத்தினார்கள்.”
ஒருவேளை, “செருபாபேலிடம்.”
ஒருவேளை, பாபிலோனையோ யூதாவையோ குறிக்கலாம்.
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”
வே.வா., “திர்ஷாதா.” இது ஒரு மாகாணத்தின் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்ட பெர்சியப் பட்டப்பெயர்.
இவை பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்தவை.
நே.மொ., “தங்க திராக்மாவையும்.” இவை கிரேக்க வேதாகமத்தில் வரும் திராக்மா அல்ல. 8.4 கிராம் எடையுள்ள பெர்சிய நாட்டு தங்க தாரிக் காசுகள் என்று கருதப்படுகிறது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “மினாவையும்.” எபிரெய வேதாகமத்தில் ஒரு மினா என்பது 570 கிராம் எடையுள்ளது. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “நிதனீமியர்களும்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களும்; அர்ப்பணிக்கப்பட்டவர்களும்.”
வே.வா., “வழக்கமான.”
வே.வா., “முதலாம் பிறைக்கான.”
அல்லது, “அரமேயிக் மொழியில் எழுதி, அதன்பின் மொழிபெயர்த்தார்கள்.”
எஸ்றா 4:8 முதல் 6:18 வரையான வசனங்கள் ஆரம்பத்தில் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.
அதாவது, “சூசான்வாசிகள்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
நே.மொ., “தலை வரியையோ கலால் வரியையோ சுங்க வரியையோ.”
வே.வா., “அரண்மனையிலிருந்து சம்பளம் வாங்குவதால்.”
அல்லது, “மொழிபெயர்க்கப்பட்டு என்முன் வாசிக்கப்பட்டது.”
நே.மொ., “தலை வரியையும் கலால் வரியையும் சுங்க வரியையும்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “மூப்பர்களை.”
நே.மொ., “கடவுளுடைய கண் யூத ஜனங்களின் பெரியோர்கள்மேல் இருந்தது.”
ஒருவேளை, “செருபாபேலிடம்.”
வே.வா., “அரசுப் பதிவேடுகளை.”
அதாவது, “சுமார் 87.6 அடியாகவும்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “மூப்பர்களும்.”
அல்லது, “குப்பைமேடாக; சாணம் கொட்டும் இடமாக.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தேடுவதற்காக.”
அர்த்தம், “உதவி.”
வே.வா., “அவர் ஒரு எழுத்தராகவும்.”
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
வே.வா., “தன் இதயத்தில் தீர்மானித்திருந்தார்.”
வே.வா., “ஒரு எழுத்தராகவும்.”
எஸ்றா 7:12 முதல் 7:26 வரையான வசனங்கள் முதன்முதலாக அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.
வே.வா., “திருச்சட்டத்தின் எழுத்தரும்.”
வே.வா., “சித்தத்தின்படி.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “திருச்சட்டத்தின் எழுத்தரும்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு கோர் அளவு என்பது சுமார் 170 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “நிதனீமியர்கள்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்கள்; அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.”
நே.மொ., “தலை வரியையோ கலால் வரியையோ சுங்க வரியையோ.”
வே.வா., “நிதனீமியர்களாக.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களாக; அர்ப்பணிக்கப்பட்டவர்களாக.”
வே.வா., “நிதனீமியர்களில்.” நே.மொ., “கொடுக்கப்பட்டவர்களில்; அர்ப்பணிக்கப்பட்டவர்களில்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “தாரிக்.” இவை பெர்சிய நாட்டு தங்கக் காசுகள். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “ஆலயத்தின் சாப்பாட்டு அறைகளில்.”
அதாவது, “பெர்சிய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மாகாணங்களின் ஆளுநர்களிடமும்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கிலுள்ள.”
வே.வா., “உள்ளங்கியையும் மேலங்கியையும்.”
வே.வா., “உள்ளங்கியோடும் மேலங்கியோடும்.”
வே.வா., “பாதுகாப்புச் சுவரை.”
வே.வா., “கலப்புத் திருமணம்.”
வே.வா., “வீட்டிற்கு அழைத்துவந்து.”
வே.வா., “சாப்பாட்டு அறைக்குள்.”
வே.வா., “மூப்பர்களும்.”